
கரும்பு # இனிப்பா – கசப்பா # இரவினில் ஓட்டம் # MMS 00104
# MMS – 00104
# 26-02-2021
# 7 PM – 10.30 PM
# அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்..
கரும்பு.. இனிப்பா – கசப்பா கட்டுரையின் குரல் ஒலிப்பதிவு இது
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்..)
மூரார்பாது – My Screen
Admin & Team வழங்கும் 104′ வது பதிவு..
1985-90’களின் ஒரு கருத்த இரவு..
மூரார்பாது பள்ளி மைதானம் அருகே மரத்தின் பின்னே ஒளிந்து கொள்ள 15 பேருக்கும் குறையாத ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கும்..
மூரார்பாது ஆற்றுப்பாலம் தாண்டி தூஊஊரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சப் புள்ளியானது ஓராயிரம் நம்பிக்கை விதைக்கும்..
அந்தப் புள்ளியானது சிறுக சிறுக பெரிதாகி கொண்டே வந்து இரண்டாக பிரிகையில் ஏதோ பெரிய வண்டிதான் வருகிறது என்றும் அது நம்ம வண்டியாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையும் இரட்டிப்பாகும்..
“ஏய்.. டிரைவர் பாத்துடபோறான்.. மரத்துல ஒட்டுடா..” என ஒட்டிக்கொள்ள கூட்டம் பரபரத்து தூரத்து வண்டியின் எஞ்சின் சத்தத்தை கூர்ந்து கவணிக்கும்..
ட்ட்டரஅஅ.. ட்ட்டரஅஅ..
“பாய்.. டிராக்டர்தான்..”
“சரியா கேக்கல..”
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
“பாய்.. டிராக்டர்தான் அது..”
“இருடா.. சவுண்டு சரியா கேக்கல..”
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
“பாஆஆய்.. டிராக்டரு வண்டிதான் வர்றது..” என பெருங்குரலில் மன்சூர் கத்த..
“டேய். ஏண்டா கத்துற.. நான் சவுண்டு கேக்கலன்னு சொன்னது வண்டியோட எஞ்சின் சவுண்டுடா..” இது ஷாகுல் பாயாகவோ அல்லது சித்திக் பாயாகவோ இருக்கலாம்..
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ.. என்கிற சப்தம் பெரிதாகி கொண்டே வந்து வெளிச்சம் கூட்டி அருகில் வரும்..
“டேய்.. ஆமாண்டா.. டிராக்டர்தான்.. எப்படிடா கரைக்டா சொன்னே..”
“நாங்கல்லாம் பெரிய புடுங்கிங்க பாய்..” என்ற மன்சூர் சற்றே உஷாராகி கூர்ந்து சந்தத்துடன் வெளிச்சத்தின் அதிர்வுகளையும் கவணிப்பான்..
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
பாய்.. ஒரு நிமிஷம் என்பவனிடம்
“என்னடா.. டேய்.. வண்டி பக்கத்துல வந்துட்டு.. ஓட ரெடியாகனும்.. தயாரா..?” என்கிறபோது..
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
மன்சூர் மீண்டும் வண்டியின் சப்தம் மற்றும் வெளிச்ச அதிர்வலைகளை கூர்த்து கவணித்து சொல்வான்.. “பாய்.. ஓடவும் வேணாம் ஒளியவும் வேனாம்.. அது காலி டிராக்டர்..”
“ஏய்.. விளையாடாத மணி இப்பவே 9’க்கு மேல இருக்கும். இந்த வண்டியயும் விட்டுட்டா அப்புறம் வீட்டுக்கு வெறும் வாயோடதான் போகனும்..”
“அமா பாய், அதுக்கு என்ன பண்ண.. அது காலி டிராக்டர்தான்..” என இன்னொரு சிறுசும் மன்சூருடன் மரத்தின் மறைவிலிருந்து வெளியேறி ரோட்டோரம் நிற்கும்.. அடுத்த ஐந்து – பத்துக்கும் குறைவான விநாடியில் அந்த காலி டிராக்டர் அவர்களை கடக்கும்
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
மறைந்திருந்து டிராக்டரில் தொற்ற ஓடி வந்த கூட்டம் காலி டிராக்டரை கண்டு ஏமாந்து நிற்கும்.. அப்படி ஏமாந்து நிற்கும் கூட்டத்தை பார்க்கும் எந்த கல் நெஞ்சக்காரனும்
“அய்யோ பாவம்..” என பரிதாபப்பட்டு விடுவான்..
“ச்சே.. ரொம்ப நேரம் கழிச்சு வந்த ஒரு வண்டியும் இப்படி ஆயிட்டே” என கூட்டத்தில் பெருங்கவலை தொற்றிக்கொள்ளும்..
“மன்சூரு.. டிராக்டர்னு கண்டு பிடிச்சே சரி.. ஆனா அது காலி டிராக்டர்னு எப்படிடா கண்டு பிடிச்சே..” என்கிறபொழுது மன்சூர் மீண்டும் சொல்வான்
“நாங்கல்லாம் பெரிய புடிங்கிங்க பாய்..”
பதில் கிடைக்காத கோபத்தில் வெறுப்பாகி மன்சூருடன் வெளியேறிய குட்டி பாயினை கூட்டம் முற்ற்கை இடும்..
டேய்.. நீ சொல்லுடா.. அது காலி டிராக்டர்னு உனக்கு எப்படி தெரியும்..
அப்போது அந்தக்குட்டி பயல் சொல்லுவான்..
“நாங்கல்லாம் பெரிய கலெக்டர் பாய்..”
பெரிசுகள் விக்கித்து நிற்க
இந்த பெரிய புடிங்கிகள் மற்றும் கலெக்டர் தம்பிகள் போடும் அடுத்த அதிரடி திட்டம் என்னவாக இருக்கும்..
கருத்த இருட்டிலும் கருத்தாய் வேலை செய்யும் இந்த கூட்டத்தாரின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்.. ஆனால் செயல் திட்டம் பல..
பெரிய புடுங்கிகளும் கலெக்டர் தம்பிகளும் கும்மிருட்டில் அதிரடி வியூகம் அமைத்து ஆவலுடன் காத்திருந்தது டிராக்டர்கள் மற்றும் லாரிகளுக்காகவும் அவைகள் சுமந்துவரும் கரும்புக்காகவும்தான்
கள்ளக் கரும்புகள்..
ஓடுகிற வண்டி ஓட. கூடவே தானும் ஓடவென.. ஓடி ஓடி உழைப்பதெல்லாம் அந்த கரும்புக்காகத்தான்..
தன் காடு நிறைய கரும்பு விளைந்தாலும் ஓடுகிற வண்டியில் உருவுகிற கரும்பு தரும் ஒரு கெத்துதான் சுகம்..
அடிக்கரும்புக்கு சுவை அதிகம் எனில் புடுங்கு கரும்புக்கு மிக மிக சுவை அதிகம்.
எளிதில் கிடைக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது என்பார்களே அது மிக மிக உண்மைதான் போல..
ஓடுகிற வண்டியில் சிரமப்பட்டு ஏறி சரியான வாட்டத்தில் இருக்கும் கரும்பினை இனங்கண்டு பிடிங்கி எடுத்தல் மிக சவாலான காரியமாகும்.
அட இதற்கா இவ்வளவு அளப்பறை என்போருக்கு..
கரும்பு புடுங்க சரியான திட்டமிடல் வேண்டுமய்யா.. அது சாதாரண காரியம் அல்ல..
திட்டம் – 1 : குழிபறிப்பு
கரும்பு ஏற்றிவரும் எல்லா வாகணங்களிலும் போகிற போக்கில் ஏறி இறங்கிவிட முடியாது. சில டிராக்டர்கள் நம்மை அடையாளங்கண்டு கொண்டால் நம் கூட்டத்தார் ஏற முடியாத வேகத்தில் செல்வார்கள். அவர்களின் வேகத்தினை கட்டுப்படுத்த செய்யும் ஏற்பாடுகளில் மிக மிக முக்கியமானது சாலை வளைவுகளில் சிறிதும் அல்லாமல் மிகப்பெரிதும் அல்லாமல் ஒரு தோராயமான அளவில் குழி பறித்து வைத்தலாகும்.
ஏன் இதனை சாலை வளைவுகளில் செய்ய வேண்டும் எனில் சாலையின் வளைவுகளில் பொதுவாக வண்டிகளின் வேகத்தினை சற்றே கட்டுப்படுத்துவார்கள். இது போன்ற வளைவுகளில் சிறிதும் பெரிதுமாக குழி அல்லது பள்ளம் இருக்கும் எனில் வண்டிகள் மிக மிக குறைவான வேகத்தில் இயக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த மிக மிக குறைவான வேகம் வண்டிகளில் தொற்றிக்கொள்ள நம் கூட்டத்தாருக்கு போதுமானதாகும். இப்படியாக குழி பறித்தல் பொதுவாக நமது ஊர் ஆற்றுக்கு வடக்கு பக்க வளைவு சாலையில் செய்யப்பட்டிருக்கும்..அது பல நேரம் வண்டியில் ஏறுமிடமாகவும் சில நேரம் கரும்பு பிடுங்கும் வேட்டைக்கு பின்னர் இறங்குமிடமாகவும் இருக்கும்.
குறிப்பு : தற்போது உள்ள ஆற்றுப்பாலம் ஆலத்தூர் பக்கம் மிக வளைவாகவும் மூரார்பாது பக்கம் வளைவு குறைவாகவும் உள்ளது. முன்பு நமது ஊர் பக்கம் பாலத்தில் இருந்து வரும் சாலையின் வளைவு அதிகமாக இருக்கும். இது போன்ற ஏற்பாடு மூரார்பாது – சங்கராபுரம் செல்லும் சாலையின் முதல் வளைவிலேயே செய்யப்பட்டிருக்கும்.
உதாரணம் – மர்ஹூம் கரீம் வாத்தியார் வீடு அருகே..
இப்படியாக திட்டம் போட்டு குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தால் லாரி போன்ற வாகனங்களில்கூட கரும்பு புடுங்கும் வேட்டை நடக்கும்..
திட்டம் -2 : நியாயமார்கள்
வருகின்ற வண்டியில் எவ்வளவு லோடு ஏற்றி இருக்கிறார்கள் என கவணித்து செயல்படுதல் முக்கியம். சில வண்டிகளில் மிக அதிகமான அளவு கரும்பு லோடு ஏற்றி பதமாக கட்டினை போட்டு இருப்பார்கள். நமக்கு கரும்பு வேண்டும் என எல்லா இடங்களிலும் கரும்பினை புடுங்கிடக்கூடாது. ஒரு கட்டுக்கு மிக சேதாரம் வராமல் குறைவான அளவே கரும்பினை புடுங்க வேண்டும். அப்படி புடுங்காமல் ஒரே இடத்திலிருந்து கட்டு கட்டாக புடுங்கினால் கரும்பின் கட்டுமானம் தளர்ந்துவிடும். வண்டிகள் பயணிக்க பயணிக்க அதன் தளர்வுகள் அதிகமாகி கரும்பு கட்டுகள் எல்லாமே சிதற ஆரம்பித்துவிடும். எனவே, கரும்பு புடுங்குவதில் வண்டியின் லோடு மற்றும் கட்டு கட்டுமானத்தினை கவணித்தில் எடுக்க வேண்டும். சில வண்டிகளில் மிக நன்றாக கட்டி இருப்பார்கள். மேலும் லோடும் குறைவாக இருக்கும். அங்கு நாம் இது போன்ற விதிகளை கவணத்தில் எடுக்க வேண்டி இருக்காது.
திட்டம் – 3 : நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே..
மேலே உள்ள காரணங்களினால் கூட்டத்தார் எல்லோரும் வண்டியில் ஏறி கரும்பு புடுங்க அனுமதி இல்லை. ஒரு சிலரை நீ அதுக்கு சரிப்படடு வரமாட்டே என நம் சங்கம் வண்டியில் ஏறி கடும்பு புடுங்க அனுமதிக்காது.
விதி -1 : கரும்பு புடுங்க ஏறும் நம் சகோதரனுக்கு நல்ல ஓட்டத்திறன் உள்ள வண்டியிலும் ஏறும் – இறங்கும் லாவகம் தெரிந்திருக்க வேண்டும். ( அப்துல் ரஷித் ஆகிய நான் ஒரு முறை லாரியில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் ஆற்றுப்பாலம்வரை சென்று காயத்துடன் இறங்கினேன். அது நம் சங்கத்தாருக்கு ஏற்ப்பட்ட பின்னடைவு மற்றும் ஏற்புடையதல்ல.. அன்றைய தினம் நம் சங்கத்திற்கு கருப்பு தினமாகும் )
விதி – 2 : வண்டியின் லோடு மற்றும் கட்டுமாணம் அறிந்து கரும்பினை சரியான இடத்திலிருந்து உருவ வேண்டும். வண்டியின் மூலையிலிருந்து பிடுங்கக்கூடாது. அப்படி உருவினால் நாம் முன்பே பார்த்தது போல கரும்பு லோடு முழுவதும் சரிந்திட வாய்ப்புள்ளது. ( ஆலத்தூர் – அரியபெருமானூர் மற்றும் மேலேரி – சேமபாளையம் அருகே நம் கைங்காரியத்தால் லோடு சரிந்து நின்ற வண்டிகளை சில நேரம் பார்க்க நேர்ந்தால் நம் சங்கத்தாருக்கேகூட மனசு பாரமாகிவிடும் )
விதி – 3 : புடுங்கிய கரும்பினை பின்னாடி சேகரிக்கும் ( கலெக்டர்ஸ்) தம்பிகள் மிக எளிதாக சேகரிக்க தோதாக அந்த புடுங்கிய கரும்புகளை சாலையின் ஓரம் உள்ள முள்வேலிகளின் பக்கம் வீசாமலும் சாலையின் நடுவேயும் வீசாமலும் ஒரு குறிப்பிட்ட ஓரத்தில் வீச வேண்டும். அது போல தான் புடிங்கிய கரும்புகளின் தோராய எண்ணிக்கை குறித்து கணக்கு வைத்திருக்க வேண்டும். உதாரணமாக 15-20 &25 என்கிற எண்ணிக்கை. ( தான் அதிகமாக புடுங்கி வீசியதாக புடுங்கிகளுக்கும் இவ்வளதான் பாய் புடிங்கி வீசினார் அதனை ஒன்று விடாமல் கலெக்ட் செய்து வந்துவிட்டோம் என கலெக்டர் தம்பிகளுக்கும் இடையே கரும்புகளின் எண்ணிக்கையில் கூட குறைவு என பஞ்சாயத்து வரும். எனவேதான் புடுங்கிகள் தான் புடுங்கிய கரும்புகளின் எண்ணிக்கையில் கவணமாக இருக்க வேண்டும் )
திட்டம் – 4 : உண்ணுங்கள் – பருகுங்கள் ஆனால், வீன் விரையம் செய்யாதீர்கள்
அல்லாஹ் த ஆலா தன் திருமறையில் மிகத்தெளிவாக மேற் கண்ட வாக்கியத்தைக் கூறியுள்ளான். அதன்படி இன்று கூடி இருக்கும் நம் சகோதரர்களின் கூட்டத்தினையும் அதிலுள்ள கரும்பார்வலர்களின் எண்ணத்திற்கு ஏற்ப கரும்பினை புடுங்குதல் வேண்டும். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கும் கரும்பு வேட்டை அடுத்த இரண்டு நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான கரும்பினை சேகரிப்பதுவரைக்கும் இருக்கும். எவ்வளவு பேர் இருக்கிறோம் என்றும் நமது கூட்டத்தாருக்கு தேவையான அளவுக்கு மட்டுமே புடுங்குவார்கள்.. தேவைக்கு அதிகமான அளவில் கரும்பினை புடுங்கி பின்னர் அதனை வீனாக்கும் செயல் 90% நடக்காது.
தானாய் சேர்ந்த கூட்டம்..
இவ்வாறான கரும்பு புடுங்கும் நிகழ்வுக்கு பேசி வைத்து ஆள் சேர்ப்பதில்லை.. தானாய் சேரும் கூட்டமிது. எந்த தொடர்பு சாதனங்களும் இல்லாத காலத்தில் நேரத்தே ஒன்று கூடி வண்டிகளில் புடுங்கிய கரும்பினை சேகரித்து எல்லோரும் கூடும் இடம் பெரும்பாலும் மூரார்பாது அரசு உயர் நிலைப் பள்ளிக்கூடம்தான் ( 1990’க்குப் பிறகுதான் நமது பள்ளி மேல் நிலைப்பள்ளி ஆனது)
இரவு 12 – 1 மணிவரை இன்றோடு கரும்பு இனமே அழிந்துவிடும் என அல்லாஹ்விடமிருந்து அதிகார பூர்வ தகவல் வந்ததுபோல “இன்றே கரும்புகள் கடைசி” என்கிற எண்ணத்தில் அப்படி தின்று தீர்ப்பார்கள். சொந்த வாயில் தான் வைத்துக்கொள்ளும் சூனியம் என்பதே அப்போது தெரியாது. வாய் வலிக்க வலிக்க சிறிது இடைவேளை விட்டும் விடாமலும் கரும்பு சாப்பிடும் பணி தொடரும்.. கடைசிக் கரும்பு தீரும்வரை உள்ளூர் கதை முதல் உலகக்கதைவரை பேசி பேசி மகிழ்வார்கள். மரு நாள் எதுவும் பேசவோ சாப்பிடவோ முடியாமல் சிலர் வாய் வெந்து – புண்ணாகி மவுனம் காப்பதெல்லாம் சோக வரலாறாகும்..
கலெக்டர்ஸ் என்கிற மாஸ்டர்ஸ்..
இப்படியாக நீளும் இந்த நிகழ்வில் சிறுவர்களும் இருப்பார்கள். இவர்களின் வேலையானது வண்டிகளில் ஏறி தன் அண்ணன்மார்கள் புடுங்கிப்போடும் கரும்பினை சிந்தாமல் சிதறாமல் பொறுக்கி கூட்டத்தார்கள் கூடும் ரகசிய பாசறைக்கு கொண்டு வந்து சேர்ப்பதுதான். சில சிறுசுகள் வண்டியில் ஏற முயற்ச்சி செய்யும்போது பெரிசுகள் கவணமுடன் அவர்களை “தம்பி.. அப்படியெல்லாம் நீ ஏறப்படாது..” என தடுத்து பாதுகாப்பார்கள். அப்படியும் சில கலெக்டர்ஸ் பெரிசுகள் ஏமாறும் ஒரு பொழுதில் லாரிகளில்கூட ஏறி கரும்பினை வெற்றிக்கரமாக புடுங்கி மீண்டும் ஒடும் வண்டியிலிருந்து லாவகமாக எந்த அடியும் படாமல் இறங்கி தான் வயதுக்கு வந்துவிட்டதாகவும் தன்னாலும் ஓடும் வண்டியில் ஏறி பிறகு இறங்கவும் முடியும் என நிரூபிப்பார்கள்..
நம்மை கண்டால் கரும்பு லாரிகள் – கரும்பு டிராக்டர்கள் மட்டுமல்ல கரும்புத்தோட்டமே பயப்பட்டது அந்தக்காலம்.. இப்போது உள்ள தலைமுறைகள் ” Do you mean Sugar Cane Uncle..? I Know .. its long cylinder shaped one. From it we can get Sugar and icecream know uncle ? என்கிறார்கள்..
பாவம் பிழைத்து விட்டு போகட்டும் இக்கால இளம் தலைமுறை குருத்துகளும் நம் கரும்புகளும்..
கரும்பு..
வேளான்மைப் பணப்பயிரில் மிக முக்கியமான மற்றும் மேன்மையான இடம் பிடித்துள்ள பயிர் கரும்பாகும். கரும்பு வேளான்மையில் வேலை அதிகம். தண்ணீரும் நன்செய் நிலமும் இருந்து கரும்பினை விளைவித்து அதற்கு வெட்டு ஆனைப்பெற்று ஆலைக்கு அனுப்பி பணமீட்டுதல் என்பதும் சாதாரன காரியமில்லை. வேளான் செலவு – ஆள் கூலி – வெட்டுக்கூலி – வண்டிக்கூலி – தரகர்கள் கூலி எனக்கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.
சில நேரங்களில் விவசாயிகளுக்கு வெட்டு ஆணை கிடைக்காது . கரும்பினை பருவத்தே வெட்டி எடுக்க வேண்டும். நாட்கள் தவறினால் கரும்பு முற்றி பூ வைத்து சக்கையாகிவிடும். அப்படி சக்கையான கரும்பானாது எடைக்குறைவாகவே இருக்கும். எடை எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு நட்டமாகிவிடும். சில நேரங்களில் நாம் கண்டிருப்போம். தான் வளர்த்த கரும்பினை தோட்டமாக ஒரு விவசாயி தீயிட்டு கொளுத்துவதை கண்டிருப்போம்.. காரணம் வெட்டுக்கூலி – வண்டிக்கூலிக்குகூட அந்த நேரத்தில் கரும்பு விலைப் போகாததாக இருக்கும்.
கரும்பு நமக்கு எல்லா நேரங்களிலும் இனிக்கிறது. ஆனால் .. விளைவித்த விவசாயிக்கு சில நேரங்களில் கசப்பாகிவிடுகிறது.
“சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்..” என கரும்பினைப் பற்றி பேசும் குறள்கூட
“குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்” என்கிறது.
கரும்பு வேளான்மை : இனிப்பா – கசப்பா என ஏன் ஒரு வேளான் குடிமகனிடமே கேட்டு விளக்கம் பெறக்கூடாது என நினைத்த போது நினைவில் வந்தவன்
திரு.சசிக்குமார் கந்தசாமி..
எனது நண்பன் மற்றும் வேளான்குடிமகன்.. நான் எப்போது மூரார்பாது சென்றாலும் இவன் வேளான் காட்டுக்கு சென்று வர தவறுவதில்லை. இரவினில் அங்கே தங்க எனது மகள் ராஷிதா மிகவும் விருப்படுவார். அலாதியான இன்பம் வேளான் காட்டில் தங்குவது. அவனிடம் ஒரு சில கேள்விகளை நம் மூரார்பாது – My Screen தளம் சார்பாக முன் வைத்தேன்..
விவசாயம் எப்படி உள்ளது சசி..?
இந்த வருடம் நல்ல மழை என்பதால் கிணற்றில் நல்ல நீர் பிடிப்பு உள்ளது. விவசாயம் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம்..
மிக்க மகிழ்ச்சி.. குறிப்பாக கரும்பு விவசாயம் பற்றி சில விபரங்கள்..? என்றபோது நாம் என்ன கேட்க விரும்புகிறோம் என புரிந்து கொண்ட சசிகுமார்..
கரும்பு விவசாயம் செய்ய நிலத்தை நாலு சால் ( உழவு ) ஓட்டனும், பிறகு மண்ணை தளத்தி மாவு போல கனு வைக்க குவிக்கற வேலை உண்டு. அதற்கு பிறகு பாரு ஓட்டி விதைக்கரனை ஊன்றி தண்ணீர் பாச்சனும். மூனாம் நாள் முதல் மருந்து அடித்தல் மிக முக்கியம். 15 ஆவது நாளிலிருந்து 20 நாளுக்குள் முளைப்பு வரும். 30 ஆவது நாளில் மருந்து அடிக்க வேண்டும். இது கனு நன்றாக கிளர்ச்சி பெற்று வளர உதவிடும். இதுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2000 முதல்.ரூ.2500 வரை செலவாகும்.. ஒவ்வொரு குருத்துக்கும் தனித்தனியா மருந்து ஊற்ற வேண்டும்..” என்றான்.
“அவ்வளவுதானா.. அதுக்கு பிறகு தண்ணீர் மட்டும் விட்டால் போதுமா ..?” என்றபோது..
ஏய்.. நீ வேற.. இன்னும் நிறைய வேலை இருக்கு. 50 வது நாளில் களை எடுக்கனும்.60வது நாளில் பாரு எடுத்து மருந்து அடிக்கனும்.. அதேபோல 90 வது நாள் , 120வது நாள் , 180 வது நாள்வரை உரம் அடிக்க வேண்டும். வெட்டு ஆர்டர் 300வது நாள் ஆரம்பத்தில் வாங்கி 330 வது நாளிலிருந்து – 350 வது நாளுக்குள்ள லோடு ஏத்தி ஆலைக்கு அனுப்பனும்”
என்றவனிடம்..
அப்படி வெட்டு ஆர்டர் கிடைக்காம போனதுண்டா..? எனக்கேட்டபோது.. “அதெல்லாம் கிடைத்து விடும்.. அது போன்ற வேலைகளை முடிக்க நம்ம அழகாபுரம் சாதிக் ( மூரார்பாது பெண்கள் கல்லூரி மதரசா நிர்வாகி ) இருக்காப்படில்ல.. அதனால அதெல்லாம் பிரசச்சனை இல்லை” என்றான்…
“சரி.. ஒரு ஏக்கருக்கு எவ்வளவு கரும்பு விளையும்..?அதுக்கான வேளான் கூலி மற்றும் செலவு வரவு போன்ற விபரங்கள் என்ன சசி..?
“ஒரு ஏக்கர் கரும்புக்கு நன்றாக நாம் தண்ணீர் விட்டால் 40 டன் கரும்பு விளையும். விதை கரும்பு 1000 புல் 400 ரூபாய் என 18,000 விதை கரும்பும் அதை நட 1000 புல்லுக்கு 250 ரூபாயும் ஆகும். ஒரு டன் நன்றாக விளைந்த கரும்பு தற்போது ரூ.2712/- என போகிறது. ஒரு ஏக்கருக்கு ஏர் ஓட்டி – விதை கரும்பு நட்டு – பல முறை மருந்தடித்து – களை எடுத்து – ஒரு டன் வெட்டுக்கூலிக்கு ரூ 1000 என தந்து வண்டி கூலிக்கு தனி செலவு என எல்லாம் செய்தால் நமக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம்வரை செலவாகும். நமக்கு கிடைப்பது ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் எனில் அதில் செலவு 40-50 ஆயிரம் போக ஒரு வருட கால பயிரில் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை கிடைக்கும்..’ என்றான்..
கரும்புத் தோட்டத்துக்கு தண்ணீர் விடுவது எதன் கணக்கில் சசி..? என்றபோது..
கரும்புக்கு தண்ணீர்தான் முக்கியம் ரஷித்.. சரளை மண் போன்ற நம்ம பக்கத்து மண்ணுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறையும் கரு மண்னுக்கு 12 – 13 நாட்களுக்கு ஒரு முறை நன்றாக தண்ணீர் தேங்கும் அளவுக்கு விடனும்..” என்றான் நண்பன் சசி.
கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிரதான சக்கரை ஆலைகள் என்ன..? எனக்கேட்டபோது..
“மூங்கில் துறைப்பட்டு சக்கரை ஆலை, கள்ளக்குறிச்சி கூட்டுறவு கோமுகி சக்கரை ஆலை, செவலை கூட்டுறவு கரும்பு ஆலை, தரனி கரும்பு கூட்டறவு ஆலை போன்றவை நமது வட்டாரத்தில் பிரபலமானவை. மேலும் இன்னும் பல தனியார் ஆலைகள் உள்ளது..”
சரி சசி., 1980-90’களில் கரும்பு விவசாயம் மற்றும்.விலை எப்படி இருந்தது – இப்போது கரும்பு விவசாயம் மற்றும் விலை எப்படி உள்ளது..?
அப்போது கரும்புன்னு இல்லை எல்லா விவசாயமும்.இனித்தது. இப்போது கரும்புன்னு இல்லாமல் எல்லா விவசாயமும் கசக்குது என்ற நண்பன்.. “இதை நான் ஏன் சொல்றேன்னா.. 1990’ல எங்க அப்பாரு விவசாயம் பன்றப்ப ஒரு டன் கரும்பு 1250’க்கு போச்சு. அப்போ வெட்டுகூலி ஒரு டன்னுக்கு 250 ரூபாதான் . இப்போ 21 வருடத்துக்கு பிறகு ஒரு டன் ரூ.2712/- தான் ரஷித்.. செலவு – வண்டி வாடகை எல்லாம் 4 , 5 மடங்கு ஏறிப்போச்சு.. ஆனா கரும்புக்கான ஆதார விலை பெருசா ஏறலை.. வேளான் பொருட்களை விளைவிக்கற எங்களைவிட இடையில் அதை வாங்கி விற்கும் வியாபாரிகள் வளமாக நலமாக இருக்கிறார்கள்..” என முடித்துக்கொண்டான் நண்பன் சசிக்குமார்.
உண்மைதான்..
ஏன் அப்படி என ஏகப்பட்ட கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது.
சசிகுமாருடன் விடைபெற்று மூரார்பாது – கள்ளக்குறிச்சி பிரதான சாலையை அழகாபுரம் கூட்டு சாலையில் அடைந்த போது
தூரத்தில் ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ.. என்கிற ஓசையுடன் ஒரு டிராக்டர் வருகின்ற ஓசை கேட்டது.
சுற்றும் முற்றும் பார்த்தபோது மரத்தின் நிழலில் இரண்டு இளைஞர்கள் கையில் வைத்திருந்த கைபேசியில் மூழ்கி இருந்தார்கள். அவர்களால் வருவது கரும்பு டிராக்டராக இருந்தலும் அதற்கு ஒன்றும் ஆபத்தில்லை என உணர்ந்தேன்..
வருவது கரும்பு டிராக்டராக இருந்தால் ஒடி சென்று புடுங்காமல் கைகாட்டி டிராக்டரை நிறித்தி ஒரு கட்டு கரும்பு வாங்கி சாப்பிட வேண்டும் என காத்திருந்தேன்..
சப்தம் பெரிதாகி கொண்டே வந்தது..
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
மூரார்பாது – My Screen
Admin & Team
அஸ்ஸலாமு அலைக்கும்.. முரார்பாளையத்தில் இருந்து மொய்தீன்.. இன்றைய பதிவு இனிப்பானது. ஆம் இனிப்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது சர்க்கரை அதன் தாய் கரும்பு , கரும்பு தின்னாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. என் இளமை பருவத்திலும். நாங்களும் டிராக்டரில் கரும்பு புடுங்கி தின்ற அனுபவம் அதிகம் அப்ப எனக்கு கலெக்ட்டர் பணி தான் ஒதுக்கப்பட்டிருந்தது. எங்கள் டிம் யார் என்றால் நம்ம கரீம் பாய் தம்பி வஹாப், ஆட்டோ இஸ்மாயில், லாடகார அக்பர், ட N. பட்டி முகமது அலி, நபிசா மகன் முபாரக் , எங்க சிச்சா பசங்க ஜெய்லாப்தீன், அப்துல் / சாகுல், ஆஜராங்க அலாவுதீன் இதில் வஹாப், அக்பர், ஜெய்லாப்தீன், இஸ்மாயில் இவர்கள் தான் டிராக்டரில் ஏறி கரும்பு பிடிங்கி போடுவார்கள், நாங்கள் டிராக்டரில் மட்டும் தான் , லாரியில் ஏற மாட்டோம் லாரி வேகமாக போவதால் அதனை தவிர்த்து விடுவோம். டிராக்டரின் பின் பக்கத்தில் கரும்பை புடுங்க முடியாது சிறு சிறு கரும் பாக உடைத்து தான் எடுக்க முடியும், முழு சவாலம் பக்கவாட்டில் டிராக்டரின் ஆங்கில்களுக்கிடையில் சுலபமாக புடுங்கி விடலாம். புடுங்கிய கரும்பை அனைவரும் தின்று தீர்த்து விட்டு மறுநாள் சாப்பிட்டால் வாய் எல்லாம் ஒரே எரிச்சலாக இருக்கும் ஆனாலும் அன்று இரவே மீண்டும் கரும்பு வேட்டைக்கு சென்று விடுவோம் . அந்த காலத்தில் ஒரு முழு கரும்பு சவாலம் என்று சொல்வார்கள் கரும்பை கடித்து தோலை உரித்தால் கரும்பின் கடைசி வரை தோல் உரியும், ஒவ்வொரு புல்லும் ஒரு முழம் அளவுக்கு இருக்கும் அதை உரித்து சாப்பிடும் போது அதன் இனிப்பு சுவை அடி தொண்டை வரை இனிக்கும் , கரும்பென்று சொன்னாலே இனிக்கும் என்பார்கள். அதை சுவைத்து மென்று தின்னும் சுகம் இப்போது நினைத்தாலும் இனிக்கிறது, ஆனால் தற்போது இருக்கும் கரும்பை கடிக்கவே முடிவதில்லை, அவ்வளவு கெட்டியாக கலர் கலராக உள்ளது.
JANAB .M.M.FAROOQUE # அருமையான கட்டுரை. மிக நீளமாக இருந்தாலும் படிக்க படிக்க சுவாரஸ்யமான விசயங்கள் நிறைய இருக்கிறது.
JANAB MOIDEEN KAMALUDEEN # அந்த காலத்தில் ஒரு முழு கரும்பு சவாலம் என்று சொல்வார்கள் கரும்பை கடித்து தோலை உரித்தால் கரும்பின் கடைசி வரை தோல் உரியும், ஒவ்வொரு புல்லும் ஒரு முழம் அளவுக்கு இருக்கும் அதை உரித்து சாப்பிடும் போது அதன் இனிப்பு சுவை அடி தொண்டை வரை இனிக்கும் , கரும்பென்று சொன்னாலே இனிக்கும் என்பார்கள். அதை சுவைத்து மென்று தின்னும் சுகம் இப்போது நினைத்தாலும் இனிக்கிறது, ஆனால் தற்போது இருக்கும் கரும்பை கடிக்கவே முடிவதில்லை, அவ்வளவு கெட்டியாக கலர் கலராக உள்ளது.
ஜனாப்.மு.மு.பாருக் # அருமையான கட்டுரை. மிக நீளமாக இருந்தாலும் படிக்க படிக்க சுவாரஸ்யமான விசயங்கள் நிறைய இருக்கிறது.
அப்துல் ரஹிம் ஹபிபுல்லாஹ் # இன்றைய தலைப்புகள் அத்துனையும் அருமை.
இனிப்பா கசப்பா
இரவினில் ஓட்டம்
கலைக்டர் தம்பிகள்
டிராக்டரில் கரும்பு வேட்டை நடத்தியது நாம் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அதுபோன்ற அனுபவங்கள் இந்த தலைமுறைக்கு அவ்வளவாக கிடைக்காது. நாம் ஓடிச்சென்று புடுங்க ஒரு லாவகம் வேண்டும். கட்டுரை அருமை
அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்..
கரும்பு.. அதை பிடித்தவர்கள் எத்துனை வயதானாலும் அதை விரும்பி சாப்பிடுவார்கள். வெல்லம் காய்ச்சுகின்ற இடத்தில் கிடைக்கும் கரும்பு சாறு மிக சுத்தமானதாகவும் – சுவையானதாகவும் இருக்கும்.
மூங்கில் துறைப்பட்டு கரும்பு ஆலை நமது ஏரியாவில் மிக பிரபலம்.
நமக்கு கரும்பு இனித்தாலும் விவசாயிகளுக்கு அது சில நேரங்களில் கசப்பாக இருக்கிறது
அப்துல் கரீம் :
இக்கட்டுரை குறித்து ரஷித் குரல் ஒலி கேட்டவுடன் எனக்கு 1985 மூரார்பாதுக்கு சென்று வந்த அனுபவம் .
இரவில் சுல்தான் வீதியில் ஏறும் நான் , என் அண்ணன், கனி,மொய்தீன், ஜாபர் , பெரியசாமி மெலேரியில் போய் இறங்கி எங்கள் காட்டுக்கொட்டாயில் வைத்து சாப்பிடுவோம். மறக்க இயலா அனுபவம் அது
அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்..
கரீம் பாய்.. மிக உண்மை . ஜாபர் மற்றும் மன்சூர் இரண்டு பேரும் கரும்பு புடுங்குவதில் கில்லாடிகள். மிக ஆபத்தான முறையில் இரண்டு சக்கரங்கள் இடையே தொங்கி கொண்டு கரும்பு புடுங்குவார்கள்.
இரவு முழுக்க பள்ளிகளில் வைத்து சாப்பிடுவதுண்டு. வாய் வெந்து மறு நாள் மிக அவதிப்பட்டாலும் மீண்டும் அன்றைய தினம் கரும்பு வேட்டை தொடரும்.
ஜனாப். கலிபுல்லா .
மிக தெளிவான அழகான கட்டுரை.
கரும்பில் நம் ஊர் பசங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும். நான் 5 வது படிக்கும்போது ஆற்றில் தண்ணீர் குடிக்க டிராக்டர் டிரைவர் வண்டியை நிறுத்த நானும் ரவூப்பும் கரும்பு பிடுங்க உடன் ஓடினோம். வண்டி டிரைவர் வண்டியை ஓட்ட ஆரம்பித்த உடன் ரவூப் கொஞ்ச தூரம் ஓடி வந்து பின் நின்று விட்டான். நான் வண்டியை பிடித்தபடி ஓடி தடுமாறி கீழே விழுந்து விட்டேன். இன்னும் நிறைய மறக்க இயலா நினைவுகள் உள்ளன
கலிபுல்லா பாய்..
டிரைவர் நாம் கரும்பு புடுங்குவது தெரிந்தால் வண்டியை மிக வேகமாக ஓட்டுவார். நாம் வண்டியின் வேகம் கணித்து இறங்க முயற்சிக்க வேண்டும்.. அதில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்..
அப்துல் ரஹிம் ஹபிபுல்லாஹ்
காட்டில் பசியுடன் அலையும் தருனங்களில் கரும்பு நமக்கு தரும் மிகப்பெரும் தெம்பு..
மொய்தீன் படே பாய்..
மிக நல்ல கட்டுரை. கரும்பு சாப்பிட்டது – ஓடியது – கீழே விழுந்து எழுத்தது எல்லாம் நினைவில் நிற்கிறது. கரீம் சொல்வது போல மணக்காடு வரை செல்வோம்.
ஜனாப்.S.முகமது ரஃபி
பெரும்பாலும் வண்டிங்க மூங்கில் துறைப்பட்டுதான் போகும். மூரார்பாளையம் வந்தவுடனே டிரைவருங்க உஷாராகிடுவாங்க. கூடவே வரும் ஆளு கீழே இறங்கி நாம் யாரும் வண்டியில ஏறாதவாறு பார்த்துபாங்க..
ஜனாப்.S.முகமது ரஃபி – இன்றைய கட்டுரை மிக அருமையான கட்டுரை. இதில் கூறப்படுள்ள விசயங்களை நம்மில் நிறைய பேர் அனுபவித்து இருப்போம். நிறைய விபரங்களை அப்துல் ரஹிம் , அப்துல் ரஷித் , கலிபுல்லா பாய் மற்றும் கரீம் சொல்லிவிட்டார்கள்.
இதில் கவணிக்க வெண்டிய விசயம் என்னவெனில் நாம் கஸ்டப்பட்டு கரும்பு புடுங்கி போட்டுவிட்டு இறங்கினால் ஒரு பயலும் இருக்க மாட்டாங்க. நாம் புடுங்கி போட்ட கரும்பினை எடுத்துட்டு கானாமல் போய் இருப்பாங்க..
ஜனாப்.யூசுப் பாவாசா..
மிக அருமையான தலைப்பு. நான் கலைக்டர் கலைக்டர் என்றவுடன் நம்ம ஊர்ல யார்டா கலைக்டர் என குழம்பி விட்டேன்.
நல்ல தலைப்புகள் ரஷித்..
கரும்பு புடுங்குவது மஹ்ரீப்புக்கு பின்னர்தான் ஆரம்பிக்கும். மணக்காடு வரை புடுங்கி போடுவொம். தூக்க முடியாமல் தூக்கி வரும் கரும்புகளை இரவு முழுக்க வைத்து சாப்பிடுவோம்.
னாப்.ஷகுல் ஹமீது – ஈரோட்டிலிருந்து..
ம்ம்ம்ம்.. மிக அருமையான மலரும் நினைவுகள். பத்தாவது படிக்கும் வரை கரும்பு புடுங்கி சாப்பிட்டது என்றும் இன்றும் நினைவில் உள்ளது. அது ஒரு சீஸன் என்றே சொல்லலாம்..
கட்டுரையில் சொல்ல மறந்த ஒரு விஷயம் என்னவெனில் வண்டியின் இரு பக்கமும் முள் கட்டி கொண்டு போவார்கள்.
ஜனாப்.சிராஜூதீன் ரஹமதுல்லா – மிக ஆராவரமான தலைப்பு. நம்ம ஊர் மக்கள் செய்யும் குறும்பு மிக அதிகம்.
நிறைய பேர் இதில் ஈடுபடுவதுண்டு.
என் தம்பி நூர் முஹமத் , முகது ரஃ பி போன்றவர்கள் வண்டியில் ஏறி கரும்பு புடிங்கி போடுவார்கள் .
ஜனாப்.மு.மு.பாருக்.. நடந்த விசயங்களை நடந்தது போல எழுதி உள்ளார்.
நாங்களும் கரும்பு புடுங்கிங்கதான். வண்டியில் ஏறிவிடுவோம் ஆனால் இறங்க முடியாது.
கரும்பு புடுங்குதல் என்பது வீர விளையாட்டு போல இருக்கும்..
ஜனாப் அல்லாப்பிச்சை ரஹிமான்ஷா # ரஷித் பாய்.. தலைப்பு செம தலைப்பு..
வடக்கு தெருவில் கரும்பு ஆபிஸ் இருக்கும். நிறைய பிடுங்கின கரும்பை வீட்டின் கூரை முற்றத்தில் அடுக்கி வைப்போம்.
இப்போ கரும்பு சாறு நமக்கு ரோட்டோரத்தில் எளிதில் கிடைக்கிறது. இருப்பினும் கரும்பு புடுங்கி சாப்பிட்ட நினைவுகள் மறக்க இயலாது.
மிக அருமையான நினைவுத் தூண்டல்.
ஜனாப்.பஷீர் அஹ்மத் ஆலிம் :
பொருள் இனிப்பானது ஆனால் மார்க்கதின்படி நாம் செய்த செயல் மிகவும் கசப்பானது. சகோதரர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
அடித்தவர் பொருளை நாம் எடுக்கக்கூடாது என சொல்லி வளர்ரகிறோம். ஏதோ அறியா பருவத்தில் நாம் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிபானாக.
எங்கள் காலத்தில் டிராக்டர் லாரி கரும்பு எல்லாம் கிடையாது. மாட்டு வண்டியில் வெள்ளம் காய்ச்சும் இடத்திற்கு கொண்டு செல்லும் போது கேட்டு வாங்கி சாப்பிடுவோம்.
கட்டுரை மிக அருமை ரஷித் பாய்
ஜனாப் அலாவுதீன் அப்துல் சத்தார் : பாய் ஏதோ சின்ன வயதில் தெரியாமல் செய்து விட்டோம். ஜாலியாக செய்ததை அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.
திருட்டு கிழங்கு முதல் கரும்புவரை நம் அனுபவங்கள் மறக்க இயலாது .
ஜனாப்.பஷீர் அஹ்மத் ஆலிம் :
பாய்ங்களே.. சரிதான் அல்லாஹ் நம் சிறு வயதில் நாம் உணராமல் செய்யும் தவறுகளை மன்னிப்பவனாகவே உள்ளான்.
சரி, இந்த ஆலைப்பால் எத்துனை பேர் குடிச்சி இருக்கீங்க.. மூரார்பாளைத்து ஆளுங்க நாம குடிக்காமலா இருப்போம்..
அப்புறம், இந்த ஆலைப்பாலில் செய்யும் சாதம் மிக அருமையாக இருக்கும். கூடவே, முந்திரி, பாதாம், ஏலக்காய் அப்புறம் இஞ்சி போட்டு செய்தால் ஆஹா.. என்னா ருசி ..
ஜனாப்.ரியாஸ் அஹ்மத் : ஆலிம் ஜி.. ஆலப்பால் சோறு நான் இப்பதான் கேள்விப்படுகிறேன். செய்முறை சொல்ல சொல்ல இது பொங்கல் போல இருக்குது. சும்மா மணமணக்குது.
அருமை
ஜனாப்.குலாம் முஹம்மது காஜி.
இன்னிக்கு கரும்பை ஆட்டை போடுறது பத்தின டாபிக்.
நாம் முதன் முதலில் கரும்பு சாறு சாப்பிட்டபோது பக்கத்துல இருந்தவருகிட்டே இதுல சக்கரை அதிகம் போட்டுட்டாங்கன்னு சொன்னதும் சிரிச்சிட்ட்டாங்க..
ஜனாப்.பஷீர் அஹ்மத் ஆலிம் :
கரும்பு பத்தின இன்னொரு விபரம் சொல்றேன் கேளுங்க..
சுகர் இருக்குற ஆளுங்ககூட கரும்பை அதிகம்.சாப்பிடலாம்னு சொல்றாங்க. அது ஜீரன சக்தியையும் அதிகரிக்குமாம்..
Excellent Anna👌👌👌👍👍👍
ஜனாப்.தாஜூதீன் காதர் மொய்தீன்
கட்டுரை மிக மிக இனிப்பாக இருந்தது.
தலைப்பு ” கன்னா கரும்பு தின்ன ஆசையா” என்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கொக்கி முள் பற்றி தகவல் இல்லை. கரும்பு வண்டி வராத விரக்தியில் கட்டை பிடுங்கி போட்ட அனுபவும் ஞாபகம் வருகிறது.
ஆக மொத்தம் இந்த கட்டுரை அந்த நாட்களுக்கு என்னை இட்டுச்சென்றது. எழுதிய முறை மிக அருமை. பாராட்டுகள்.
But yeah Many thanks for taking the time to chat about this, I consider strongly about it and in actuality like learning more on this topic. If possible, as you gain expertise, would you mind updating your website with more information? It is extremely helpful for me.