
சுருக்குப் பையும் – உண்டியல் காசும் (Wings to Save Money) # MMS -000202
04-01-2026
MMS – 000201
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+ 91 98840 78865
உண்டியல் ( எ ) சுருக்குப் பை ( Wings to Save Money )
1980’களில் மூரார்பாது..
வெளிநாடுகளில் வாழ்வோர் தன் குடும்பத்தாருக்கு பணம் அனுப்ப பெரும் முயற்சி எடுக்க வேண்டும் என்பார்கள்.
உண்டியல் என்கிற முறையில் வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் அல்லது குழுமத்திடம் அந்த நாட்டு பணமாக கட்டி தன் வீட்டு முகவரி மற்றும் உரிய நபர் யார் என குறிப்பு அளித்து வீட்டுக்கு கடிதம் எழுதிவிடுவார்கள்.
அன்புள்ள மனைவிக்கு / அம்மாவுக்கு அல்லது அப்பாவுக்கு ..
நான் நம் ஊர் பணத்திற்கு ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பி வைக்கிறேன். வீட்டிற்கு விசாரித்து வருவார்கள். பெற்றுக் கொண்டவுடன் எனக்கு கடிதம் எழுதவும் என தகவல் இருக்கும்.
பெரும்பாலும் அந்த கடிதம் வருவதற்குள் அப்படியான பணம் வந்து இருக்கும்..
அழுக்கு லுங்கியில் ஊர் வரும் நபர் டீ கடை பக்கம் ஒதுங்கி..
“ஸலாமலைக்கும்… ஒரு தகவலாக வந்து இருக்கேன். இங்க ஹபிபுல்லா, கோசாலி ஹபிபுல்லா பாய் வீடு எங்க இருக்குங்க.. பள்ளிவாசல் பக்கம் கருவாட்டு வீதின்னு சொன்னாங்க..” என்பார்.
நம் ஊர் முண்டாசு பாய் உசாராகி விடுவார்.. பதில் தருவருதற்கு பதிலாக ஏகப்பட்ட கேள்விகளை அள்ளி வீசுவார்..
“பாய் நம்ம பாய்தான் . ஆனா, நீங்க யாரு ? என்ன விசயமா அவரை தேடுறீங்க..? மாப்ள வீடுங்களா.. இல்ல வேற ஏதும் கொடுக்கல் வாங்கல் விலங்கமா ..?” என இழுப்பார்..
“இல்லீங்க பாய், பாய் நமக்கு சவுதியில பழக்கம்.. ஒரு எட்டு வீட்ட பாத்துட்டு வாங்கன்னு சொன்னாரு.. அதான், வேறு எதுவும் இல்ல.. நல்ல விசயம்தான்..” என்பார் வந்தவர்.
“ஓ.. அப்படியா.. நீங்க நம்ம ஹபிபுல்லாவோட அங்க ஒண்ணா வேலயில இருக்கீங்களா..? சவுதியில எங்க..?” என அடுத்த கேள்வியை வீசுவார் நம்ம முண்டாசு பாய் டீயை உர்ர்ர்ர்ரென ஒரு உறிஞ்சு உறிஞ்சி..
“அங்க.. தமாம்.. தமாம்..”
“தமாம்னா தமாமேவா..? இல்ல பக்கமா..”
“ம்ம்.. அல்கோபருங்க பாய்..”
சரி.. நீங்க ஒரு டீயை போடுங்க.. நான் இந்தா இப்ப வரேன்.. என விசாரித்து வந்தவரை இன்னோரு பாயின் கன்காணிப்பில் விட்டு விட்டு அபிபுல்லா பாயின் டீ கடையிலிருந்து நேராக பள்ளிவாசல் வீதி வந்து குறுக்கு சந்தில் தெற்கே நுழைந்து கருவாட்டு வீதி அடைந்து பின் கிழக்காக நடந்து கோசாலி ஹபிபுல்லா பாய் என்கிற எங்கள் வீட்டினை அடைவார் அந்த முண்டாசு பாய்..
வீட்டில் காலை வேளையில் அம்மாவும், தாத்தியும் தோட்டத்தில் மாட்டு தொழுவத்தில் வேலையில் இருப்பார்கள். வீதியில் அடைக்கப்பட்டிருந்தன் முள் வேலியின் படலை நீக்கி உள்ளே வரும் முண்டாசு பாய் தாத்தி ரம்ஜான் பீவி‘ யை கானக்கிடைத்ததும்..
“ஸலாமலைக்கும்.. பாகுன்னாரு பூ..” என இவ்வாறாக ஒருவர் வந்து விசாரிப்பதாக கூறி அவரை அனுப்பலாமா..? என சம்மதம் கேட்பார்.
பதில் ஸலாம் கூறி.. என் அம்மா அம்மாஜியிடம் கலந்தபின்..
“ம்ம்.. வர சொல்லுங்க.. நாம என்ன கடனா வாங்கி இருக்கம்.. வரட்டுமே.. இன்ஷா அல்லாஹ்..” என என் தாத்தி ரம்ஜான் பீ சம்மதம் தருவார்.
பின் அந்த முண்டாசு பாய் மேற்கே போய் வடக்கு சந்து எடுத்து பள்ளிவாசல் கடந்து பின் கிழக்காக சாலை தாண்டி அபிபுல்லா பாய் டீக்கடை அடைவார்.
தேடி வந்தவரிடம்..
“ம்ம்ம்.. ஆங் அங்க ஒரு தெரு போகுதா..? அதான் கருவாட்டு வீதி.. அந்த முள்ளு செடி தாண்டின உடனே வரும் மொத கூர வீடுதான் நம்ம கோசாலி ஹபிபுல்லா வீடு..”
என்றவர்
“ம்ம்ம்.. இருங்க நானும் வரேன் என உடன் வருவதாக கூற தேடி வந்தவர் வேண்டாம் என மறுத்து தனி ஆளாக வீடு அடைவார்.
வந்தவர் “ஸலாமலைக்கும” சொல்லி.. “ஹபிபுல்லா பாய் வீடுங்களா..?” என்பவர் “தப்பா நினைக்காதீங்கமா.. பாய் பேர் முன்னாடி இன்னொரு பேர் சொல்றாங்களே.. அந்த பேர்..?” என கேள்வி கேட்டு நிற்பார்.
என் தாத்தியம்மாவோ.. “இன்னொரு பேரா..? கோசாலி ஹபிபுல்லான்னு சொல்லி இருப்பாங்க..” எனறவர் “ஆமா, நீங்க..?” என கேள்வி கேட்க..
“ஒண்ணுமில்ல.. கொஞ்சம் ரூபா இங்க தர சொல்லிருங்காங்க.. அதான்..” என்பவர் ஒரு துண்டு சீட்டு எடுத்து
“பெரியம்மா.. உங்க பேரு..” என கேட்க
“ரம்ஜான் பீ.. நான் ஹபிபுல்லாவோட அம்மா..” என்பார் தாத்தி..
“அப்புறம்.. வீட்டுல அவங்க பேரு..” என கேட்கையில்
“என் மருமவ பேரு அம்மாஜி..” என சொல்லி வைப்பார்.
“நல்லது.. ஏன்னா இப்படிதான் போன மாசம் லக்கினாயக்கன்பட்டியில ஹூசைன்னு சொன்னாங்கன்னு வீடு மாறி ரூவா கொடுத்துட்டேன். ரெண்டு ஹூசைனாம்.. ரெண்டு பேரும் சவுதியில வேல பாக்குறாங்க… அதுக்குதான்..” என்றவர்.. பணம் கொடுத்து 5000/- ரூபா பணம் சரியாக இருக்கிறதா என எண்ணிப்பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வீட்டில் தர முற்படும் டீ அல்லது கூழ் வேண்டாம் என சொல்லி.. “தப்பா நினைக்காதீங்க.. இப்படி வர்ற இடத்துல வாய் எதுவும் நனைக்க மாட்டோம்..” எனக்கூறி இப்படியாக பணம் வாங்கி கொண்டதாக ஒரு கடிதம் எழுதிவிட சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார்.
உண்டியல்
உண்டியல் என்றால் நமக்கு தெரிந்தது நாம் சிறு வயதில் காசு சேர்க்கும் உண்டியல்தான்.
சிறுக சிறுக சேர்க்கும் உண்டியல் காசுகள் ஒரு நாளில் 100 / 200 ரூபாய் அளவிற்கு வளர்ந்து நிற்கும். அந்த உண்டியல் நமக்கு சேமிக்கும் பழக்கத்தை நமக்குள் விதைக்கும்.
உண்டியல் என்கிற வார்த்தை வெளி நாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடையேயும் மிக பிரபலம்.
வங்கிகள் அவ்வளவாக பெருக்காத அந்த 1980’களில் தான் உழைத்து ஈட்டிய பனத்தினை தன் குடும்பத்தாருக்கு அனுப்ப மிக சில வழிகளே இருக்குமாம்.
- Demand Draft என்கிற கேட்பு வரைவோலை
இதற்கு தான் இருக்கும் நாட்டின் வங்கியில் தான் யாருக்கு பணம் அனுப்ப விரும்பிகிறாரோ அவரது பெயரில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். மேலும், அந்த நபருக்கு வங்கியில் கணக்கு என் இருப்பதும் கட்டாயம். அப்படியாக பெறப்படும் வரைவோலையினை வங்கி கணக்கில் செலுத்தினால் அது செலுத்தபட்டவரின் வங்கி கணக்கில் வரைவோலைக்கான பணமதிப்பினை பெற குறைந்தது 7 வேலை நாட்கள் எடுக்கும் என்பார்கள். - உண்டியல்
தான் வேலை செய்யும் நாட்டில் தான் தரும் அந்த நாட்டின் பணத்திற்கு ஈடான ரூபாய் மதிப்பிலான பணத்தை நம் வீட்டில் அல்லது நாம் கூறும் நபரிடம் செலுத்தி விடுவார்கள். இதுவே அக்காலத்தில் மிக அதிக புழக்கத்தில் இருந்த முறை என்கிறார்கள்.
இன்னும் சில முறைகளாக ஈடான பணத்திற்கு தங்கம்கூட தரப்பட்டதாக கூறப்படுகிறது.
சில நேரங்களில் மருமகள்களிடம் பணத்தட்டுப்பாடு வருகையில் குடும்பத்தின் தேவையினை பூர்த்தி செய்ய அவிழ்க்கப்படுவதே சுருக்குப் பை ஆகும்.
சுருக்கு பை..!
கிராமத்து பாட்டிகளின் சேவிங் பேங்க். அங்குதான் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி சில்லறை நாணயங்களை சேமித்து வைக்கிறார்கள். அதனால்தான் பாட்டிகள் அதை பாதுகாப்பாக தங்களின் இடுப்பு பகுதியில் பத்திரப்படுத்துகின்றனர்.
இடுப்பின் ஓரம் இருக்கும் இடம் தெரியாமல் தொங்கும் சுருக்கு பைகளின் உள்ளே என்னென்ன இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
ஒவ்வொரு சுருக்கு பைகளுக்குள்ளும் பொருளோ.. பணமோ..- இருக்கிறதோ.. இல்லையோ.. ஆனால், நிச்சயம் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது.
கி மு., கி பி யை போல் சுருக்குபைக்கும் காலம் பிரிக்கலாம். ஆம், சுருக்கு பைகள் ஒவ்வொன்றும் நாளைய நாட்களை நமக்கு ஞாபகபடுத்திக் கொண்டே இருக்கின்றன. சுருக்குபைகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த கயிறுமுனைகளில் முக்கோண டிசைன்கள் வேறு கொடுத்து தைத்து இருப்பார்கள்..
அதே பையில் ஒர கயிற்றின் நுனியில் பல்குத்தும் குச்சிகள் இரும்பில் இருக்கும், அதில் ஒன்றை பல்குத்தி பல்லிடுக்கில் இருக்கும் வெற்றிலைபாக்கு எடுக்கவும், எல் போல் ஷேப்பில் இருப்பதை காது குடையவும் பாட்டிகள் வைத்து இருப்பார்கள்.
கால் கவுலி வெற்றிலை, இரண்டு ரூபாய்க்கு பாக்கு என வாங்கி சுருக்குபையை கர்பவதி போல் வைத்து இருப்பது பாட்டிகளின் தலையாய கடமை. கிராமபுரங்களில் திருவிழாக்கள் என்றால் பாட்டிகள் உடனே புது புது சுருக்கு பைகளை வாங்க புரபட்டுவிடுவார்கள். அதுதான் அவர்களுக்கான தீபாவளி போல.
இரண்டு மூன்று பைகளை வாங்கி வைத்துகொண்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு டப்பா, புகையிலை, சில்லரைகாசு என இஷ்ட்டத்துக்கு அழுத்தி வைத்து விடுவார்கள்.
சுருக்கு பை கிழிந்தபிறகு இன்னொன்றை மாற்றி அழகு பார்ப்பது பாட்டிகளின் வழக்கம். எதாகிலும் ஒரு பாட்டி சுருக்குப்பையை ஒரு பட்டு நூல் இழைய வாங்கிவிட்டால் அவரின் சந்தோஷத்தை அளவிட்டு சொல்லவே முடியாது. சில பாட்டிகளால் இந்த சுருக்கு பையை கூட வாங்க முடியாமல் போகும் வறுமையும் உண்டு.
ஓர பற்களில் ஒட்டியிருக்கும் வெற்றிலை காரையை சுண்டு விரலால் தட்டி எடுத்தபடி உட்கார்ந்திருக்கும் சமயமெல்லாம் அதை தடவி தடவி பார்ப்பாள் பாட்டி. அத்தனை விருப்பம் சுருக்குபை மேல் அவளுக்கு.
அதுவும் கண்போன பின்பு சில பாட்டிகள் சுருக்குப்பையை திறந்து அதிலிருக்கும் பொருளை தொட்டு பார்த்து எடுத்து தருவது ஆச்சர்யம்தான். சில வயதான தாத்தாக்களும் சுருக்கு பை வைத்திருப்பார்கள். அதிகமானவர்களுக்கு இந்த சுருக்கு பைகள் ஒரு பாதுகாப்பு பெட்டகமாகவே பயன்படுகின்றன கிராமங்களில்.
பாட்டிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத பொருள்களில் சுருக்கு பை கண்டிப்பாய் இடம்பெறும். ரோட்டோரங்களில் வியாபாரம் செய்யும் எண்ணற்ற பாட்டிகளுக்கு தங்களின் இடுப்பில் தொங்கி கொண்டிருக்கும் சுருக்குபைதான் கஜானாவாகின்றன.
இதற்க்கெல்லாம் ஒரு படி மேலே போய் வசதி படைத்த வீட்டு பாட்டிகள் தங்களின் நகைகளை கூட சுருக்குபையிலேயே வைத்துக்கொள்வதுண்டு.
சிறு பிள்ளைகள் தெருவில் வந்து போகும் ஐஸ் வண்டியை பார்த்து ஐஸ் கேட்டு அழும் போதெல்லாம் பாட்டியின் சுருக்குபைதான் அவர்களின் அழுகையை தேற்றி ஆறுதல் படுத்த ஆதரவாய் வந்து நிற்கும் அவ்வபோது அதனுள் பதுங்கியிருக்கும் சில்லறையோடு.
மேலும், தன் பேர பிள்ளைகளுக்காக வாங்கி வைத்திருந்த தின் பண்டங்களை… பாட்டி அங்குதான் பாதுகாத்து வைத்திருந்து கொடுக்கிறாள். எண்ணற்ற குடும்பங்களில் வயதானவர்களை யாரும் மதிப்பதேயில்லை.
சில நேரங்களில் அவர்கள் மனம் புண்படும் படியாக பேசிவிடுவதும் நடக்கிறது. இந்த சமயங்களில் எல்லாம் மனம் வருந்துகிற பாட்டிகளுக்கு ஆதரவாய் இருப்பது அவர்களின் சுருக்குப்பை மட்டும்தான்.
அந்த கூன்விழுந்த உடம்பின் இடுப்பு பகுதியில் தொங்கி கொண்டிருக்கும் சுருக்குப்பையும் பாட்டியை போலத்தான் சில நேரம் சுருக்கமாகவே தென்படும் நம் கண்களுக்கு.
இப்படி வயதானவர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத பினைப்பாகிப் போன சுருக்கு பையின் காலம் முடிந்து போய்விட்டது என்றே கூறலாம். இருப்பினும், இன்றைய சூழலுக்கு ஏற்ப விதவிதமான நிறத்தில் புதிய வகையிலான “pouch ” கள் பயன்படுத்தபடுகின்றன. இவையெல்லாம் சுருக்கு பையின் மறு வடிவம் என்றே சொல்லலாம்.
இருப்பினும் பேருந்து நடத்துனரிடம் சில்லறை கொடுப்பதற்காக ஒவ்வொரு முறையும் ஜாக்கெட்டில் கையை விட்டு பர்சை எடுத்து சில்லறை கொடுக்கும் கலாச்சாரத்துக்கு சுருக்கு பை எவ்வளவோ தேவலாம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாட்டியின் சுருக்கு பைகளில் இருந்துதான் திருடும் பழக்கம் சிலருக்கு ஆரம்பம் ஆகிறது. நம்முடைய ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படியான ஏதாவொரு சம்பவம் நிச்சயம் நடந்திருக்கும்.
இப்போதும் சுருக்குபையை பற்றி நினைக்கும போதெல்லாம் அந்த ஆள் காட்டி விரலில் அப்பியிருக்கும் சுண்ணாம்போடு வெற்றிலை பாக்கை குதப்பியபடி பாட்டி ஒரு முறை நம் கண் முன்னே வருவது உண்மைதான்.
சேமிப்பு
உண்டியல் மூலம் சேமிக்க பழகிய நமக்கு இன்று சேமிப்பு என்கிற பழக்கமே அந்நியமாகி போனது. அப்படியான சேமிப்பினை மீண்டும் பல் பொருள் அங்காடிகள் நமக்கு கற்றுத்தருகின்றன.
மூரார்பாது – விங்ஸ் மார்ட்

கடந்த 01-01-2026’ல் மூரார்பாதுவில் WINGS MART பல்பொருள் அங்காடி திறப்புவிழா கண்டது. விங்ஸ் மார்ட் என்கிற பல் பொருள் அங்காடியின் மூல நோக்கமே அடக்கவிலையிலிருந்து தள்ளுபடி விலையில் பொருட்கள் என்பதாக இருந்தது.
என்ன பெரிய தள்ளுபடி கொடுத்து விடப்போகிறார்கள் இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் தள்ளுபடி இருக்கலாம். 1000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 20 ரூபாயோ அல்லது 30 ரூபாயோ கழிவு கிடைக்கும். அதில் என்ன பெரிய சேமிப்பு வந்துவிட போகிறது என நினைத்தேன்.
Billing Counter’ல் அதிக நேரம் இருக்க வேண்டிய சூழலில் மூரார்பாது மஹல்லாவின் அத்துனை சமுதாய மக்களில் பெரும்பாலானவர்கள் ஒரு பொருளின் அதிக பட்ச சில்லறை விலை (MRP ) என்ன..? இங்கு என்ன விலை என ஒப்பீடு செய்து தமக்கான செமிப்பு என்ன என கணக்கீடு செய்கிறார்கள்.
உதாரணமாக ஒரு பாட்டியம்மா
“நான் அங்க இந்த எண்ணையை 60 ரூபாய்க்கு வாங்குவேன். நீ 50 ரூபாய்னு சொல்றியே.. இங்க விலை அதிகமா..? கம்மியா..” என்கிற தன் பாட்டிக்கு.. “அய்யோ பாட்டி.. அங்க விலை அதிகம், இங்க கம்மி பாட்டி” என பாடம் எடுத்தார் ஒரு பேத்தி.
அப்போதுதான் எனக்கும் புரிந்தது. 2 – 3 சதவிகிதம் அல்லாமல் 2+ சதவிகிதம் முதல் 10 + சதவிகிதம்வரை பொருட்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன. இது அவர்களுக்கான மறைமுக சேமிப்பாகிறது.
அதே நேரம், ஒரு பாபி கூறுகையில்
“நான் சும்மா பாத்துட்டு போலம்னாதான் வந்தேன். இங்கே எவ்ளோ பொருளுங்க இருக்கு. அதான் ஒண்ணு ரெண்டுனு எனக்கு தேவையான பொருட்கள் எல்லாத்தையும் வாங்கிட்டேன்” என செலவாளியாகவும் சாமானிய மக்களை மாற்றிவிடுகின்றன இது போன்ற பல் பொருள் அங்காடிகள்.
ஒரு பெரும் செல்வந்தர் ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளே நுழைந்தார். அவரை கண்டு கொண்ட பல் பொருள் அங்காடியின் நிர்வாகம் அவரை மிக சிறப்பாக வரவேற்றனர். அங்காடி முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு ஏதும் வாங்காமல் வெறுமனே வெளியேறினார்.
பாதி தூரம் போன நிலையில் அவரது கார் ஓட்டுனர் தாள முடியாது அவரிடம் கேட்டார்.
“அய்யா.. ஒரு விசயம் கேட்கலாம்ங்களா.. தப்பா நினைக்கக்கூடாது” என்றார்
“அட.. கேளு.. ஏன் தயங்குறே..” என்றார் செல்வந்தர்.
“நீங்க இந்த மாதிரி கடைக்கெல்லாம் பொனதில்ல.. இன்னிக்கு போனீங்க.. பெரிசா வாங்கிட்டு வருவீங்கன்னு பார்த்தா, வெறுங்கையோட எதுவும் வாங்காம வந்தீங்களே.. அப்புறம் எதுக்குய்யா அந்த கடைக்கு போனீங்க..?” என கேட்க..
*அது ஒண்ணுமில்ல.. எனக்கு தேவை இல்லாத பொருட்கள் எவ்வளவு இருக்குன்னு பாத்துட்டு வந்தேன். அவ்வளவுதான்..” என முடித்துகொண்டார்.
மேலே கூறப்பட்டவை ஒரு நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் அதில் ஒரு உண்மையும் இருக்கவே செய்கிறது.
சர்க்கரை முதல் உப்புவரை..
சாக்பீஸ் முதல் பேனாவரை..
அரிசி முதல் பருப்புவரை..
பால் முதல் பண்ணீர்வரை.. வீட்டிற்கு தேவையான அடிப்படை உணவு மற்றும் பொருட்கள் என அத்துனையையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு
என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என பார்த்து பார்த்து கொள்முதல் செய்து வைத்திருந்தாலும் வருவான் ஒருவன்
“பாய்.. கோலி குண்டு இருக்கா..?” என கேட்டு “என்னா பாய்.. ஒத்த ரூபா கோலி குண்டு இல்லியா.. அப்புறம் என்ன பெரிய்ய்ய கடை..? பெரிய்ய்ய திறப்பு விழா” என கோலி குண்டு கிடைக்காமல் பல் பொருள் அங்காடியை வார்த்தைகளால் சிதைத்துவிட்டு போவான்.
பல் பொருள் அங்காடிகள், சில நேரம் வாடிக்கயாளர்களால் உரிமையாளர்களையும் வார்த்தைகளால் சிதைத்து விடும்.
மூரார்பாது – My Screen
Admin & Team








Leave a reply