
ஜனாப்.P.M.சுலைமான் # MMS 00076
💐 வெள்ளிக்கிழமை – 16-10-2020 / 7 PM – 10PM – MMS : 0076 ✍️
✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
முதல் தகவல் : ஜனாப்.ராஜ் முகமது அப்துல் சலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)
ஜனாப்.P.M.சுலைமான்
1932’ஆம் வருடம் ஜூலை மாதம் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாப் பாண்டாபடி மதார்ஷா சாயபு மற்றும் பாத்திமா பீவி தம்பதிகளுக்கு உடையானச்சி என்ற ஊரில் 10வது பிள்ளையாக பிறந்தவர் ஜனாப் P M சுலைமான் அவர்கள். இவருக்கு மூன்று வயது இருக்கும்பொழுது இவரது தாயார் பாத்திமா பீவி வபாத் ஆகிவிட்டார்கள்.
இவரின் குடும்பம் மும்பை சென்று விட்டதால் இவர் தன் பள்ளிப்படிப்பை தன் அத்தை வீடான அந்தி அப்துல் சலாம் அவர்களின் வீட்டில் தங்கி படித்து வந்தார். அவர் அந்த காலத்தில் எட்டாம் வகுப்பு ( ESLC ) வரை நமது ஊரில் படித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகள் மூரார்பாது To கள்ளகுறிச்சிக்கு போக, வர மொத்தம் 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று படித்து வந்துள்ளார். மேல்நிலைப்பள்ளி தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் நொந்தவர் படித்தது போதும் என மும்பை வந்து சேர்ந்தார்.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது நமது ஊரில் உள்ளவர்கள் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடியதை இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வு என கூறி மகிழ்கிறார்.
நோன்பு நாட்களில் அதிகாலையில் இவரும் இவருடைய நெருங்கிய நண்பர்களான ஜனாப். அந்தி அப்துல் சலாம், ஜனாப் கடுவு ரஜாக் வாத்தியார், ஜனாப் BARC தாவூத், ஜனாப் முஹமதலி ஆதம்ஷா மற்றும் திக்குவாய் ஜப்பார் வாத்தியார் மேலும் இன்னும் சிலருடன் இணைந்து பைத்து பாடியுள்ளார்கள். அந்தி அப்துல் சலாம் நல்ல குரல் வளத்துடன் பைத்து படிப்பாராம். அவர் குரலில் திரைப்பட பாடல்களும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைவு கூறுகிறார்.
1950ஆம் ஆண்டு இவர்களுக்கு கிடைத்த பணத்தில் நமது பள்ளிவாசலுக்கு சுண்ணாம்பு வாங்கி அடித்து உள்ளார்கள். இவர்கள் அந்த இளம் வயதில் செய்த முதல் நல்ல வேலையும் இதுவே ஆகும்.

ஜனாப் P.M சுலைமான் அவர்கள் பாவா மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சாயபு அவர்கள்
இவரது தந்தை ஜனாப் பாண்டபாடி மதார்ஷா சாயபு மூரார்பாதுவில் தனது 15வது வயதில் வந்து குடியிருப்பதற்கு பத்தாண்டுகள் முன்புதான் நமது ஊர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்கிறார். அதன்படி இன்று பாண்டபாடி ஜனாப். மதார்ஷா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு 128 வயதிருக்கும். 128’ல் 5 ஆண்டுகள் போக மீதமுள்ள 123 ஆண்டுகள் என்பதே நமது ஊர் பள்ளிவாசல் கட்டப்பட்ட காலமாக இருக்கும். அதாவது 1897- 1900’களின் வாக்கில் நமது பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கலாம்.
மூரார்பாதுவில் ஜனாப் SMS அப்துல் அஜீஸ் மற்றும் ஆலிம் பஷீர் அகமது இவர்களின் வீட்டின் நடுவில் தான் இவர்களின் பூர்விக வீடு இருந்து வந்தது. கரூர் வைஸ்யா பேங்க் இருக்கும் இடமும் ஒரு காலத்தில் இவர் இடமாக இருந்தது.
1952ஆம் ஆண்டு 20 வயதில் மும்பை வந்தவர் எந்த வேலையும் கிடைக்காமல் 3 மாதங்கள் பல இன்னல்களுக்கு சொந்தக்காரனாக வாழ்ந்தார். பிறகு தினம் 1 ரூபாய் சம்பளத்தில் 1953-ல் BPT (Bombay Port Trust) -ல் வேலை கிடைக்கவே அன்று முதல் முதலாளிக்கு நல்ல தொழிலாளியாக இருக்க எண்ணம் கொண்டு தனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு துவக்கினார். அதன் பிறகு அல்லாஹ்வின் உதவியால் அடுத்த கட்டமாக லேபர் போர்டில் வேலை கிடைத்தது. 1954ம் ஆண்டு பதவி உயர்வுப் பெற்று க்ரைன் ஒட்டுனராக (Crine driver) நியமிக்கப்பட்டார்.
ஜனாப்.P M சுலைமான் அவர்கள் ஒரு கடின உழைப்பாளி மற்றும் திறமைசாலி என்பதை நிரூபிக்கும் வகையில் கோதி வேலை (ஹார்பரில்) கிரைன் ஒட்டுனாராக 40 ஆண்டுகள் பணியில் இருந்து கொண்டு பகுதிநேர வேலையாக 1966-ம் ஆண்டு கார்களை (TAXI) சொந்தமாக வாங்கி அதை வாடகைக்கு நடத்தியும் வந்துள்ளார். அது மட்டுமின்றி 1980ம் ஆண்டு பேக் உற்பத்தி மையம் (கார்க்கானா) ஒன்றையும் 18 வருடங்கள் சிறு தொழில் முனைவராக சிறப்பாக நடத்தி வந்துள்ளார். ஒரே நோத்தில் 3 துறைகளிலும் சந்தர்ப அறிவு, ஓய்வு இல்லாத உழைப்பு, விடாத முயற்சி, வெற்றிக்கு உதவும் நல்ல எண்ணம், இவைகள் அனைத்தும் சேர்ந்த அதிர்ஷ்டம், இதுவே இவரது வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் ஆகும்.
1956ல் திருப்பு முனையாக முகமதியார்பேட்டையை சேர்ந்த மைமுனாபீவியை நிக்காஹ் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஐந்து பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் பிறந்து உள்ளது. அதில் ஒரு பெண் பிள்ளை வபாத்தாகிவிட்டது. இவர் குடும்பத்தோடு மும்பை டோங்கிரி (Dongiri) என்ற நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகள் இனிமையாக வசித்து வந்தார். பின்னர் 1996’ஆம் ஆண்டு இவர்கள் மும்பையில் இருந்து நவிமும்பை நிரோல் (Nerul) என்கிற பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளார்கள்.
1958ஆம் ஆண்டு முதல் தன்னை பொது வாழ்க்கையில் ஜனாப். T.A மஜீதார் மற்றும் ஜனாப் ஹாஜா மியான் முகமதலி அவர்களுடன் இனைந்து ஈடுபடுத்தி கொண்டார்.
முதன்முதலில் மும்பை நகர் பகுதியில் சந்தா வசூலித்து கொடுத்ததும் இவர்தான்.
1985’ஆம் ஆண்டு மும்பையில் பேக் கம்பெனி நடத்திய 11 பேர்களால் சொந்தமாக இடம் வாங்கி “மகாராஷ்டிரா இம்தாதுல் உலும் அரபி மதரசா” என்கிற பெயரில்
இன்றளவும் மும்பை சீத்தா கேம்ப் 6ஆம் நம்பரில் நடைபெற்று வருகிறது. இந்த அரபி மதரசா தொடங்குவதற்கு ஜனாப். P.M சுலைமான் அவரும் பங்கு எடுத்துள்ளார்கள்.
1991’ஆம் ஆண்டு நமது ஊர் மூரார்பாதுவில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு வருவதற்கு முழு முனைப்புடன் செயல்பட்டு வந்தவர்கள் ஜனாப்.P.M சுலைமான் மற்றும் ஜனாப்.T.A மொய்தீன் ஆகும். பணம் ரூபாய் 25,000/- கட்ட வேண்டும் அதற்காக சீட் பிடிக்க முயற்சி செய்து 1 நபருக்கு ரூபாய் 1000/-என்ற முறையில் ஜனாப் P.M சுலைமான் 18 பேரையும், ஜனாப்.T.A மொய்தீன் 7 பேரையும் சேர்த்து 25 நபருக்கு மொத்தம் ரூபாய் 25,000/- ஆகும். முதல் சீட் ஏஜன்ட் சீட் என்பது நடைமுறை பழக்கம். அந்த முதல் சீட்டை எடுத்துதான் மேல்நிலைப்பள்ளி வரவேண்டும் என்றால் விண்ணப்பப் படிவத்துடன் ரூபாய் 25,000/- காசோலையும் கொடுக்க வேண்டும் என்கிற சாரம்சாரத்தை கருத்தில் கொண்டு இவர்கள் இருவருமே அந்தபணத்தை அரசாங்கத்திடம் கட்டினார்கள்.
அப்போது பள்ளிக்கல்வித்துறையில் நமது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் இருந்ததால் பணம் கட்டியவுடன் மேல்நிலைப்பள்ளிக்கு சில நிபந்தனைகளோடு அரசுவின் ஒப்புதல் பெற்று தந்தார். அதாவது, மாணவ மாணவிகள் படிப்பதற்கு வகுப்பறை இல்லை அப்படி கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கீடு செய்தால் தான் பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் மூலமாக பணம் வரும், அப்படி வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம் என்பதால் நமது ஊர்காரர்களே கட்டிடம் கட்டிக்கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
அப்போது கட்டடம் கட்ட பணம் வசூல் செய்ய மும்பைக்கு ஊரில் இருந்து 4 பேர் வந்து இருந்தனர் அவர்களுடன் இவர்கள் இருவரும் சேர்ந்து வசூல் செய்ததில் ரூபாய் 40,000 முதல் 50,000 க்குள்தான் வசூல் ஆனது, மீதி ரூ.50,000|- தேவைப்பட்டது. அந்த சமயத்தில் சற்றும் தாமதிக்கமல் ஜனாப்.P.M சுலைமான் அவர்கள் நமது ஊரில் மேல்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு வேண்டி தன் சொந்த முயற்சியில் 20-12-1991ம் ஆண்டு துபாய் சென்று பல சிரமங்களுக்கிடையே 05-01-1992ல் திரும்பி வந்து வசூலித்த நிதியை கொடுத்தார். மொத்த வசூல்தொகை ரூ. 86,000 ரூபாய் ஆகும். அதில் வசூலிப்பதற்கான பயண மற்றும் இதர செலவுகள் போக மீதம் ரூபாய் 68,000/- பள்ளி கட்டிட நிதிக்காக தரப்பட்டது.
தன் சொந்த பணம் மற்றும் வசூலித்துக் கொடுத்தவர்களின் பெரும் முயற்சியால் நமது ஊருக்கு மேல்நிலைப்பள்ளி வந்தது.
இவர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் இதை செய்யாமல் காலம் தாழ்த்தி இருந்தால் நமது ஊரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஆலத்தூர் போயிருக்கும். இவர்கள் இருவரும் பணம் வசூலித்து கொடுக்க ஜனாப் T.A மஜீதார் மற்றும் பள்ளிகூட கமிட்டி நிர்வாகிகள் ஊரில் கட்டிட வேலைகளை கவனித்து வந்தனர். ஜனாப்.T.A மொய்தின் மற்றும் ஜனாப்.T. A மஜீதார் ஆகிய இருவருக்கும் இன்றைக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று நினைவு கூறுகிறார்.
சமீபமாக நமது ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியையும், மேல்நிலைப் பள்ளியையும் அரசாங்கம் தன் செலவில் சிறப்பாக கட்டிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஷா அல்லாஹ்.. மேலும் சில பதிவுகளை ஜனாப்.P.M.சுலைமான் குறித்து காணலாம்..
ஜனாப்.ராஜ் முகமது அப்துல் சலாம்
மற்றும்
மூரார்பாது – My Screen
Admin & Team
ஜனாப். மு.மு.பாருக்..
மிக சிறப்பான கட்டுரை. நமது ஊர் இன்றைய சமுதாயத்தினர் குறிப்பாக இளைஞர்கள் தெரிந்து, அறிந்து பின்பற்றபட வேண்டிய நிறைய படிப்பினைகள் இதிலே இருக்கிறது. ஜனாப் பி.எம் சுலைமான் பாய் போன்ற சமுமாய ஆர்வமுடையவர்களாக, உழைப்பாளிகளாக இளைஞர்கள் தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும்.
Pingback: மர்ஹூம் பாண்டாபடி மதார்ஷா சுலைமான் – 💐 Murarbadu – My Screen ✍️