
மர்ஹூம் ஜனாப்.ஆதியூரார் (ஆஜிரார்) அமீர் பாஷா # MMS 000201
MMS – 000201
02-11-2025
✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ் ✍️✍️

+91 9884078865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
மூரார்பாது 1980’களில்..
பஜர் பாங்கு சொல்ல கேட்கையில் எழலாமா வேண்டாமா என யோசித்து “ம்ம்ம்.. இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. அரபி லீவு.. தூங்கலாம்..” என மீண்டும் தூங்கி போவேன்..
திடீரென என் தாத்தி ரம்ஜான் பீவி நம்மை மெல்லிய குரலில் எழுப்பும் சத்தம் கேட்கும்..
“அப்பா.. அப்பா.. ரஷிது.. எழுந்திருபா..” என எழுப்புவார்.
என்னை எப்போதும் அரபி போக அம்மாதான் எழுப்புவார். ஆனால், மிக அரிதாகவே என்னை என் தாத்தி ரம்ஜான் பீவி எழுப்புவார்.
நாங்கள் காட்டில் பண்ணையம் செய்யும் காலத்தில் அவருடன் காட்டுக்கு செல்ல அல்லது எப்போதாவது சின்ன ஹாஜரார் அவர்களின் வீட்டுக்கு சென்று மாட்டிறைச்சி வாங்கி வர..
பள்ளிவாசல் நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சி வாங்குவதும்..ரேஷன் கடைக்கு சென்று மண்ணென்னை வாங்குவதற்கும் மிக இனையானது சின்ன ஹாஜிரார் அவர்களின் வீட்டுக்கு காலையில் சென்று மாட்டிறைச்சி வாங்கி வருவதென்பது.
சின்ன ஹாஜிரார் மாட்டிறைச்சி போடுகிறார் என்கிற தகவல் முன்பே ஊராருக்கு தெரிய வந்துவிடும். சின்ன ஹாஜிரார் எல்லா தினங்களிலும் மாட்டிறைச்சி போட மாட்டார். அவருக்கு மாடு எப்படி கிடைக்கிறது என்பதை பொருத்து மக்களிடம் தகவல் சொல்லி மாட்டிறைச்சி போடுவார்.
“என்னா தாத்தி..” என்பேன் தூக்க கலக்கத்தில்..
“அப்பா.. நம்ம ஹாஜிரார் இன்னிக்கு கறி போடுறாரம்பா.. நீ போய் தாத்தி சொன்னேன்னு ஒரு கூறு வாங்கி வாயேன்.. இன்னிக்கு வெள்ளிக்கிழமை அரபி இல்லதானே..” என்பார்.
“ம்ம்ம்.. என்னடா இது நம்ம தாத்தி நம்மை தூக்கத்திலிருந்து எழுப்புகிறாரே..” என்கிற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் மறு பக்கம் மிக மகிழ்வாக..
“நம்ம ஹாஜிரார் இன்னிக்கு கறி போடுறாராம்பா.. நீ போய் தாத்தி சொன்னேன்னு ஒரு கூறு வாங்கி வாயேன்..” என்கிற தாத்தியின் வார்த்தை மிக பெரிய சந்தோஷத்தை தரும்..
“அய்.. இன்னிக்கு நம்ம வீட்டுல கறி சால்னாவா தாத்தி..” என துள்ளிக்குதித்து எழுவேன்..
அப்போதெல்லாம் கறி சால்னா என்பது மிக மிக அரிதாகவே வீட்டில் செய்வார்கள். அதற்கு இரண்டு காரணங்கள்
- பொருளாதாரம்
- மிக அரிதாக போடப்படும் மாட்டிறைச்சி
“ஆமாபா.. ஹாஜிரார் இன்னிக்கு கறி போடுறாராம்.. கூட்டம் கூடிட்டா நமக்கு கறி கிடைக்காது.. சீக்கிரம் போனாதான் கிடைக்கும்.” என்பார் என் தாத்தி..
ஆமாம்.. தாத்தி சொல்வது உண்மைதான்.. லேட்டாக போனா கறி கிடைக்காது.
“தோ கிளம்பிட்டேன் தாத்தி…” என
எழுந்து முகம் கழுவியும் கழுவாமலும் தாத்தி தரும் 5 ரூபாயை வாங்கி கொண்டு ஒரு தூக்கு பாத்திரம் எடுத்துக்கொண்டு ஓடுவேன்.
சின்ன ஹாஜிரார் அவர்கள் மாட்டிறைச்சி போடும் கூடம் என்பது எங்கள் கருவாட்டு வீதியிலிருந்து பள்ளிவாசல் தாண்டி, பள்ளிவாசல் தெரு தாண்டி, நடு வீதி தாண்டி புண்ணாக்கு ராவுத்தர் வீட்டுக்கு பின் பக்கதிற்கு கிழக்கு பக்கம் இருக்கும்..
பொல பொலவென வானம் விடிய ஆரம்பித்தும் ஆரம்பிக்காத நேரம். ஓட்டமாய் ஓடி வந்து சின்ன ஹாஜிரார் வீட்டின் பின் பக்கம் வந்து நிற்பேன்..
ஒரு சிறு கூட்டம் காத்திருக்க எனக்கு லேசாக பயமாக இருக்கும்.. எல்லாம்.பெரிய ஆளுங்களாக இருக்காங்க.. எனக்கு கறி கிடைக்குமா என கவலையுடன் தலைகளை எண்ண ஆரம்பிப்பேன்..
ஒண்ணு
ரெண்டு
மூனு
நாலு
அஞ்சு
ஆறு..
அப்போது மொய்தீன் அம்மா ஆஷாபி அவர்கள் என்னை கவனித்தவராக..
“டேய் தம்பி.. இங்க வா.. கறி வாங்கதானே வந்தே.. நீ பாட்டுக்கு அங்க நின்னா எப்படி கணக்கு வரும்.. அந்த தூக்க குடு..” என என் கையில் உள்ள பாத்திர தூக்கினை வாங்கி முன்பே வரிசையில் உள்ள பாத்திரங்களோடு வரிசையில் வைப்பார்.
மீண்டும் தலைகளை எண்ண ஆரம்பிப்பேன்..
ஏழு
எட்டு
ஒன்பது
பத்து
ஹாஜரார் பரபரவென கறியை வெட்டி வெட்டி தென்னை ஓலை பாயில் போட போட காலனி சகோதரர் ஒருவர் அவருக்கு உதவியாக கறியை வெட்டி வெட்டி தருவார்.
அந்த அதிகாலையில் அந்த இடம் பச்சை இறைச்சி வாசத்தில் ரத்த வாசனையுடன் மிதக்கும்.
பதினொன்னு.. என தலைகளை எண்ணியவன் அட.. எவ்ளோ பாத்திரம் இருக்குன்னுதானே எண்ணனும் என தோன்றியவனாக..
பாத்திரங்களை விரல் விட்டு எண்ண ஆரம்பிப்பேன்..
ஒண்ணு
ரெண்டு
மூனு
நாலு
அஞ்சு
ஆறு..
மீண்டும் மொய்தீன் அம்மா ஆஷாபி அவர்கள் என்னை கவணித்தவராக..
“அட.. என்ன எண்ணுறே..” என சிரிப்பார்கள்..
“இல்ல.. இவ்ளோ பேர் இருக்காங்களே.. எனக்கு கறி கிடைக்குமான்னுதான்..” என இழுப்பேன்..
“கிடைக்கும்… கிடைக்கும்.. அதான் நேரத்தோடவே வந்துட்டல்ல.. இன்ஷா அல்லாஹ், கிடைக்கும் கிடைக்கும்.. பயப்படாதே..” என மீண்டும் சிரிப்பார்.
நான் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் அப்படியும் இப்படியுமாக நகர்ந்து கொண்டே ஹாஜிரார் அவர்களை கவனிப்பேன்..
சின்னதாக ஒரு தாடி..
சற்றே உடற் பூசினாற்போல ஒரு தேகம்,
மிதமான உயரம்,
வலுவான கைகள்,
வெள்ளை கைவைத்த பணியன்,
தலையில் தொப்பி,
வெளி நாட்டு வழு வழு லுங்கி என காட்சியளிப்பார்.
அவ்வப்போது அவரது மனைவி ஆஷாபி அவர்களிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார்
“ம்ம்.. நேரம் ஆவது பாரு.. கறி எலும்புன்னு சேத்து கூறு போடு”
“அந்த கூறுல கம்மியா இருக்கு பாரு.. அதுல இன்னும் போடு..”
“இதுல வெறும் எலும்புதான் இருக்கு.. இதை ஒரு கூறா சேர்க்காதே..”
“ஏய்.. ஏறாதீங்கப்பா ..எல்லாருக்கும் கறி இருக்கும்.”
ஹாஜிராரிடம் ஒரு பழக்கம் இருக்கும்.
ஒருவர் தெரிந்தவராக இருந்தாலும், கூட்டம் அதிகமாக காத்திருக்கும் நேரத்தில் கறி அவர் அதிகம் கேட்கிறார் என்றாலும் தர மாட்டார்.
“அதெப்படி.. எல்லாருக்கும் தரனும்ல.. கொஞ்சம் பொறு. கறி இருந்தா கூட வாங்கிகிடலாம்..” என்பார்
“ஸலாமலைக்கும்..” என எனக்கு பின்னாலிருந்து எனக்கு பரிச்சையமான குரல் கேட்க திரும்பி பார்த்தால் என் தாத்தி ரம்ஜான் பீவி என் தங்கை சல்மாவுடன் நின்று கொண்டிருப்பார்.
ஹாஜிரார் சிரித்தபடி “வலைக்கும் ஸலாம்..” என பதில் ஸலாம் சொல்லி “பாகுன்னாரா..” என தெலுங்கில் மாட்லாட தாத்தியும் தெலுங்கில் மாட்லாடுவார்.
“தாத்தி.. அப்புறம் நீங்களும் ஏன் வந்தீங்க..?” என தாத்தியிடம் கேட்டால் தாத்தியிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வரும்.
எப்படியும் நமக்கு இன்று கறி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை வந்துவிடும்.
கூறு வைத்த கறிகளை நேரத்தே வந்தவர்களுக்கு முதலில் என தர ஆரம்பிப்பார் சின்ன ஹாஜிரார்
சின்ன ஹாஜிராரிடம் அவரது வேலையில் ஒரு வேகமும் அதில் மிக மிக கவணமும் இருக்கும். கறி வாங்க வருபவர்களிடம் எப்போதும் கண்டிப்பு காட்ட மாட்டார். அதே போல கறி வேண்டும் என வந்து நிற்பவர்களிடம் காசுக்காக கறாராகவும் இருக்க மாட்டாராம்.
நாளை பின்ன வந்து குடுங்க என கறி குடுத்துவிடுவாராம்..
ஹாஜிராரிடம் கறி வாங்கினால் மனதுக்கு ஒரு நிறைவு இருக்கும் என சொல்வார்கள். அதிகம் எலும்பை சேர்த்து வியாபாரம் செய்வதெல்லாம் ஹாஜிராரிடம் கிடையாது என்பார்கள்.
பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கறி போட்டு வந்தவர்
ஒரு கால கட்டத்திற்கு பிறகு தினமும் கறி போட ஆரம்பித்தார் என்கிறார்கள்.

ஆமாம் யார் இந்த சின்ன ஹாஜிரார் ? என தற்போது பார்ப்போம்.
அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கூத்தகுடிக்கு அருகில் உள்ள ஆதியூர் என்கிற கிராமத்தை சார்ந்த ஜனாப். மீராஷா ஷாஹிப் மற்றும் மொஹ்தர்மா ஜொஹைரா பீ ஆகியோர்களின் மகனே சின்ன ஹாஜிரார் என அழைக்கப்படும் ஜனாப்.அமீர் பாஷா அவர்கள். இவரது இளமைகாலங்களில் ஆதியூரிலும் அதன் பின்னர் மூரார்பாதுவிலும் வாழ்ந்துள்ளார்.
ஆதியூரிலிருந்து புலம் பெயர்ந்த இவர்களின் வம்சாவளி ஜனாப்.அமீர் பாஷா அவர்களின் பெரிய தகப்பனார் வழி மகனாரை பெரிய ஆதியூரார் எனவும்,
ஜனாப்.அமீர் பாஷா அவர்களை மக்கள் சின்ன ஆதியூரார் எனவும் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
நாளடைவில் ஆதியூரார் ஆதியூரார் என்கிற பெயர் ஆஜிரார் ஆஜிரார் எனவும் பின் மேலும் மருவி மருவி ஹாஜிரார் என்றாகவும் நிலைத்து போனது.
மங்களம்பேட்டை பூர்வீகம் மர்ஹூம். இஸ்மாயில் மற்றும் மொஹ்தர்மா ரஹ்மான் பீ ஆகியோர்களின் மகள் மொஹ்தர்மா ஆஷாபி அவர்களை 1955 – 60 கால வாக்கில் நிக்காஹ் முடித்தார்.
மூரார்பாது சுல்தான் வீதியின் தெற்கு பக்கத்தில் இரண்டொரு வீடுகள் தள்ளி இவரது வீடு இருக்கும். கறி கடை என்றில்லாமல் வீட்டின் பின் பகுதியில் கறி போடும் வேலை செய்தார்.
ஜனாப்.அமீர் பாஷா என்கிற சின்ன ஹாஜியார் – மொஹ்தர்மா ஆஷாபி தம்பதியருக்கு 8 பிள்ளைகள்.
இரண்டு பிள்ளைகள் வபாத் ஆகிவிட்டார்கள். மீதமுள்ளவர்கள் 6 பிள்ளைகளாக 3 பெண் பிள்ளைகள் – 3 ஆண் பிள்ளைகள் ஆவார்கள்..

பெண் பிள்ளைகள்
- ஆஜிராம்பீ
- ரம்ஜான் பீ
- தெளலத்பி
ஆண் பிள்ளைகள் - சாதிக் பாஷா
- காதர் பாஷா
- மொய்தீன் பாஷா
இதில், மொய்தீன் பாஷாவே என் வகுப்புத் தோழன்..
மொஹ்தர்மா.ஆஜிராம் பீ – திருப்பூரிலும், மொஹ்தர்மா ரம்ஜான் பீ, ஜனாப்.சாதிக் பாஷா, ஜனாப்.காதர் பாஷா, ஜனாப்.மொய்தீன் பாஷா ஆகியோர்கள் பெங்ளூரிலும் வசிக்க கடைசி பெண் பிள்ளை மொஹ்தர்மா தெள்லத்பி மூரார்பாதுவில் வசிக்கிறார்.
மர்ஹூம் அமீர் பாஷா தன் காலத்தில் கறி வியாபாரம் மட்டுமின்றி சாதிக் பாஷா மிதிவண்டி நிலையம் என சைக்கிள் கடையும், ஒரு பெட்டிக்கடையும் நடத்தி வந்தார் என்பது நமக்கு கூடுதல் தகவல்.
ஜனாப்.மொய்தீன் பாஷா அவர்களது சாதிக் பாஷா மிதிவண்டி நிலையம் பற்றி கூறும்போது..
“எங்களிடம் 10’க்கும் குறையாத சைக்கிள்கள் இருக்கும். காலையில் ஒரு முறை பிறகு பள்ளி விட்டு வந்தபின் ஒரு முறை என எல்லா சைக்கிள்களையும் துடைப்பேன். விடுமுறை நாட்களில் அம்மாவுடன் பெட்டிக்கடை வியாபாரம் பார்ப்பதுண்டு..” என்பவர்..
“என் பெரிய அண்ணன் சாதிக் பாஷா தன் 10 வயதிலேயே பெங்களூருவுக்கு பேக் வேலைக்கு சென்றார். அதன் பிறகு நான் என் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பெங்களூர் சென்றுவிட்டேன். பிறகு என் சின்ன அண்ணன் காதர் பாஷா, அம்மா, பாவா மற்றும் சகோதரிகள் என பெங்களூருவுக்கு குடித்தனம் வந்து விட்டோம்..” என்கிறார்.
ஆஜரார் என்கிற ஹாஜிரார் அமீர் பாஷா அவர்களின் நடு மகன் ஜனாப்.காதர் பாஷா அவர்கள் கூறும் போது.. “என் தம்பி மொய்தீன் சொல்வது போல என் பெரிய அண்ணன் சாதிக் தன் 10 வயதிலேயே பெங்களூருவுக்கு பேக் வேலைக்கு சென்று விட்டார். 1991 வாக்கில் நான் இங்கே ஒரு ஹோட்டல் நடந்தி வந்தேன். அது நம் ஆகிலா ஸ்வீட்ஸ் கடைக்கு தெற்கு பக்கம் ஒரு கூரை கொட்டாயில் அமைந்திருக்கும். கட்டை பலகையில் அமருமிடம் சாப்பாட்டு மேடை அமைதிருப்பேன். பிறகு, 1992 களின் வாக்கில் நாங்கள் அனைவரும் பெங்களூருவுக்கு குடி பெயர்ந்து விட்டோம்.” என்கிறார்.
ஹாஜிரார் மகள் மற்றும் மகன் வழி பேரக்குழந்தைகள் அத்துனை பேரும் நல்ல படிப்புடன் நல்ல வேலையில் உள்ளார்கள் என்பது சந்தோஷமான தகவல்.
சின்ன ஹாஜிரார் என அழைக்கப்பட்ட ஜனாப்.அமீர் பாஷா மூரார்பாது மஹல்லாவாசிகளுக்கு அக்காலத்தில் மிகவும் பரிச்சையமானவர். சொன்ன சொல்லிற்காக அதை காத்திட மிகவே மெனக்கெடுவார்.
தன் கடைசி காலத்தில் உடல் சுகவீனப்பட்டு தன் பிள்ளைகளின் அரவனைப்பில் இருந்தவர் பெங்களூருவில் 2001″ ஆம் ஆண்டு வபாத் ஆனார்.
அல்லாஹ், சின்ன ஹாஜிரார் மர்ஹூம் ஜனாப்.அமீர் பாஷா அவர்களின் அத்துனை நன்மைகளையும் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக..
ஆமின்..
மூரார்பாது – My Screen
Admin & Team











Leave a reply