
ஜெயா தேநீர் விடுதி # MMS 000199
MMS – 000199
21-09-2025
+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்..)
ஜெயா தேநீர் விடுதி
மூரார்பாது கிராமம்
காலம் : 1950’களில்
மூரார்பாது எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை..
மாலை சூரியன் மறைந்தால் ஊரே அடங்கி போயிருக்கலாம்..
ஊரே என்றால் 200, 300 குடும்பங்கள் எல்லாம் இல்லை.
ஒரு 20 அல்லது 30 குடும்பங்கள் இருக்கலாம். மின்சாரம் ஊருக்கு கிடைக்காத காலம்
மூரார்பாது பிரதான சாலை மாட்டு வண்டிகளின் சாலையாக இருக்கலாம். ஊரில் வீடு கட்டி வாழ்ந்த குடும்பங்களைவிட தாங்கள் உழவு செய்து வாழ்வாதாரம் கண்ட காடு கழனிகளில் குடிசை வீடு கட்டி வாழ்ந்த குடும்பங்களின் என்னிக்கை அதிகமாக இருந்திருக்கும்.
நாம் இப்போது பேருந்து நிறுத்தம் என புழங்குகின்ற இடத்தில் தன் குடும்பத்தாருடன் 1950’களில் வந்தவராக திரு.மாணிக்க முதலியார் இருக்கலாம்.
மாணிக்க முதலியார்
ரிஷிவந்தியம் என்கிற ஊரை பூர்வீக கொண்டவர் மூரார்பாது வந்ததும் – அவர் இறங்கி தனக்கான குடிசை அமைத்த இடமுமே மூரார்பாதுவின் பிரதான இடமானது எப்படி என்றும், நம் மக்கள் மனதில் மானிக்க முதலியார் கடை, சண்முகம் இட்லி கடை எனவும் பெயர் பிடித்தது எப்படி என சுவாரஸ்ய கற்பனைகளுடன் பயணிக்கிறது இக்கட்டுரை..
1950’களில்
ரிஷிவந்தியம்
மாணிக்கம் முதலியார் – ராஜாம்மாள்
“ஏய் புள்ள.. நீ நம்பி வா.. அங்க நிறைய சாயபுமாருங்க இருக்காங்களாம்.. எல்லாம் தங்கமான ஆளுங்களாம்.. ஊருல கொறைஞ்சது 20, 30 தலைக்கட்டு இருக்குமாம்.. விவசாயம்தான் பெரிசு அங்க..” என்றார் ராஜாம்மாளிடம் மாணிக்க தேவர்..
“எல்லாம் சரிதான் சாமி.. ஏதோ போனம் வந்தோம்னா பரவாயில்ல.. கூத்து பாக்க போன ஊருக்கு ஊடால பாத்த ஊரையே பொழைக்க வழி தேடுற ஊராக்கிகனுமான்னுதான் ஒரே யோசனையா இருக்கு.. எல்லாம் சரியா வருமா..? என கவலை வார்த்தை கோர்ப்பார் ராஜாம்மாள்..
“அட.. எல்லாம் சரியா வரும்.. நம்ம பையன் சண்முகம் அப்புறம் வீட்டுக்கு வந்த மவராசி பழனியம்மா இருக்கையில என்ன உனக்கு கவலை.. சட்டு புட்டுன்னு சாமானை எடுத்து கட்டு”என்பார் மாணிக்க முதலியார்.
“ம்ம்ம்.. இனி நான் சொல்லியா என் சாமி நீ நிக்க போற.. போறதுன்னு ஆயிபோச்சு.. அந்த ஊரு போருதான் சொல்லேன்..” என கிளம்ப தயாராகி விடுவார் ராஜாம்மாள்..
“எனக்கு தெரியும்டி.. நான் எங்கன கூப்பிட்டாலும் நீ மறுக்கவா போறே..” என பாத்திர பண்டம் போட்ட சாக்கு பையை வாழை நார் கொண்டு இருக்கக்கட்டுவார் மாணிக்க முதலியார்.
“எப்பா.. அம்மா நாம போற ஊர் பேரு கேட்டுச்சே..” என்பார் அவரது மகன் சணமுக முதலியார்.
“அட நீங்க வேற.. மாமா ஊர் பேரை நாக்குல வச்சுக்கிட்டா வஞ்சனை செய்றாரு..: என்பார் அவரது புது மருமகள் பழனியம்மாள்..
“ம்ம்ம்ம்…ஊர் பேரு தொண்டைல இருக்கு… வாயிக்கு வரமாட்டேங்குது..” என்கிற மாணிக்க முதலியார்
“எப்பா.. மாடுகளுக்கு நல்லா தீவனம், தண்ணி காட்டுய்யா.. சும்மாவா அந்த ஊருக்கு போய் சேரவே அர பொழுது போயிடும்..” என்பார்.
“க்க்கும்.. ஊரு ஊருன்னு சொல்றீங்களே தவிர.. ஊர் பேர சொல்ல கானோம்.. சரி, இந்தா இந்த ஆவனி வந்தா அய்யாவுக்கு 50 வயசை தொடும்னு நினைக்கேன்.. வயசாயிட்டுல்ல.. மறதி வரத்தானே செய்யும்..சரி விடுங்க பெரிய சீமையில இல்லாத ஊரு.. அதுக்கு ஒரு பெத்த பேரு..” என்கிற ராஜாம்மா பையன் சண்முகம் பக்கம் திரும்பி “தம்பி.. அந்த ஆட்டுக்கல்லயும், அம்மி கல்லையும் மறந்துடாதப்பே..” என்பார்.
சட்டென ராஜாம்மா பக்கம் திரும்பும் மாணிக்க தேவர்..
“அட.. என்ன சொன்ன.. வயசாயிட்டா.. எனக்கு மறதியா..? உன்ன கண்ணாலம் கட்டி தரயில்ல எனக்கு ஒரு ஜோடி உழவு மாடும், ஒரு பசு மாடும், 10 மூட்ட நெல்லும், 100 ரூபா ரொக்கமும் தரேன்னு சொன்னீங்களே.. எங்கடி அதெல்லாம்..” என்பார்.
“ம்ம்ம். என் தொரைக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கும்…பஞ்சம் பிழைக்க பாய்மாருங்க ஊர் போறம்னு சொல்லுவாரு.. ஆனா, ஊர் பேரை மட்டும் சொல்ல மாட்டாரு.. ” என பழிப்பு காட்டுவார் ராஜாம்மாள்..
“அட…இதென்னடா ரோதனையா போச்சு.. அது சாதாரன பேரு இல்ல புள்ள.. அது வந்து.. அந்த பேரே நம்ம சீமையில இல்லாத பேரு..” என்கிற மாணிக்க முதலியார் ராப்பூரா யோசித்த்த்துக்கொண்டே இருப்பார்.
அதிகாலையில்
மாடு – வண்டி பூட்டி சம்சாரிக்க தேவயான அத்துனை பொருட்களையும் வண்டி ஏத்தி கிளம்புவார்கள்.
“ஹே..ஹே..” என மாட்டை விரட்டிக் கொண்டே..
“அது என்னா ஊரு..
அது என்னா பேரு..
ஊர் பேரு சொல்வார் யாரு..” என யோசித்து வண்டியை விரட்டுகையில் அதிகாலை கடும் ஊசி குளிர் காற்று மூஞ்சில் அறையும்..
“ஸ்ஸ்ஸ்… என்னா குளிரு..” என்பவரிடம்..
“ஏன்.. மூஞ்சுலதான் காத்து சில்லுனு அடிக்குதே.. பாத்து காதை கட்டுங்க..” என்பார் ராஜாம்மாள் மாணிக்க முதலியாரிடம்..
“அட.. இந்த குளிர் காத்துல்லாம் என்ன ஒன்னும் பன்னாது..” என்பவரிடம்
“ம்ம்ம்… மூஞ்சு பாத்து பாத்து என்கிற ராஜாம்மாளிடம் “ஹே.. அந்த ஊர் பேரு ஞாவகம் வந்திடுச்சு..” என்பார்..
“அட.. பாரேன்.. என்னா பேரு..” என்கிற மனைவியிடம் காதை கிட்டே கொண்டு வரச்சொல்லி
“மூஞ்சு பாத்து பாத்துன்னு சொன்னில்லே.. அதான் ஞாபகம் வந்துட்டு..” என்பவர்
மூராதாபாத் என்பார்.
“மூராதாபாத்..” என சொல்லி பார்க்கும் ராஜாம்மாள் அதிசயமாய் சொல்வார்..
“மூராதாபாத்..”
“மூராதாபாத்..”
பக்கத்து மருகள் பழனியம்மாளிடமும், பையன் சண்முகத்திடமும் சொல்வார்..
“எந்த சீமையிலும் இல்லாத பேரான்னு கேட்டேன்ல.. அந்த சீமை பேரு மூராதாபாத்தாம்..”
என்பார்
“மூராதாபாத்..” என சொல்லி பார்க்கும் பழனியம்மாள் சொல்வார்..
“அட.. ஆமா அத்தை, எந்த சீமையிலும் இல்லாத பேராதான் தெரியுது..” என மீண்டும் சொல்லி பார்ப்பார்..
மூராதாபாத்
1917 கல்வெட்டில் மூராதாபாத் ( MURADABAD )
எல்லோருக்கும் அவரவர் கிராமம் சொர்க்கம் என்று சொல்லுவார்கள்.
அதுவும் அந்த காலை மற்றும் மாலை நேரத்து கிராமங்கள் ரொம்பவே அழகாக இருக்கும்.
நமக்கு கிடைத்த 1917 ஆம் வருட கல்வெட்டில் மூராதாபாத் என பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம்.
மூராதாபாத் பின்னர் மூரார்பாத் எனவும், மூரார்பாத் பின்னர் மூரார்பாது எனவும், தற்போது மூரார்பாது என அரசுகளின் குறிப்பேட்டிலும், மூரார்பாளையம் என நம் மக்களின் வழக்கு சொல் பெயராகவும் இருக்கிறது.
சரி, யார் இந்த மாணிக்க முதலியார் – ராஜாம்மாள் மற்றும் சண்முக முதலியார் – பழனியம்மாள் என பார்ப்போம்.
ரிஷிவந்தியத்தை பூர்வீகமாக கொண்டவர் மாணிக்க முதலியார். அவரது மனைவி ராஜாம்மாள்.
அவர்களின் மகன் மற்றும் மருமகள் சண்முக முதலியார் – பழனியம்மாள் ஆவர்கள்.
சண்முக முதலியார் – பழனியம்மாள் ஆகியோர்களின் வாரிசுகள் 9 பேர்
ஆண்கள் – 6 பேர்
பெண்கள் – 3 பேர்
தற்போதய தேதியில் வயது வாரியாக தரப்பட்டுள்ளது.
சுந்தரராஜன் – வயது 71
இவர் நடத்துனராக பணியாற்றியவர். நம் மூரார்பாது கிராமவாசிகளுக்கு ஓரளவு பழக்கமானவர்.
ஜெயராமன் – வயது 69
நம்ம பெட்டிக்கடை அண்ணன்.. நீண்ட காலம் பெட்டிக்கடை நடத்தியவர்களுக்கு சர்வதேச அளவில் விருது வழங்கினால் அண்ணன் ஜெயராமன் அவர்களுக்கு ஒரு விருது நிச்சயம்.
1975-80 முதல் பெட்டிக்கடை நடத்தி 2025’ல் 50 வருடமாக பெட்டிக்கடை நடத்துகிறார் என்கிற சாதனை படைத்துள்ளார். நம் மூரார்பாது – My Screen’ல் மனதில் நின்ற மஞ்சு என்கிற கட்டுரைக்காக இவரை நாம் பேட்டி கண்டுள்ளோம். நம் கிராம வாசிகள் அத்துனை பேருக்கும் மிக மிக நன்றாக பரிச்சையமானவர்.
செல்வம் – வயது 67
செல்வம் அண்ணாரின் உழைப்பு எல்லோருக்கும் மிக நன்றாக தெரியும். தங்கள் குடும்பம் எடுத்து நடத்திய உணவு சாலைக்காக இரவு 8 மணிவாக்கில் கள்ளக்குறிச்சி சென்று மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் 10 மணிவாக்கில் மூரார்பாது திரும்புவார்.
மல்லிகா – வயது 65
சண்முகம் முதலியார் அவர்களின் முதல் பெண் வாரிசு.
பாலு – 63 & சக்திவேல் – 61
பாலு அண்ணன் மற்றும் சக்திவேல் அண்ணன் அவ்வளவாக மக்களிடம் நேரடி தொடர்பு இல்லாதவர்கள்.
ரகோத்தமன் – வயது 57
சைக்கிள் ரகோத்தமன் எனலாம். சைக்கிளில் அத்துனை வித்தையும் காட்டுவார். ஹேண்டில் பார் பிடிக்காமல் சைக்கிள் ஓட்டுவது, சைக்கிளே இல்லாமல் சைக்கிள் எப்படி ஓட்டுவது என்பதுவரை அத்துனை வித்தையும் காட்டுவார். ரஜினியின் அண்ணாமலை படம் மூலம் சைக்கிள் பிரபலமாவதற்கு முன்பாகவே சைக்கிளை பிரபலம் ஆக்கியவர்.
ரகோத்தமன் டீ மாஸ்டர் கூட.. கடையின் வடக்கு பக்கம் டீ போடும் இடத்தில் இவரை பெரும்பாலும் காணலாம். சைக்கிளின் பின்னால் கேரியரில் இரண்டு குடம் கட்டி தண்ணீர் கொண்டு வருவார். ரகோத்தமன் இதுபோன்ற இல்லா நேரங்களில் அண்ணன் செல்வம் அங்கே டீ மாஸ்டராக இருப்பார்.
விஜயலட்சுமி – வயது 55
சண்முகம் முதலியார் அவர்களின் இரண்டாம் பெண் வாரிசு.
ஜெயலட்சுமி – வயது 53
சண்முகம் முதலியார் அவர்களின் கடைக்குட்டி பெண் வாரிசு
ஜெயலட்சுமி 1972’ல் பிறந்தவர். மூரார்பாதுவில் இடலி கடை மட்டும் நடத்தி வந்தவர்கள் மெல்ல மெல்ல தேனீர் விடுதியும் ஆரம்பித்தார்கள்.
ஜெயா தேநீர் விடுதி
1980’களில் மூரார்பாது மட்டுமின்றி நம் பக்கத்து கிராமங்களான பரமனத்தம், பிச்சனத்தம், மேலக்காடு, நெடுமானூர், சோழம்பட்டு, மேலேறி மற்றுமுள்ள பக்கத்து கிராம மக்களிடையேயும் மிக மிக பிரபலம்.
ஜெயா தேநீர் விடுதியின் முன் பக்கம் சைக்கிள்கள் நிறுத்த ஒரு பெரும் இடம் இருக்கும். பக்கத்து கிராமங்களிலிருந்து சைக்கிளில் வருபவர்கள் சைக்கிளை இங்கே நிறுத்திவிட்டு கள்ளக்குறிச்சி செல்ல பேருந்து பிடிப்பார்கள். மீண்டும் ஜெயா தேநீர் விடுதி வந்து அரசியல் பேசி நேரம் போக்கி டீ குடித்து தன் ஊர் செல்வார்கள்.
ஜெயா தேநீர் விடுதி மிக மிக பிரபலமாக இருந்த 1980’களில் அது ஜெயா தேநீர் விடுதியின் பொற்காலம் எனலாம்.
நடிகர் T. ராஜேந்தரின் சினிமா பாடல்களும், கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பேச்சுகளும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஜெயா தேநீர் விடுதி காலை 6 மணிக்கே பரபரப்பாகிவிடும்.
இட்லியும் காரச்சட்டினியும்
ஒரு ரூபாய்க்கு 20 இட்லியும், நாம் கொண்டு செல்லும் பாத்திரத்தில் மிக தாராளமாக கெட்டி சட்டினியும் – காரச்சட்டினையும் கிடைக்கும் என்கிறார் ஆசிரியர் அப்துல் ரஹிம் கலிபுல்லா
எப்போதும் கிடைக்கும் காரா பூந்தியும், டீயின் அந்த சுவையும் மறக்க இயலாது என்கிறார்கள்.
மனதை மயக்கும் மாலை நேர பக்கோடா
மூரார்பாதுவில் மாலை நேரம் ஜெயா தேநீர் விடுதியில் ஒரு பெருங்கூட்டம்
“என்னப்பா.. வாசனைதான் வருது. பக்கோடா வரக்கானோமே..” என பக்கோடாவுக்காக காத்திருக்கும்.
சுற்றும் முற்றும் பார்க்கையில் கூடி நிற்கும் கூட்டம் நமக்கு ஒரு பீதியை கிளப்பும். நேற்று வந்து பக்கோடா இல்லாமல் வெறும் வாயிடன் போனது போல இன்றும் ஆகிவிடக்கூடாது. எப்படியாவது, எப்படியாவது பக்கோடா வாங்கிவிட வேண்டும் என கண்ணாடி போட்ட அந்த பெரிய டப்பா போன்ற கூண்டுக்குள் தலையை நீட்டி காத்திருக்க..
ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் மணக்க மணக்க எடுத்து வரும் சூடான மொறு மொறு பக்கோடாவை உள்ளே உள்ள பாத்திரத்தில் கொட்டுவார்கள்..
“அண்ணே.. அண்ணே.. ஒரே ஒரு பாக்கெட்டு..”
ஒரு கையகளத்திற்கும் அதிகமான அளவுள்ள பேப்பரில் ஒரு கையளவுக்கும் மேல் அள்ளி முக்கோன வடிவில் சுற்றி செல்வம் அண்ணார் நீளும் கைகளுக்கெல்லாம் தருவார்.
விலை 25 பைசாதான் அப்போது.
“அண்ணே.. அண்ணே.. ஒரே ஒரு பாக்கெட்டு..”
பக்கோடா பேப்பரில் சுற்றப்பட்டு சுற்றப்பட்டு காலி ஆகி கொண்டே இருக்கயில் நம்ம கைக்கு மட்டும் கிடைக்காது.
“அண்ணே.. அண்ணே.. ஒரே ஒரு பாக்கெட்டுணே.. நான் நேத்தும் வந்தேன், கிடைக்கல.. அண்ணே.. அண்ணே.. ஒரே ஒரு பாக்கெட்டுனே..”
ஒரு வழியாக நாம் நீட்டிய கையில் உள்ள காலனாவை வாங்கி கொண்டு அதே வேகத்தில் ஒரு கையகளத்திற்கும் அதிகமான அளவுள்ள பேப்பரில் ஒரு கையளவுக்கும் மேல் தாராளமாக அள்ளி முக்கோன வடிவில் சுற்றி செல்வம் அண்ணார் தருவார்.
“ஆத்தாடி, நான் பக்கோடா வாங்கிட்டேன்ல..” என மனசெல்லாம் பூரிப்பு அடையும்.
அன்றைய மூரார்பாத் இன்று மூரார்பாதுவாக – மூரார்பாளையமாக எவ்வளவோ மாறிவிட்டது.
மருத்துவமனை
பல் பொருள் அங்காடிகள்
வாரச்சந்தை
கைபேசி கடைகள்
பேக்கரி என்கிற அடுமனை’களின் கூடங்கள் வந்தாலும்
ஜெயா தேநீர் விடுதி யின் தேநீரும் – 25 பைசாவுக்கு வாங்கிய பக்கோடாவின் சுவையும் இன்றும் நாக்கில் நிற்கிறது.
1970 களில் கோலோச்சிய ஜெயா தேநீர் விடுதி இன்று இல்லை..
ஆனால், அந்த இட்லிகளும் – சட்னியும், தேநீர் – பக்கோடாவின் சுவையும் என்றும் மறக்க இயலாதவை
We miss you Jaya தேநீர் விடுதி
மூரார்பாது – My Screen
Admin & Team
Leave a reply