SIR.. நீங்க அங்க வாங்க SIR # மூரார்பாது – My Screen
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
Greetings from மூரார்பாது – My Screen Admin & Team

✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
2026 ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் என்பதால் பொதுவான அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தமும் கூடுதல் பரபரப்பை – பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறப்பு தீவிர படிவம் என்ன தகவல்களை கோருகிறது என மெத்த படித்தவர்கள்கூட வீடு வீடாக வரும் 4 ஆம் வகுப்பு படித்த அலுவலரிடம் கேள்விகளாக கேட்டு விடை புரியாமல் காத்துக்கிடக்கின்றனர்
“ஏங்க.. புது போட்டோ ஒட்டனுமா..?” என்கிற கேள்விக்கு..
“ம்ம்ம்.. தேவையில்லைதான்.. இருந்தா ஒட்டுங்க.. ஆனா, ஒட்ட வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியங்க.. ஒட்டலன்னாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறேன்..” என பதில் வருகிறது.
” பாய்.. என் பிறந்த வருடம் ஆதார்ல 1982’ன்னு இருக்கு.. வாக்காளர் அடையாள அட்டையில 1983’ன்னு இருக்கு.. நான் இப்ப எழுதனும்..?”
“ம்ம்ம்.. நீங்க உங்க உண்மையான பிறந்த வருடம் எழுதுங்க.. அதே நேரம் ஆதார்ல, வாக்காளர் அடையாள அட்டையில என்ன இருக்கோ அதை எழுதுங்க..” என்பார். கேள்வி கேட்டவருக்கு நாம் ஏன் பிறந்தோம் என்றாகிவிடும்..
“ப்ரோஓஓ.. கணக்கீடு படிவத்தோட நாம நகல் எதுவும் இணைக்க தேவையில்லைன்னு சொல்றாங்க.. நீங்க உங்க நண்பரோட கடைக்கு போய் எல்லாத்தையும் நகல் எடுத்து வர எல்லோர்கிட்டேயும் சொல்றீங்க.. ஏன் ப்ரோ..?” என்றால்
“ஏங்க பாய் ப்ரோஓஓ.. ஒரிஜினல் கொண்டு வந்து அது தொலைஞ்சு போனா என்ன பன்னுவீங்க.. அதான் பாய் ப்ரோஓஓ எல்லாத்துலயும் ஒரு நகல் கேக்குறோம்..” என்பவரிடம்
“ப்ரோஓஓ..எல்லா கூட்டமும் ஜெராக்ஸ் கடையிலதான் இருக்கு.. அங்க ஆவனம் தொலைஞ்சு போகாதா ப்ரோஓஓ..?..” எனக்கேட்பவருக்கு பதில் தராமல் அந்த ப்ரோஓஓ மவுனமாகிவிடுகிறார்.
“சார்.. இந்த SIR Form’ஐ எப்படி Fill பன்றது..?” என கேட்டால் அங்கே கற்பனை குதிரைகள் தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிறது..
“ம்ம்ம்.. தமிழ்லதான் நிரப்ப வேண்டும்..”
“கறுப்பு மை வைத்து எழுதனும்..”
“அப்பா, அம்மா, மனைவி பேர் முதல் மேல் கட்டத்துல இப்ப உள்ளபடி எழுதனும்..”
“இரண்டாம் கட்டத்துல நீங்க 2002/2005’ல் வாக்காளர்னா பேர் எழுதனும்.. இல்லைன்னா அத அப்டியே விட்டுவிட வேண்டும்..”
“உறவுன்னா என்னாவா..? அத நம்ம தளபதியே சொல்லிக்கிறாரே.. ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடான்னு.. நீ என் பேர எழுது நான் உன் பேர எழுதுறேன்..” என்பவர்களும்..
“ஏய்.. என்னப்பா நீ.. மூரார்பாது தவ்ஹீத் பள்ளி எங்க இருக்குன்னு கேக்குறே..? இது கூட தெரியாத உனக்கு..?”
“மூரார்பாது சுன்னத் பள்ளிவாசல்னா நம்ம நம்ம ஆரம்ப பள்ளி இருந்ததுல்ல.. அதான்..”
“ஏய்.. நீ என்னப்பா xxxxங்கிற பேர எழுதுறே.. உன் மனைவி பேரு xxxx’தானே..” எனக்கேட்டால்..
“ஏய்.. 2002 / 2005′ ல அப்ப என்கூட அப்படி உறவுல இருந்தது அவதான்பா.. சரியான தகவல் தரலேன்னா சட்ட நடவடிக்கை பாயுமாமே..” என பழைய நல்ல உறவுகள் எல்லாம் வெளிவருகிறது.
Sir.. SIR Form Fill செய்ய எங்க வரனும்..? என்றால்..
Sir.. SIR Form Fill செய்ய நீங்க அங்க வாங்க Sir என்கிறார்கள்..
தேர்தல் ஆனையத்தின் சிறப்பு கணக்கீடு படிவம் பூர்த்தி செய்வதில் நம்ம தமிழக முதல்வரே குழம்பிக்கிடக்கிறாரு.. சாதாரன மூரார்பாது ஜனங்கள் என்ன செய்யும்..?
சரி.. What is SIR..?
எஸ்.ஐ.ஆர் என்றால் என்ன?
வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்) – Special Summary Revision (SSR) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
எஸ்.எஸ்.ஆர் நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. இது அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.
எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொருத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசியாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
எத்தனை கட்டங்களாக இது நடைபெறும்?
நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடையும் எஸ்.ஐ.ஆர் பணிகள் 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்-இன் முக்கிய அலுவலர்கள் யார்?
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சுமார் 1,000 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு சாவடி நிலை அதிகாரி (Booth Level Officer – BLO) உள்ளார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி (Electoral Registration Officer – ERO) நியமிக்கப்படுகிறார். வாக்காளர் பதிவு அதிகாரி (ERO) என்பவர் கோட்ட துணை குற்றவியல் நடுவர் (Sub-Divisional Magistrate – SDM) நிலை அதிகாரி ஆவார். அவர்:
- வரைவு வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கிறார்,
- உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற்று அவற்றின் மீது முடிவெடுக்கிறார்,
- இறுதி வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்து வெளியிடுகிறார் என இதுபோன்ற தகவல்கள் நீண்டு கொண்டே போகிறது.
நாம் நம் மூரார்பாது – My Screen வெளியிட்ட பதிவுக்கு வரலாம்..
இந்திய தேர்தல் ஆனையத்தின்
SIR – SPECIAL INTENSIVE REVISION என்கிற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீடு படிவம் குறித்து சில விபரங்களை காணலாம்.
கேள்வி பதிலாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த பதிவு உங்களுக்கு எழும் ஐயங்களை நிவர்த்தி செய்யலாம் என நம்புகிறோம்.

“ஒரு வாக்காளராக நான் என்ன செய்ய வேண்டும்..?”
உங்கள் வீடு தேடி வரும் தேர்தல் அலுவலர்கள் உங்களுக்கு ஒரே மாதிரியான இரண்டு விண்ணப்பத்தை தருவார்கள். இரண்டும் ஒரே தகவல்களை கோரும் விண்ணப்பங்கள்தான் என்றாலும் நீங்கள் இரண்டினையும் பூர்த்தி செய்து ஒரு விண்ணப்பதில் அவர்களின் ஒப்புகை ( Acknowledgement ) பெற்று நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். மறு சீரமைப்பு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் நீங்கள் இந்த அத்தாட்சி வைத்து விடுபட்ட உங்கள் பெயருக்காக உரிமை கோரலாம்.
“சரி.. அவர்கள் தரும் படிவத்தில் அப்படி என்னதான் இருக்கும்..?”
இங்கே இனைக்கப்பட்டுள்ள படிவத்தினை கவனிக்கவும்.

வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய முதற் பகுதிகள் 5 கட்டங்களாக தரப்பட்டுள்ளன.
முதற் கட்டத்தில்
- வாக்களரின் பெயர் :
- வாக்காளரின் அடையாள அட்டை எண் :
- முகவரி :
என உங்கள் தகவலுடன் இருக்கும்.
இரண்டாம் கட்டத்தில்
- வரிசை எண் :
- பாகம் எண் மற்றும் நீங்கள் ஓட்டளிக்கும் உங்கள் வாக்கு சாவடியின் பெயர் முகவரியுடன், சட்டமன்ற / நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாநிலத்தின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும்.
மூன்றாம் கட்டத்தில் QR Code தேர்தல் ஆனையத்தின் அலுவலர்கள் குறிப்புக்காகவும்..
நான்காம் கட்டத்தில் வாக்காளரின் புகைப்படமும்
ஐந்தாம் கட்டத்தில் வாக்காளரின் தற்போதைய புகைப்படமும் இணைக்க கேட்கப்பட்டிருக்கும். வாக்காளரின் ( உங்கள் ) தற்போதைய புகைப்படம் இணைத்தல் மிக நல்லது.
“சரி.. அவர்கள் தரும் படிவத்தில் வாக்காளராக நான் என்ன தகவல் தர வேண்டி இருக்கும்..?”
மீண்டும் இங்கே இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை கவனிக்கவும்.

கட்டம் எண் : 1 ( உங்கள் புரிதலுக்காக எண் தரப்பட்டுள்ளது. தேர்தல் ஆனைய அலுவலர்கள் தரும் படிவத்தில் இப்படி எண் எதுவும் இருக்காது )
- பிறந்த தேதி : நாள் / மாதம் / வருடம்
- ஆதார் எண் : 12 இலக்க ஆதார் எண் எழுதவும்
- கைபேசி எண் :
- தந்தையின் / பாதுகாவலரின் பெயர் :
- தந்தையின் / பாதுகாவலரின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் : ( குறிப்பு இருந்தால் எழுதவும் )
- தாயார் பெயர் : எழுதவும்
- தாயாரின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் : ( குறிப்பு இருந்தால் எழுதவும் )
- கணவர் / மனைவி பெயர் : ( திருமணம் ஆனவர்களுக்கு மட்டும் )
- கணவரின் / மனைவியின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் : ( குறிப்பு இருந்தால் எழுதவும் )
நீங்கள் வாக்காளராக 2002 ஆண்டு இருந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் மிக கண்டிப்பாக இந்த எண் : 1 கட்டத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
நல்லது.. 2 ஆம் கட்டத்தில் தரப்பட்டுள்ள “முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் விபரங்கள்” என்கிற கட்டத்தில் என்ன செய்ய வெண்டும்..?

நீங்கள் 2002 ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவராக இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த எண் : 2 என்கிற பகுதியில் வாக்காளர் பெயர் பகுதியில் உங்கள் பெயர் எழுத வேண்டும். இல்லாத பட்சத்தில் உங்கள் பெயர் எழுதக்கூடாது. 2002 ஆம் ஆண்டு நீங்கள் வாக்காளர் எனில் வாக்காளர் பெயர் பகுதியில் உங்கள் பெயர் 2002 ஆம் ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளபடி கேட்கப்பட்டுள்ள தகவலை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர்களுக்காக தரப்பட்டுள்ள https://share.google/MOtxNrtLPeFKHpngF இனைப்பினை பயன்படுத்தி உங்கள் பெயர் – தகப்பனார் பெயர் – வாக்குச்சவடி எண் – வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விபரங்கள் பெறலாம். அல்லது இனைக்கப்பட்டுள்ள மூரார்பாது வாக்காளர் விபர குறிப்பிலிருந்து உங்கள் விபரங்கள் பெறலாம். அதில் தரப்பட்டுள்ள விபரங்களை மிக சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- வாக்காளரின் பெயர் :
- வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் ( இருப்பின் ) :
- உறவினரின் பெயர் : தந்தை பெயர் எழுதவும்
- உறவு முறை : தந்தை என எழுதவும்
- மாவட்டம் : விழுப்புரம் ( 2002 ஆம் ஆண்டு )
- மாநிலம் : தமிழ்நாடு
- சட்டமன்ற தொகுதின் பெயர் : சங்கராபுரம்.
- மேலும், சட்டமன்ற தொகுதியின் பெயர் அல்லது எண் , பாகம் எண், வரிசை எண் எழுதவும்.
புரிகிறது.. 3 ஆம் கட்டத்தில் தரப்பட்டுள்ள “முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர்” என்கிற கட்டத்தில் என்ன செய்ய வெண்டும்..?

நீங்கள் 2002 ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவராக இருந்தாலும், இடம் பெற்றவராக இருந்தாலும் நீங்கள் இந்த எண் : 3 என்கிற பகுதியில் கேட்கப்பட்டுள்ள தகவலை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளர்களுக்காக தரப்பட்டுள்ள https://share.google/MOtxNrtLPeFKHpngF இனைப்பினை பயன்படுத்தி உங்கள் உறவினர் (தகப்பனார் / தாயார்) பெயர் – உறவு முறை – வாக்குச்சவடி எண் – வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விபரங்கள் பெறலாம்.
பின் 2002 ஆண்டு வரவு வாக்காளர் பட்டியலில் உங்கள் உறவினர் பெயர் இருக்கும் எனில் அவர்களின் தகவல்களாக..
- வாக்காளரின் பெயர் : தகப்பனார் / தாயார் / அண்ணன் பெயர்
- வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் ( இருப்பின் ) :
- உறவினரின் பெயர் : மேலே எழுதிய பெயருக்கானவரின் உறவு பெயர் :
- உறவு முறை : என்ன வகையான உறவு என எழுதவும்
- மாவட்டம் : விழுப்புரம் ( 2002 ஆம் ஆண்டு )
- மாநிலம் : தமிழ்நாடு
- சட்டமன்ற தொகுதின் பெயர் : சங்கராபுரம்
( மாவட்டம் /
மாநிலம் / சட்டமன்ற தொகுதி உதாரனப்பெயர்களே.. )
மேலும், சட்டமன்ற தொகுதியின் பெயர் அல்லது எண் , பாகம் எண், வரிசை எண் எழுதவும்.

கையொப்பம் இட்டு சமர்பித்து விடலாம். இரண்டாம் கணக்கீட்டு படிவத்தில் அலுவலர் கையொப்பம் பெற்று நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு உங்களுக்கான படிவத்தில் தரப்பட்டுள்ள Booth Level Officer‘ஐ அனுகலாம்.
அல்லது அழைக்கவும் +91 98840 78865
மூரார்பாது – My Screen
Admin & Team






Leave a reply