
தூண்டில் மீன்கள் # MMS -000159
19-03-2023
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
மூரார்பாதுவின் தமிழ் ஆர்வலராக அறியப்படும் திரு.ரியாஸ் அஹமத் அவர்களின் எழுத்தில்
தூண்டில் மீன்கள்
1989ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு மார்ச் மாதத்தின் ஆரம்ப வெயில் காலத்தில் ஒரு நாள்..
மஹ்ரிப் நெருங்கக் கூடிய நேரத்தில் தன் சைக்கிளை மூரார்பாது வடக்கு வீதியில் வேகமாக ஓட்டிக்கொண்டு சென்ற அஹமத் தன் வீட்டு திண்ணையில் சைக்கிளை சாத்தி நிறுத்திவிட்டு வேகமாக சென்று விறகுகளை வெளியில் இருந்து வீட்டுக்குள் அடுக்கிக்கொண்டு இருக்கும் தன் அம்மாவிடம் கேட்கிறான்
“அம்மா! இன்னிக்கு நம்ம வீட்டுல என்னம்மா சமையல்..?
அதற்கு அவள் விறகுகளை அடக்கியவாறு தன் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு
“காலையில் வைத்த சாம்பார்தான்பா.. இப்பவே சாப்பிடுறியா..? பசிக்குதா இல்ல உங்க பாவா, இஷா தொழுது விட்டு வந்ததற்கு அப்புறம் அவர் கூட சேர்ந்து சாப்பிடுறியா..?” என்றார்..
அதற்கு அஹமத் “இல்லம்மா பக்கத்துல எல்லார் வீட்டிலேயும் மீன் வறுக்கிறார்கள் போல அந்த பக்கத்து வீட்டு அக்கா மீன் கழுவிக் கொண்டு இருக்கு, அக்கம்பக்கம் வீடுகளில் மீன் வறுத்து கொண்டு இருக்கிறார்கள் போல ஒரே வாசனையாக இருக்குது அதனால் தான் கேட்டேன். நம்ம வீட்டுல மீன் வாங்கலையாம்மா!”
“நம்ம வீட்ல யாரு இருக்கா ஏரிக்கு போய் மீன் புடிச்சிட்டு வரத்துக்கு, அவங்க வீட்ல பையங்க ஏரிக்கு போயி மீன்பிடிச்சிட்டு வந்தாங்க.. அதனால தான் இந்த நேரத்தில் எல்லா வீட்டிலும் மீனு.. நீயும் வேணும்னா நாளைக்கு போய் ஏரியிலும் மீன்பிடித்து விட்டு வா.. நானும் உனக்கு மீன் வறுத்து தரேன்.. போதுமா,” என்றாள் அவன் தாய்.
இதனை கேட்டு அவனது மனம் சமாதானம் ஆகவில்லை. உடனே சுல்தான் வீதியிருக்கும் தன் நண்பன் மணியிடம் சென்றான். யோசனை கேட்கிறான்.
அதற்கு அவன் “நாளைக்கு ஸ்கூல் லீவு தானே, நம்ப பாஷா பாய் கடைல போய் தங்கூசி வாங்கிகிட்டு அப்படியே பள்ளிவாசலுக்கு பக்கத்துல இருக்கிற அந்த சாக்கடையில் நாக்கு பூச்சிய நோண்டி எடுத்துக்கிட்டு மீன் பிடிக்க போவோம். நிறைய மீன் கிடைக்கும். நீ கொஞ்சம் நான் கொஞ்சம் எடுத்துக்கலாம். தங்கூசி வாங்கறதுக்கு மட்டும் காசு எடுத்துக்கிட்டு வா. சரியா தூண்டிலுக்கு வேண்டிய நீண்ட குச்சியை வழில எங்கேயாவது வெட்டி எடுத்துக் கொள்வோம்..” என்று ஆறுதல் படுத்துகிறான்..
எப்போது விடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறான் அஹமத்.. அல்லாப்பிச்சை மோதினார் பாங்கு ஒலி கேட்க ஒரு வழியாக காலை சிற்றுண்டியை முடித்தவுடன் தன் சைக்கிளில் குரங்கு பெடல் அடித்துக்கொண்டு நண்பன் மணியின் வீடு செல்கிறான் அஹமத்..
அங்கிருந்து இருவரும் அதை தள்ளிக் கொண்டு நேராக பாஷா பாய் கடைக்கு சென்று தங்கூசி வாங்கிக் கொண்டு சாக்கடையில் நாக்கு பூச்சிய நோண்டி எடுத்துக்கொண்டு வேகவேகமாக மூரார்பாது ஆற்றுப்படுகைக்கு செல்கிறார்கள்
ஆனால் அவர்களின் துரதிஷ்டம் எங்கு தேடியும் நீண்ட தூண்டில் குச்சி போன்றது எங்கேயும் கிடைக்கவில்லை தேடிக்கொண்டே
மீன்பிடிப்பு பகுதிக்கு சென்று விடுகிறார்கள்.. அங்கே அமர்ந்திருக்கின்ற சமீரும் – சபீரும் எங்களை பார்த்து “வெறும் தங்கூசி மட்டும் வைத்து எப்படிடா மீன்பிடிப்ப..? எங்கடா உன் நீண்ட துண்டில் குச்சியும் தக்கையும் மீன் பிடிக்க முள்ளும்இருந்தால் தான் மீன் பிடிக்க முடியும் எனவே அதையும் சென்று வாங்கிக்கொண்டு வாருங்கள்
ஆனால் அதற்குள்ளாக இங்கிருக்கும் எல்லோரும் மீன்பிடித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள்.. என்று இருவரும் இவர்களை பார்த்து சிரிக்கிறார்கள்
அப்பொழுது அங்கே வரும் முஜி பாய் அவர்கள் “தம்பிகளா இதற்கு ஒன்னும் கவலை வேண்டாம் அங்க நம்ம பாய் முகமது அவர்கள் வலை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார் அவரிடம் மீன்பிடி தூண்டில்கள் சும்மா தான் இருக்கு நீங்க வேணா அவர்கிட்ட போய் கேளுங்க, தருவாரு அத வச்சி மீன்பிடித்து விட்டு போங்க” என்று இவர்களை ஆறுதல் படுத்தி வேறு ஒரு வழியை காண்பிக்கிறார்.
அதனைக் கேட்ட மணி அகமதுவிடம் “முகமது பாயிடம் சென்று தூண்டில் தக்கையை கைமாற்றாகக்கேள், நாமும் மீன்பிடித்து விட்டு பின்பு அவரிடமே திரும்ப ஒப்படைத்து விடுவோம்” என்று கூறுகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி “நீ சென்று கேள்..” என்று கொஞ்ச நேரம் கடக்கிறார்கள். பின்பு ஒரு வழியாக அஹமத் தயங்கியவாறே முகம்மது பாய் என்றவாறே அவரின் அருகே சென்று நிற்கிறார்.
ஆற்றில் விரிந்து கிடக்கும் வளையின் நுனிப்பகுதியை தன் காலில் மடக்கி அதன் மேலே நின்று கொண்டு இரு கைகளாலும் அதை பிடித்தவாறே அகமதுவிடம் “என்னப்பா நீங்க எல்லாம் மீன் பிடிக்க வந்துட்டா ஆத்துல எப்படி மீன் இருக்கும்..? என்று நையாண்டி செய்கிறார்
“இல்ல பாய்.. அந்த மரத்துக்கு ஓரத்துல வச்சிருக்கீங்களே அந்த தூண்டில் குச்சிய தந்தால் நானும் மணியும் சேர்ந்து மீனு பிடிச்சுகிட்டு அப்புறம் உங்க கிட்டேயே கொடுத்திடுவோம்..” என்று பவ்யமாக கூறுகிறான் அஹமத்.
“யப்பா தம்பி.. இது கள்ளக்குறிச்சியில் இருந்து வாங்கிட்டு வந்தது.. நீங்க ஓடச்சிட்டீங்கன்னா என்ன பண்றது..? அதனால காசு கொடுத்து வாங்கிக்க நான் உனக்காகத்தான் இதையும் தரேன்..” என்று கூறுகிறார் முகமது பாய்..
எனவே, வேறு வழியின்றி இருவரும் கரையோரம் நிறுத்தி வைத்திருக்கும் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் மூரார்பாது நோக்கி செல்கிறார்கள்.
அப்போது வானவில் திரையரங்கில் நாயகன் படம் கண்டு களிக்க வாரீர் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. “ஓடுற நரியில ஒரு நரி குள்ள நரி தான்..” என்கிற பாடல் காதில் பாய்கிறது. வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள்
உண்டியல் சேமிப்பை எடுத்துக்கொண்டு முகமது பாய் கேட்ட தொகை அதிகமா குறைவா என்று கூட யோசிக்காமல் மீண்டும் அதே குரங்கு பெடல் மீண்டும் அதே தள்ளுமுள்ளு என்று சைக்கிளுடன் ஆற்றங்கரையோரம் சேர்வதற்குள் ஒரு பக்கமாக வானம் இருட்டிக்கொண்டு வந்துவிடுகிறது.
“முஹம்மது பாய் முஹம்மது பாய்” என்று மணி வேகமாக சத்தமாக முகமது பாயை கூப்பிட “என்னடா பசங்களா காசு கிடைச்சதா..?” என்னும் தோரணையோடு அவரும் இவர்களை நோக்கி வருகிறார்.
அஹ்மத் தான் கொண்டு வந்திருந்த நோட்டுகளையும் சில்லரைகளையும் எண்ணி முஹ்மத் பாய் இடத்தில் சரிபார்த்து தர அதனை சட்டென்று வாங்கிக் கொள்கிறார் முஹ்மத் பாய்,
பாய் தான் பிடித்த மீன்களில் சிலதை மனிக்கும் அஹ்மதுக்கும் தந்து “சரி மழை வர மாதிரி இருக்கு சீக்கிரம் கிளம்புங்க.. இனிமேல் மீன் பிடிக்க முடியாது.” என்று கூறி மீன்களை தந்து அனுப்பி விடுகிறார் நண்பர்கள் இருவரும் சரி நாளைக்கு நமக்கு தூண்டில் தருவார் என்ற நம்பிக்கையில் “பாய் நாளைக்கு வரட்டுமா..?” என்று கேட்கிறார்கள் “சரி வாருங்கள்” என்று கூறுகிறார்
“எங்க தூண்டில் எங்க பாய்..?” என்று கேட்கிறார்கள் இருவரும் ஒரே குரலில்..
“என்னது.. தூண்டிலா..? அதான் மீனா நீங்க வாங்கிட்டு போயிட்டீங்க.. அப்புறம் எங்க இருந்து தூண்டில் வரும்..?” என்று கூறுகிறார் முஹம்மத் பாய்
“நேற்று நான் மீன்களைத் தரும்பொழுது சந்தோஷமாக வாங்கிச் சென்று வீட்டில் சமைத்து சாப்பிட்டு விட்டு இப்போது வந்து தூண்டிலும் வேண்டும் என்று கேட்கிறீர்களே எப்படி ஓசியில் தூண்டில் வரும்?சாப்பிட்டபின் முள் மட்டும் தான் வரும்..” என்று சட்டம் பேசுகிறார்.
இருவரும் சோகத்துடன் கிளம்பி விடுகிறார்கள்.
அப்போது அருகில் இருந்த அவரது நண்பர் “நீ அவனுக்கு மீன் பிடிக்க தூண்டிலை தந்திருந்தால் அவனும் சில பேருக்கு மீன் துண்டுகளை தந்தும் இருப்பான். இன்னும் சில பேரை தூண்டில் போட தூண்டியும் இருப்பான்”
எது எப்படியோ
நேற்றும் இன்றும் நாறிபோன மீன்களை இந்த பையன்கள் தலையில கட்டிவிட்டாய். உனக்கு நாளை யார் கிடைப்பார்கள் என்று தெரியலையே..” என்று கூறிக் கொண்டிருந்தார்.
“இளைய தலைமுறைக்கு நாம் தரவேண்டியது மீன்களை அல்ல.. மீன்களை பிடிக்கும் வழிமுறைகளை..”
மூரார்பாது – My Screen’க்காக..
ரியாஸ் அஹ்மத்






நல்ல செய்தி 👍