
மூரார்பாதுவில் வெயிலாட்டம்..
MMS – 000178
05-05-2024
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
மூரார்பாதுவில் வெயிலாட்டம்.. ( கடும் சூடும் – சுற்றித் திரிந்த காடும்.. )
கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது.
அக்காலம் எனில் குட்டீஸ்கள் பெரும்பாலும் தன் அம்மாவுடன் தாய்மாமா ( நாநா – நானி )வீட்டிற்கு ஆசை ஆசையுடன் போவார்கள்.
கோடையில் ஊர் போன இடத்தில் நல்ல பிள்ளையாய் மாமன் பிள்ளைகளுடன் நட்பு பாராட்டி ஒரு 10 நாள் போக ஊர் திரும்புவதுண்டு..
அப்புறம் மூரார்பாது பாசறை திரும்பினால், காலையில் அரபி பாட வகுப்பு முடிந்தால்..
புளிய மரத்தில் பேய் ஓட்டவும்..
மைதானத்தில் கிரிக்கெட் ஆடவும்..
மீன் இல்லா குட்டையில் மீன்கள் தேடவும்..
பசிக்காத கன்று குட்டிக்கு பால் ஊட்டவும்..
வானவில் தியேட்டரில் வேலி பிரிக்கவும்..
புதையல் வேட்டை என ஊர் மேயவும்..
ரேஷன் கடையில் சக்கரை பொறுக்கவும்..
யாசின் கடையில் காலை நேரம் பூரியும் – கிழங்கும் ருசி பார்த்ததும்..
இரவினில் கரும்பு ஆட்டம் ஆடவும்..
ஒத்த பெடலு போட்டு சைக்கிள் ஓட்டவும்..
பல்லாங்குழியில் ஆட்டம் காட்டவும்..
பள்ளிவாசலில் மோதினாருடன் கண்ணா மூச்சு ஆடவும்..
பள்ளிக்கூட வேப்ப மரம் ஏறவும்..
வீட்டில் டூரிங் டாக்கீஸ் ஓட்டவும்..
கோலி குண்டாடி கேடி ஆகவும்..
ராஜா – அபிராமி – ஸ்ரீதரன் திரையரங்க போஸ்டரை பார்த்தே முழு கதை சொல்வதும்..
மல்லாக்கொட்டை உறித்து காசு பார்க்கவும்..
வீதி வீதியாக அலைந்தும் எவனும் கிடைக்காமல் “டேய், எங்கடா எல்லாம் போனீங்க..'” என ஊர் வலம் வந்ததும்..
சைக்கிள் டயர் வைத்து வண்டி ஓட்டியதும்..
முள்ளு குச்சி வெட்டி “கட்டு 5 ரூபாக்கா.. ஒரே ரேட்” என வியாபாரி ஆனதும்..
மாரியம்மன் கோவில் கிணற்றில் நீர் சுமந்து வீடு சேர்த்ததும்..
காலை முதல் மாலைவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஹபிபுல்லா பாய் கடையில் தந்தி பேப்பர் நைய நைய புரட்டி புரட்டி படித்ததும்..
குட்டி சைக்கிளேதான் வேண்டும் என சைக்கிள் கடையில் காத்து கிடந்ததும்..
“அடுத்த வாரம் பாண்டிச்சேரி போகலாம்” என தாத்தி சொன்னதால் நாட்கள் எண்ணி காத்து கிடந்ததும்..
புல்லும் கோட்டியும் வைத்து கள்ளாட்டம் ஆடியும்..
“சரி.. பள்ளிவாசலாவது போவோம்” என அதீத வெயிலால் பத்து முறைக்கு மேல் முகம் கழுவியதும்..
அம்மாவோடு காட்டுக்கு போய் துவைத்த துணிகளை சுமந்து வந்ததும்..
மாலை நேர செல்வம் அண்ணா கடையில் 30 காசுக்கு பகோடா வாங்கியும்..
நெல்லு அரைக்க மூட்டை சுமந்தும்..
ஆற்று மணலில் ஆஆஆழமாக தோண்டி தண்ணீர் மோந்து குடித்தும்..
“அய்யோ.. யம்மா சூடு பிடிச்சிக்கிச்சே..” என தொப்புள் உட்பட அங்கேயும் எண்ணை தடவியும்..
என நம் அக்கால கோடை விடுமுறை நம்மை மகிழ்வித்தே செல்லும்..
ஆனால், இப்போது
காலை 10 மணிக்கு மேல்தான் பிள்ளைகள் எழுகிறார்கள்..
மேலே குறிப்பிட்ட
அரபி பாட சாலை – மாமா வீடு – புளிய மரம் – மைதானத்து கிரிக்கெட் – மீன் குட்டை – கன்று குட்டி – கீற்றுக் கொட்டாய் – புதையல் வேட்டையாட்டம் – ரேஷன் கடை – கரும்பு லாரி – குட்டி சைக்கிள் – பல்லாங்குழியாட்டம் – பள்ளிவாசல் – வேப்பமரம் – கோலியாட்டம் – மல்லாக்கொட்டை – சைக்கிள் டயர் – டீக்கடை பெஞ்சு – ஆற்று நீர் என எதுவும் கிடையாது.
வீட்டில் அடைந்தே கிடக்கிறார்கள். மொபைலில் யூ டியூப்பில் அதிக நேரம் – தொலைக்காட்சியில் ஏதோ கொஞ்ச நேரம் என A/C அறையில் அடைபட்டு கிடக்கிறார்கள்.
இன்ப சுற்றுலா என திட்டமிட்டு சென்றாலும் அது வண்டி பிடிப்பதில் ஆரம்பிக்கும் சோகமாக அறை எடுப்பது – சுற்றுலா தளத்தில் கூட்டத்தில் மல்லு கட்டுவது – நல்ல உணவுக்காக அலைவது என அது இறுதியில் துன்ப சுற்றுலாவாக மாறிவிடுகிறது.
ஆரம்பத்தில் இனிக்கும் விடுமுறை நாட்கள் ஓரிரு நாட்கள் போக போக பிள்ளைகளுக்கு கசக்க ஆரம்பித்து விடுகிறது.
என்ன செய்யலாம்..?
புளிய மரத்தில் பேய் பிடிக்க ஆரம்பித்து பறையன் குட்டையில் நான் தலை முழுகி எழுவதுவரை நமக்கான கோடை கொண்டாட்டம் நீடித்து நிற்கும்.
ஆனால், இன்றைய தலைமுறைகளுக்கு.. மேற்கூறிய நிகழ்வுகளில் எத்துனை சாத்தியம்..?
மூரார்பாதில் வசிக்கும் பிள்ளைகளுக்கே இது சாத்தியமில்லை என்கிறபோது நகரம் சார்ந்து வாழும் பிள்ளைகளுக்கு போக்கிடம் ஏதுமில்லை..
இந்த கால கடும் வெயிலில்
வீட்டில் அடைந்து கிடைக்கும் அவர்களுக்கு
யூ டியூப் மற்றும் மொபைல் போன் ஆட்டங்களே பொழுது போக்காகிறது.
1970 களில் முன்பு அல்லது பின்பு சொந்தங்கள் தேடி வீடு வருவார்கள். நம் பெற்றோர்களும் சொந்தங்கள் இல்லம் தேடி கோடைகாலத்தில் போவார்கள்.
ஆனால், இப்போது..?
ஏன் அந்த காலாச்சாரமும், கோடை கால ஆட்டங்களும் இப்பொது இல்லை..
இன்ஷா அல்லாஹ், இந்த கோடை விடுமுறையில் நம் பிள்ளைகளுக்கு என்ன செய்யலாம்..?
மூரார்பாது – My Screen
Admin & Team
PICTURES OF THE WEEK
RIYAS AHMAD
வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக
70 80 90களில் வாழ்ந்த வளர்ந்த பிள்ளைகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான் ஆம்
அப்போதைய வீதிகள் விசாலமாக இருந்தது
நீர்நிலைகள் மாசு இல்லாமல் இருந்தது
வீட்டின் முன்புறமோ அல்லது பின்புறமோ நல்ல இடைவெளி இருந்தது
ஆதனால் அந்த காலத்து பிள்ளைகளாகிய நமக்கு
கோடை வெப்பத்தைத் தாண்டி கோடை விடுமுறை தான் குளிர்ச்சியை தந்தது
ஆனால் இந்த காலத்து பிள்ளைகளுக்கு அதையெல்லாம் நாம் தரவில்லை
அல்லது அவர்களுக்காக எது எப்படி இருந்ததோ அதை அப்படியாகவே வைக்கவில்லை மாறாக எல்லாவற்றையுமே மாசுபடுத்தி விட்டோம்
இடத்தை பாதுகாக்கிறேன் என்கின்ற பெயரில் வளைத்து வளைத்து வீடு கட்டி ஏதும்
முழு மனையையும் வீடாக கட்டிவிட்டு வாகனத்தை வீதியில் நிறுத்துவதும்
வீட்டின் வராண்டாவை அகலப்படுத்துகிறேன் என்ற பெயரில் வாசலில் உள்ள படிகளை அதிகம் அமைத்து வீதியின் அகலங்களை குறைத்தும்
அதையும் தாண்டி பிள்ளைகள் தெருவில் விளையாடினால்
அவர்களை ஏசுவதும் பேசுவதாக இருந்தால்
பிள்ளைகள் வீதியில் எங்கே விளையாடுவார்கள்
யூட்யூபில் தான் விளையாடுவார்கள்
குறைந்தபட்சம் இதனை எழுதலாம் என்ற சிந்தனைக்கு எனது நன்றிகள்
70.80.90 காலகட்டம் தான் பிள்ளைகளின் சொர்க்கம்
வளரும் தலைமுறைக்கு
நாம் காட்டவில்லை இறக்கம்
TAJUDEEN – BANGALORE
இன்றைய பதிவின்
கடைசியாக வந்த மேட்டருக்கு பதில்
நாம் நம் பிள்ளைகளுக்கு எதுவும் செய்ய முடியாது
ஏனெனில் இப்போது எல்லாம் அவர்களாகவே
(நம்ம வீட்டு செல்லங்களே)
என்ன செய்வது என்று ஒரு முடிவு எடுத்து கொள்வார் அதற்கு தடை போடாமல் இருப்பது சாலாச் சிறந்தது என்று நினைக்கிறேன் இது????????????
RYAS AHMAD
தவிர அன்றைய கோடை விடுமுறையை உறவினர்கள் வீட்டில் கொண்டாடிய கடைசி தலைமுறை நமது தான்
இன்று அதுவும் எட்டாக்கனியாகிவிட்டது
உறவினரை சென்று சந்திக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அவருக்கு தகவல் தெரிவித்து தான் செல்ல வேண்டி இருக்கிறது
ஒரு தேநீர் சந்திப்புக்கு கூட.
மாறாக யாரையும் நம்பி யாரும் தம் பிள்ளைகளை நாட்கணக்கில் விட்டு விட்டு இருக்க
யார் மீதும் யாருக்கும் நம்பிக்கை இல்லை
அப்படியே இருந்தாலும் இந்த காலத்தில் அந்த சதவீதத்தின் அளவு மிக மிகக் குறைவு
இது இன்றைய மிடில் கிளாஸ் வகுப்பின் சாபக்கேடு
ஒரு காலத்தில் எல்லா குடும்பத்துக்குள்ளாகவும் பல கிளைகள் இருந்தாலும் அதற்காக ஒரு தலை மகன் இருந்தார்
அவரின் வழிகாட்டுதல் படியே அந்த சந்ததி முழுவதும் வாழ்ந்தது
குறிப்பாக முக்கிய முடிவுகள் அனைத்தும் ஆண்கள் கையிலேயே இருந்தது
கணவர்கள் தான் குடும்பத்தின் தலைமகனாக இருந்தார்கள்
அவர்களும் அவர்களது தந்தையோ அல்லது மூத்த அண்ணனையோ தான் தனக்கு குருவாகவோ தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்
தந்தை இருக்கும் வரை அது அவரின் கட்டளை இப்படி நடக்க தாயும் அதற்கு உதவியாக இருந்தார்
தலைமகன் அந்த பொறுப்புக்கு வந்தார் அதனை அதற்கும் தாய் உறுதுணையாக இருந்தார்கள்
ஆக எத்தனை குடும்பங்கள் எங்கெங்கு பிரிந்து இருந்தாலும்
அந்த ஒற்றை தலைமையின் கீழ் ஒற்றைக் கொடையில் சந்தோஷமாக இருந்தது
தலைமைத்துவம் என்பது மாறி
எல்லோரும் எல்லாருக்கும் சமம் என்று
விருந்தோம்பலை கூட விரும்பாத சமூகமாக இருக்கிறது
நமது சமூகம்
இதனை மறு கட்டமைக்க
யார் தான் வகுப்பார் வியூகம்????
இந்த கணினியுகத்தில் இப்படியும் ஒரு படைப்பாளாயா???
என்ன ஒரு சிந்தனை