
மந்திரக் கம்பளம் # 000 194
MMS – 000194
01-06-2025
அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்
+ 91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
1985-90’களின் ஒரு கருத்த இரவு..
மூரார்பாது பள்ளி மைதானம் அருகே மரத்தின் பின்னே ஒளிந்து கொள்ள 15 பேருக்கும் குறையாத ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கும்..
மூரார்பாது ஆற்றுப்பாலம் தாண்டி தூஊஊரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சப் புள்ளியானது ஓராயிரம் நம்பிக்கை விதைக்கும்..
அந்தப் புள்ளியானது சிறுக சிறுக பெரிதாகி கொண்டே வந்து இரண்டாக பிரிகையில் ஏதோ பெரிய வண்டிதான் வருகிறது என்றும் அது நம்ம வண்டியாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையும் இரட்டிப்பாகும்..
“ஏய்.. டிரைவர் பாத்துடபோறான்.. மரத்துல ஒட்டுடா..” என ஒட்டிக்கொள்ள கூட்டம் பரபரத்து தூரத்து வண்டியின் எஞ்சின் சத்தத்தை கூர்ந்து கவணிக்கும் என்றும்..
ஓடுகிற வண்டி ஓட. கூடவே தானும் ஓடவென.. ஓடி ஓடி உழைப்பதெல்லாம் அந்த கரும்புக்காகத்தான்..
தன் காடு நிறைய கரும்பு விளைந்தாலும் ஓடுகிற வண்டியில் உருவுகிற கரும்பு தரும் ஒரு கெத்துதான் சுகம்..
அடிக்கரும்புக்கு சுவை அதிகம் எனில் புடுங்கு கரும்புக்கு மிக மிக சுவை அதிகம்.
எளிதில் கிடைக்கும் எதற்கும் மதிப்பு இருக்காது என்பார்களே அது மிக மிக உண்மைதான் போல..
ஓடுகிற வண்டியில் சிரமப்பட்டு ஏறி சரியான வாட்டத்தில் இருக்கும் கரும்பினை இனங்கண்டு பிடிங்கி எடுத்தல் மிக சவாலான காரியமாகும்.
அட இதற்கா இவ்வளவு அளப்பறை என்போருக்கு..
கரும்பு புடுங்க சரியான திட்டமிடல் வேண்டுமய்யா.. அது சாதாரண காரியம் அல்ல என்றும்..
கரும்பு ஏற்றிவரும் எல்லா வாகணங்களிலும் போகிற போக்கில் ஏறி இறங்கிவிட முடியாது. சில டிராக்டர்கள் நம்மை அடையாளங்கண்டு கொண்டால் நம் கூட்டத்தார் ஏற முடியாத வேகத்தில் செல்வார்கள். அவர்களின் வேகத்தினை கட்டுப்படுத்த செய்யும் ஏற்பாடுகளில் மிக மிக முக்கியமானது சாலை வளைவுகளில் சிறிதும் அல்லாமல் மிகப்பெரிதும் அல்லாமல் ஒரு தோராயமான அளவில் குழி பறித்து வைத்தலாகும் என்றும்..
கரும்பு புடுங்க ஏறும் நம் சகோதரனுக்கு நல்ல ஓட்டத்திறன் உள்ள வண்டியிலும் ஏறும் – இறங்கும் லாவகம் தெரிந்திருக்க வேண்டும். ( அப்துல் ரஷித் ஆகிய நான் ஒரு முறை லாரியில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் ஆற்றுப்பாலம்வரை சென்று காயத்துடன் இறங்கினேன். அது நம் சங்கத்தாருக்கு ஏற்ப்பட்ட பின்னடைவு மற்றும் ஏற்புடையதல்ல.. அன்றைய தினம் நம் சங்கத்திற்கு கருப்பு தினமாகும் ) என்றும்..
“உண்ணுங்கள் – பருகுங்கள் ஆனால், வீன் விரையம் செய்யாதீர்கள்”
அல்லாஹ் த ஆலா தன் திருமறையில் மிகத்தெளிவாக மேற் கண்ட வாக்கியத்தைக் கூறியுள்ளான். அதன்படி இன்று கூடி இருக்கும் நம் சகோதரர்களின் கூட்டத்தினையும் அதிலுள்ள கரும்பார்வலர்களின் எண்ணத்திற்கு ஏற்ப கரும்பினை புடுங்குதல் வேண்டும். பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கும் கரும்பு வேட்டை அடுத்த இரண்டு நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான கரும்பினை சேகரிப்பதுவரைக்கும் இருக்கும். எவ்வளவு பேர் இருக்கிறோம் என்றும் நமது கூட்டத்தாருக்கு தேவையான அளவுக்கு மட்டுமே புடுங்குவார்கள்.. தேவைக்கு அதிகமான அளவில் கரும்பினை புடுங்கி பின்னர் அதனை வீனாக்கும் செயல் 90% நடக்காது என்றும் என்றும் மூரார்பாது – My Screen’ன் 104 வது கட்டுரையாக 26-02-2021 தேதியில் பதிவிட்டிருப்போம்.
அதே கால கட்டம் 1985களில் நம் பள்ளிவாசல் வடக்கு பக்கம் இருந்த ஆரம்ப பள்ளிக்கூடம்.
இரண்டாம் வீதி பக்கம் பிரதான நுழைவாயிலும், நம் பள்ளிவாசல் பக்கமிருந்து ஒரு துனை நுழைவாயிலும், தெற்கு பக்க பள்ளிவாசல் தின்னையிலிருந்து உள்ளே குதிக்கவும் வழி இருக்கும்.
ஒரு சிறு திறந்த வெளியும் ( நம்மை பொருத்தவரை கஞ்சி காய்ச்சும் இடம் ) பின் மேற்கு பக்கம் ஓடுகள் வேய்ந்த தாவாரம் போன்ற இடமும் அதில் 1,2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான மாணவ – மாணவிகளும் பின் மேற்கு பக்கம் தின்னைவைத்து இடையே இடைவெளியிட்டு அதன் வழியே உள் அறைக்கு செல்ல வழியும் இருக்கும். தின்னையின் தெற்குபுற தின்னையில் சந்தன கூண்டு ஒன்றினை இருத்தி வைத்திருக்க வடக்கு பக்க தின்னையில் 5 ஆம் வகுப்புக்கு பாடம் எடுப்பார்கள்.
உள் நுழைந்தவுடன் தெற்கு பக்கம் பள்ளிவாசல் சுவர் ஒட்டிய இடமே 4 ஆம் வகுப்புக்கான இடமாகவும், வடக்கு பக்கம் மஹத்மா காந்தி , அண்ணை இந்திரா காந்தி, அண்ணல் அம்பேத்கார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் படங்களுடன் தலைமை ஆசிரியர் லாலா மியான் காஜியார், திரு.சிகாமணி, ஆசிரியர் ஆனந்தராஜ் – ஆசிரியைகள் கஸ்தூரி, இந்திரா போன்றவர்களும் மற்றும் நிர்வாகம் ரீதியாக வரும் பொது மக்களுக்குமான இடமாக இருக்கும்.
என் நான்காம் வகுப்பில் ஒரு நாள் கஸ்தூரி ஆசிரியை ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
“பசங்களா.. உங்களுக்கு கரும்பு பிடிக்குமா..? எத்தனை பேருக்கு கரும்பு பிடிக்கும் கை தூக்குங்க..” என்றார்.
ஏறக்குறைய எல்லோரும் தூக்கினோம்.
“நல்லது.. நமக்கு கரும்பு எப்படி கிடைக்குது… சொல்லுங்க பாக்கலாம்..” என ஒரு கேள்வி வைத்தார்.
நான், ஹசன் முஹம்மது, அன்வர் அலி், அபுபக்கர், முபாரக் அலி, அப்துல் காதர், மன்சூர் அலி மற்றும் நாராயனசாமி, பிரகாஷ், மாரியாப்பிள்ளை மற்றும் செல்வராஜ் எல்லோரும் அப்போது வகுப்புத் தோழர்கள்.
“டீச்சர்.. கரும்பு கரும்பு டிராக்டர்லருந்து கிடைக்குது டீச்சர்” என்றான் நன்பன் ஒருவன்..
“என்னது.. கரும்பு, கரும்பு டிராக்டர்லருந்து கிடைக்குதா.. என்னடா சொல்றே நீ..” என அதிர்ச்சியான கஸ்தூரி டீச்சர் நம் மூத்த சகோதரர்களின் கரும்பு வேட்டையாட்டம் பற்றி அறிந்து மிக அதிர்ச்சி அடைந்தார்.
“டேய்.. பசங்களா.. அதெல்லாம் தப்பு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட.. அப்படியெல்லாம் செய்யக்கூடாது” என அறிவுரை பாடமும் எடுத்தார்.
“நீங்களெல்லாம் சொல்ற மாதிரி நமக்கு கரும்பு லாரிகளிலிருந்து கிடைக்கல.. கரும்பு நமக்கு காட்டிலிருந்து விவசாயம் மூலம் கிடைக்குது..” என்றவர் “எங்கே சொல்லுங்க.. கரும்பு நமக்கு எப்படி கிடைக்குது..?” என கேட்டார்.
“நமக்கு கரும்பு லாரிகளிலிருந்து கிடைக்கல.. கரும்பு நமக்கு காட்டிலிருந்து விவசாயம் மூலம் கிடைக்குது.” என்றோம் கோரஷாக..
“ம்ம்ம். நல்லது.. நமக்கு சக்கரை, வெல்லம், தாள், மெழுகு போன்றவை எங்கிருந்து கிடைக்கிறது..?” என மேலும் ஒரு கேள்வி வைத்தவர்..
“சரி, சக்கரை, வெல்லம் கரும்பிலிருந்து கிடைக்கிறது. அப்ப.. தாள், மெழுகு ..? என்ன.. தெரியலையா..? அதுவும் நமக்கு கரும்பிலிருந்துதான் கிடைக்குது..” என்றார்.
“சொல்லுங்க.. வெல்லம் தயாராவதை பார்த்துறிக்கீங்களா..?” என்றவர் “சரி, சக்கரை தயாராவதை எத்துனை பேர் பாத்துறுக்கீங்க..?” என்றவர்..
“ம்ம்ம்.. யாரும் பாக்கலைதானே.. சரி, நாம நேர்ல போய் அடுத்த வாரம் பாக்கலாமா?” என்ற கஸ்தூரி டீச்சர்.
“என்ன முழிக்கிறீங்க.. நாம அடுத்த வாரம் மூங்கில் துறைப்பட்டு சக்கரை ஆலைக்கு சுற்றுலா போறோம்..” என்றார்.
மந்திரக் கம்பளம் – அந்த 7 நாட்கள்
பொதுவாக மூரார்பாது தாண்டி நமக்கு அந்த வயதில் போக்கிடம் என்றால் அது கள்ளக்குறிச்சிதான். அதுவும் அம்மாவுடன் அப்படி போய் அவர் வாங்கும் பொருட்களின் சுமை தூக்கியாக இப்படி மீண்டும் மூரார்பாது வந்து விடுவோம்..
சுற்றுலா என்பதெல்லாம் ஒரு பெரிய கனவு நமக்கு அப்போது.
இதோ இப்போது வந்துவிட்டது. இன்னும் 7 நாள் போனால் சுற்றுலா நாள்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு போய் அம்மாவிடம் எல்லாம் விவரித்து முடிக்கையில்..
சரி, இதுக்கு பணம்.எவ்வளவு கட்டனும் என்றார்
“ம்ம்.. 5 ரூபான்னு சொன்னாங்கம்மா..” என்ற பொழுதில்
டேய்.. நீ சின்ன பையன்…உஷாரா போய் உஷாரா வர மாட்டே. அதுவுமில்லாம.. அது பெரிய பெரிய மிஷினுங்கள்ளாம்.இருக்குற ஆலை.. ஆபத்து அதிகமா இதுக்கும்..” என மறுத்துவிட்டார்.
“இல்லம்மா.. காலையில 6 மணிக்கு போனா சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் வந்துடலாம்மா..”
என கெஞ்சினேன்..
ம்ம்ம்ஹூம் என்றார் என் அம்மா..
இன்னும் 5 நாட்கள்
பின்னர், தாத்தியின் மூலம் அம்மாவை சரி செய்து ஒரு வழியாய் என் பெயரையும் பதிவு செய்தேன்.
இன்னும் 3 நாட்கள்
கனவில் ஒரு மந்திர கம்பளம் எங்கள முன் வந்து நிற்பது போலவும் அதில் நான், ஹசன் முஹம்மது உட்பட நண்பர்கள் மந்திரக் கம்பளம் ஏறி உல்லாச சுற்றுலா பயனம் பறப்பது போலவும் கணவு கண்டேன்..
இன்னும் 1 நாள் என அந்த நாளும் முடிய கிளம்பினோம்..
எப்படி எந்த நேரம் மூரார்பாதிலிருந்து கிளம்பினோம் என்பது நினைவில் இல்லை என்றாலும் காலை ஒரு 8 மணிவாக்கில் மூங்கில் துறைப்பட்டு சேர்ந்ததும் ஆலையின் மேற்கு பக்கம் ஒரு ஆறும் அதில் மிதமான நீர் ஓடியதும், அந்த சிறு வயதில் நண்பர்கள் ஆனந்த குளியல் போட்டதும் நினைவில் உள்ளது.
காலை உணவு முடித்து ஆலைக்கு அழைத்து செல்லப்பட்டோம்.
ஆலையின் வெளியே மிக நீண்ட வரிசையில் கரும்பு டிராக்டர்களும், லாரிகளும் காத்திருந்தன..
இரண்டு மாணவர்கள் ஒரு ஜோடி என மற்றவர் கரம் மற்றவர் பிடிக்க இரட்டை வரியாக ஆலையின் பிரதான வாயில் என்களை உள்ளே இழுத்துகொண்டது.
“டேய்.. என்னடா இது..? நாம லாரியிலிருந்து ஒரு கரும்பு புடுஙக என்னா கஸ்டப்படுவோம்.. இங்க பாரேன்.. ஒரே நேரத்துல எவ்வளவு கரும்ப இந்த மெஷினு தூக்கி போடுது..”
அப்படி தூக்கி போடப்பட்ட கரும்புகளை குறுக்கு நெருக்கில் இருக்கிய இரும்பு தகடுகள் மேலும் மேலும் வெட்டி வெட்டி அதை இன்னும் சிறுசாக்கின..
அந்த சிறுசான கரும்புகள் ஒரு இரும்பு நகர்வு பாலம் வழியாக அறவை மெஷினின் அகன்ற வாயிக்குள் போக ஒரு பக்கம் கரும்பு சாறும் மறு பக்கம் சக்கையும் வெளியேறியது..
இங்கே பாருங்க. இங்கேயுள்ள இந்த கரும்பு சக்கை மூலமாக நமக்கு..
இங்கே பாருங்க. இங்கேயுள்ள இந்த கரும்பு சாறு மூலமாக நமக்கு..
இங்கே பாருங்க. இங்கேயுள்ள இந்த கரும்பு சாறின் பாகு மூலமாக நமக்கு..
இங்கே பாருங்க. இங்கேயுள்ள இந்த பாகினை நாம் குறிப்பிட்ட அளவு குறிப்பிட்ட நேரம் சூடேற்றுவதன் மூலமாக நமக்கு சர்க்கரை கிடைக்கிறது.
இங்க பாருங்க. கிடைத்த சக்கரையை சுத்தம் செய்யும் முறைமுறை..
இங்கே பாருங்க.., சுத்தம் செய்த சக்கரையானது பேக்கிங் செய்யும் முறை..
டேய்.. சக்கரை கொஞ்சம் கேளுடா சாப்பிட்டு பார்ப்போம் என எங்களுக்குள் கிசு கிசுத்து கொண்ட நேரம்..
‘என்ன. சக்கரையை பார்த்தவுடன் சாப்பிட தோனுதா..? என ஒரு பெரிய படியில் அள்ளி எங்கள் பக்கமாக கோண்டுவரப்பட கை நிறைய அள்ளி எடுத்தோம்..
பின்னர், அப்படி கட்டப்பட்ட சக்கரை மூட்டைகள் ஒரு ஓடும் பெல்ட் மூலம் வரிசையாக கிடத்தப்பட்டு ஒரிடத்தில் கொண்டு போய் சேகரிக்கப்பட்டது.
பின்னர் இதுவே முறைபடுத்தப்பட்டு நமக்கு அரசு மூலமாக ரேசனில் தரப்படுகிறது என்றும் பாடம் எடுத்தவர்கள்
வேளான்மை பணப்பயிரில் மிக முக்கியமான மற்றும் மேன்மையான இடம் பிடித்துள்ள பயிர் கரும்பாகும். கரும்பு வேளான்மையில் வேலை அதிகம். தண்ணீரும் நன்செய் நிலமும் இருந்து கரும்பினை விளைவித்து அதற்கு வெட்டு ஆனைப்பெற்று ஆலைக்கு அனுப்பி பணமீட்டுதல் என்பதும் சாதாரன காரியமில்லை. வேளான் செலவு – ஆள் கூலி – வெட்டுக்கூலி – வண்டிக்கூலி – தரகர்கள் கூலி எனக்கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்
சில நேரங்களில் விவசாயிகளுக்கு வெட்டு ஆணை கிடைக்காது . கரும்பினை பருவத்தே வெட்டி எடுக்க வேண்டும். நாட்கள் தவறினால் கரும்பு முற்றி பூ வைத்து சக்கையாகிவிடும். அப்படி சக்கையான கரும்பானாது எடைக்குறைவாகவே இருக்கும். எடை எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு நட்டமாகிவிடும். சில நேரங்களில் நாம் கண்டிருப்போம். தான் வளர்த்த கரும்பினை தோட்டமாக ஒரு விவசாயி தீயிட்டு கொளுத்துவதை கண்டிருப்போம்.. காரணம் வெட்டுக்கூலி – வண்டிக்கூலிக்குகூட அந்த நேரத்தில் கரும்பு விலைப் போகாததாக இருக்கும்.
கரும்பு நமக்கு எல்லா நேரங்களிலும் இனிக்கிறது. ஆனால் .. விளைவித்த விவசாயிக்கு சில நேரங்களில் கசப்பாகிவிடுகிறது என்றும் முடித்தார் கஸ்தூரி டீச்சர்..
“சொல்லுங்க.. இனிமே கரும்பு டிராக்டர், லாரியிலிருந்து கரும்பு பிடுங்குவீங்களா.. ?”
மாட்டோம்…டீச்சர்.. என்றோம்..
2025 ஜூன் மாதம் 1 ஆம் – ஞாயிற்றுக்கிழமை
மூரார்பாது – கள்ளக்குறிச்சி பிரதான சாலை..
சாலை மிக மிக மாறிவிட்டது. நமக்கும் 50 வயதாகிவிட்டது.
தூரத்தில் ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ.. என்கிற ஓசையுடன் ஒரு டிராக்டர் வருகின்ற ஓசை கேட்டது.
சுற்றும் முற்றும் பார்த்தபோது இரண்டு இளைஞர்கள் கையில் வைத்திருந்த கைபேசியில் மூழ்கி இருந்தார்கள். அவர்களால் வருவது கரும்பு டிராக்டராக இருந்தாலும் அதற்கு ஒன்றும் ஆபத்தில்லை என உணர்ந்தேன்..
வருவது கரும்பு டிராக்டராக இருந்தால் டிராக்டரை நிறுத்தி ஒரு கட்டு கரும்பு வாங்கி சாப்பிட வேண்டும் என காத்திருந்தேன்..
சப்தம் பெரிதாகி கொண்டே வந்தது..
ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ ட்ட்டரஅஅ..
மூரார்பாது – My Screen
Admin & Team
Leave a reply