
पिन कोड 606208 – 400088 # MMS 000196
MMS – 000196
03-08-2025
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865
எனது தாதி ரம்ஜான் பீவிக்கு பம்பாயில் உறவுகள் அதிகம். வண்டிக்காரர் காசிம் மாமா முதல் 105 வயது வரை ஆரோக்கிய பெருவாழ்வு வாழ்ந்தவரான காத்தூன்பீ ( எ ) பீபிஜான் என்றழைக்கப்பட்ட எனது பெரிய தாத்தியம்மாவும், மருத்துவ அண்ணார் முஹமது ஹவுஸ் வகையறாவிலும் பல சொந்தங்கள் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக எனது சின்னத்தாயார் பீபிஜான் வசித்தது E- CL – 3&4 என்கிற 6 ஆம் நம்பர் சீத்தா கேம்ப் ஆகும். பம்பாயிலிருந்து வரும் உறவுகள் மூரார்பாது கண்டிப்பாக வருவார்கள் என்பதைவிட நேராக மூரார்பாதுதான் வருவார்கள். அந்த சிறுவயதில் என்னிடம் “ரொம்ம்ம்ம்ம்ப தூரத்திலிருந்து ரெண்டு ராத்திரி ரெண்டு பகல் முழுக்க பயணம் செய்து வர்றேண்டா மாமா இந்த மருமகனை பார்க்க..” என்பார் என் காசிம் மாமா. “ஊர் நாடு மாதிரி பம்பாய் வராதுப்பா.. நல்லா சம்பாதிக்க பம்பாய், நிம்மதியா வாழ ஊர் நாடு” என்பார்கள் என்றும்..
வரும் சொந்தங்கள் ஆயிரம் பம்பாய் புகழ் பேசினாலும் எனக்கு பம்பாய் போக வேண்டும் என்கிற ஈர்ப்பு கொஞ்சம்கூட வராது.
அந்த ஈர்ப்பு வராது என்பதெல்லாம் என் அக்கா ஷகிலா திருமணமாகவே முதன் முதலாக பம்பாய் செல்லும் வரைதான். ஷகிலா அக்காவுக்கு 07 ஆம் தேதி பிப்ரவரி மாதம் வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் 1985’ல் மும்பை சீத்தா கேம்ப் என்கிற ஊரில் D Sector H Line – Room No 7 என்கிற முகவரியில் மணமகன் சாஹூல் ஹமீது அவர்களின் இல்லத்தில் நிக்காஹ் நடந்தது. பட்டனத்தில், அதுவும் இல்லத்தில் திருமணம் என்றால் பெரிய வீடாகத்தான் இருக்க வேண்டும் என்றது என் மணக்கணக்கு. எனது பாட்டி – அம்மா மட்டும் பங்கேற்ற எனது தந்தை ஹபிபுல்லாஹ் அவர்கள்கூட பங்கேற்காத எங்கள் இல்ல முதல் திருமணம் என் மூத்த அக்காவின் திருமணம். பிள்ளைகள் அத்துனை பேரையும் அழைத்து செல்வது பெரும் பொருளாதார செலவு என்பதால் சகோதர சகோதரிகள் என நாங்கள் யாரும் அழைத்து செல்லப்படவில்லை என்றும்..

“Trombay இந்த இடம் பேருபா.. உள்ளேதான் சீத்தா கேம்ப்.. “ என்றார் சிச்சா..
ஏறக்குறைய முழுதாக இரண்டு பகல் ஒரு இரவு..
பயண அலுப்பு அந்த சின்ன வயதில் தெரியவில்லை..
டாக்ஸி மிதமான வேகத்தில் நுழைந்து நுழைந்து செல்கையில் குடியிருப்புகள் மிக அருகில் கானக்கிடைத்தது.
சின்ன சின்ன கடைகள்..
சின்ன சின்ன சந்துகள்.. அதன் நடுவே ஓடும் சாக்கடைளும், முன்னும் பின்னும் என எதிரெதிரே சின்ன வீடுகளும் எனக்கு ஓரளவு கானக்கிடைத்தது.
“சிச்சா.. அக்கா வீடு மாடியில இருக்குமா.. இல்ல இங்கதானா..”
“அக்கா வீடும் சீத்தா கேம்ப்தான்.. ஆனா, அது வேற கல்லியில இருக்கு” என்றவர் டாக்ஸி டிரைவருக்கு வழி சொல்லுவதில் மும்முரமாகி விட்டார்.
தாத்தா – தாத்திக்கள் பயண களைப்பில் லேசான உறக்கத்தில் இருந்தனர்.
மூரார்பாதுவில் பெரிய வீடு, தோட்டம் என பார்த்தே வளர்ந்த எனக்கு இந்த பம்பாயும் – சீத்தா கேம்ப்பும் அப்போது என்னை வைத்து செய்யப்போகிறது என தெரியாது.
மெல்ல மெல்ல கிடைத்த இடத்தில் வளைந்து நெளிந்து ஓரிடத்தில் சென்று நின்றது அந்த பத்மினி.. 💕 என்றும் மூரார்பாது – My Screen 182 ஆம் 04-08-2024 தேதியிட்ட பதிவில் பதிவிட்டிருப்போம்..
இனி..
மெல்ல மெல்ல கிடைத்த இடத்தில் வளைந்து நெளிந்து ஓரிடத்தில் நின்றது அந்த பத்மினி..
முதலில் காரிலிருந்து இறங்கிய சிச்சா தெருவின் முனையில் இருந்த ஒருவரிடம்..
“யேய்.. வீட்ல பையன் இருப்பான் வரச்சொல்லு..” என்றவர் அவரே சற்று பெருங்குரலில்..
உஸ்மான்.. ஏ.. மொய்தீன்..” என குரல் குடுத்தார்..
பின் என் பக்கம் திரும்பிய சிச்சா.. “ம்ம்.. இறங்கு.. வீடு வந்தாச்சு..” என்றார்.
நான் கீழே இறங்கிய நேரம் என் சின்னம்மாவுடன் சகோதரர்கள் உஸ்மான், ரபீக் வந்து நின்றார்கள்.
எனக்கு இன்றும் நன்றாக நினைவு இருக்கிறது. என் சின்னம்ம்மா பீபீஜான் அவர்கள் என்னை பார்த்த பொழுதில் என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டார்கள்..
ஸலாம் துஆ கூறிக்கொண்டோம்..
“ம்ம்ம்.. இந்த சின்னம்மா வீட்டுக்கு வர உனக்கு இந்தனை வருஷம் தேவைப்பட்டதா.. ?” என சிரித்தார்கள்.
“அதான், பிள்ள வந்துடான்ல.. அவனுக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சி போடேன்..” என சிரித்தார் சிச்சா..
பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றோம்.
மூரார்பாளையம் சூழலில் வளர்ந்த எனக்கு என் சின்னம்மாவின் வீடு மிக அந்நியப்பட்டு நின்றது.
“ம்ம்ம்.. உள்ள வா..” என்றார்கள்..
“இங்கேயா.. இது வீடா..?” என மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடின..
E Sector
C1 Line
Room 3 & 4
“இங்கேயா.. இது வீடா..?” என மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடிய அதே நேரம் ஆம், இதுதான் வீடு என்கிற பதிலும் நானே தேடியும் கொண்டேன்.
என் மன ஓட்டம் புரிந்த என் சின்னம்மா.. “வாபா உள்ளே..” என கையை பிடித்து அழைத்து சென்றார்கள்..
ஊரிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் பெரும் இடம் பிடித்திருக்க பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்காக நாம் அருகருகே அமர்ந்து காத்திருப்போமே, அது போல வீட்டில் மிக அருகருகே உட்கார நேர்ந்தது சற்று சங்கடமாக இருந்தது.
தாத்திக்களும் – தாத்தாவும் மிக களைப்பாக தெரிந்தார்கள்.
“பீபீஜான் .. சாய் போடும்மா..” என தாத்திகூறிவிட்டு
‘மோரியில தண்ணி இருக்கா..?” என கேட்கவும்.. எனக்கு “மோரியா.. அப்படின்னா..?” என ஒரு கேள்வி எழுந்த நேரம் சின்னம்மா “ஒரு நிமிஷம் இருங்க மாமி..” என உஸ்மான் பாயிடம் தண்ணீர் இருக்கா என பார்த்து தண்ணீர் ஊற்ற சொன்னார்கள்.
வெளியே பெரிய பெரிய இரண்டு பாரல்கள் இருக்க அதில் தண்ணீர் மோந்து உள்ளே வந்தவர் ஒரு திரைச்சீலை போன்ற தடுப்பை நகர்த்தி 3’க்கு 3 அகல இடத்தில் இருந்த பெரிய வாளி போன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினார்.
“ஓ.. மோரின்னா பாத்ரூம்” என தெரிந்து கொண்டேன்.
சாய் என்கிற டீ தயாராகி கொண்டிருந்த நேரம்
“அஸ்ஸலாமு அலைக்கும்..” என குரல் கேட்டது..
“வலைக்கும் ஸலாம்” சொன்ன சிச்சா.. “ம்ம்ம் வாங்க.. எப்படி இருக்கீங்க.. வாங்க சாய் சாப்பிடலாம் என பூனுரார் தாத்தா ஆதம்ஷா அவர்களின் மகனாரை வரவேற்றார்.
“அட.. ஏங்க பாய்.. இப்பல்லாம் சாய் ரொம்ப கம்மி பண்ணிட்டேன்.. கார்கானாவுல அப்பப்ப 1,2 குடிக்கிறதோட சரி..” என்றவர், பொதுவான
நலம் விசாரிப்புகளுக்கு பின்னர் பூனுரார் தாத்தா மற்றும் தாத்தியின் பொருட்களோடு உடன் அழைத்து வந்திருந்த இரண்டு பசங்களுடன் கிளம்பினார்.
சிச்சா.. கார்கானான்னா..? என்றேன்..
“ம்ம்ம்.. பேக் வேலை செய்யுற இடம் இல்லன்னா பேக்டரின்னு அர்த்தம்..” என்றார்.
“ஓ.. கார்கானான்னா பேக்டரி..” என தெரிந்து கொண்டேன்
வீட்டை நன்றாக கண்களால் அலசினேன்..
மோரி
பேன்
ஒரு குண்டு பல்பு
ஜாமான்கள் அடுக்கி வைக்க மரப்பலகை அமைப்புகள்
துணிகள் தொங்க ஒரு கயிறு
சமையல்கூடம்
மற்றும் சமையல் பாத்திரங்கள்
ஒட்டு மொத்தமாக ஒரு 100 – 125 அடிதான் அதன் பரப்பளவு..
ஒரு வீட்டின் தகர சுவர் மற்றொரு வீட்டிற்குமான தடுப்புச் சுவராக இருந்தது.
சின்னம்மாவிற்கு 3 மற்றும் 4 என இரண்டு வீடுகள் இருந்தது. ஒரு வீட்டின் உள்ளிருந்து இன்னொரு வீட்டுக்கு போக வழி வைத்திருந்தார்கள்.
அந்த இன்னொரு வழியாக 4 ஆம் எண் வீட்டிற்கு நுழைந்தால்..
அதே 100 – 125 அடி பரப்பளவில்
கட்டில், பீரோ, டி.வி என அசத்தலாக இருந்தது.
எனக்கு என் சின்னம்மா வீடு என்கிற வகையில் எந்த அந்நியோனியமும் இல்லை என்றாலும் ஏதோ ஒன்று எனக்கு சவுகரியமாக படவில்லை
மூரார்பாதுவில் சூச்சா எப்போது போவோம், எங்கு போவோம் என தெரியாமலே அந்த காரியம் முடிந்திருக்கும்.. இங்கு மோரி என்கிறார்கள்
அந்த 3’க்கு 3 மறைப்பில் போக வேண்டும் என்கிறபோது சூச்சுவே நம்மை ச்சூ ச்சூ என விரட்டுவது போல ஒரு பிரமை..
வீட்டை விட்டு வெளியே வரலாம் என்றால் என் சின்னம்மா வீட்டு வாசலின் எதிரில் ஒரு ஹித்திக்கார பாட்டி உட்கார்ந்து இருந்தது.
என்ன செய்யலாம்.. என யோசித்து யோசித்து சின்னம்மாவிடம் சென்றேன்..
“சின்னம்மா.. அக்கா வீட்டுக்கு போகனும்..” என்றேன்..
“இன்ஷா அல்லாஹ், அக்காவே வீட்ல வேலை முடிஞ்சா இங்க வரும்.. ஏன்பா அவசரப்படுறே..” என்றார் சின்னம்மா..
“இல்ல.. அக்கா வீட்டை பாக்கனும்.. அப்புறம் அக்காவையும் பாக்கனும்..” என்றேன்..
“அங்கங்கே அக்காவை பாக்கனும், மச்சானை பாக்கனும்னு சொல்வாங்க.. நீ என்னடான்னா வீட்டை பாக்கனும்னு சொல்றியே.. கொஞ்சம் வெளியிலே காத்தாட உக்காறு.. மொய்தீனுக்கு வீடு தெரியும்.. கூட்டிட்டு போவான்..” என்றவர் பக்கத்து வீட்டு பையனை அழைத்து “ஏய்.. மொய்தீனை கூட்டிக்கிட்டு வா” என சொல்லிவைத்தார்.
நான் தம்பி மொய்தீனுக்காக காத்திருந்த நேரம் வீட்டுக்கு வெளியே வந்தேன்..
சின்ன சின்ன வீடுகள். எல்லா வீட்டறுகேயும் தண்ணீர் நிரப்பிய பாரல்கள்.
மூரார்பாதுவில் வீதி எப்படி இருக்கும்.. இங்கே மொத்தமே 6-8 அடி அகலம்தான் இருக்கும் போல..
வீதிக்கு நடுவே கழிவு நீர் வாய்க்கால் ஒரு ஒன்று இரண்டு அடி அகலத்தில் ஓடி கொண்டிருந்தது. அதன் இடையே சலவைக் கற்கள் போல வைத்து ஆங்காங்கே மூடி வைத்திருந்தார்கள்.
கொஞ்சம் தலை தூக்கி பார்க்கையில் ஏகப்பட்ட வயர்கள் பின்னி பினைந்து இழுக்கப்பட்டிருந்தன..
தெருவின் முடிவில் ஒரு சுவர் தென்பட குறுக்கு தெரு என்பார்களே அதுபோலவோ என நினைக்கும் நேரம் திடீரென ஒருத்தி கைகுழந்தையுடன் தலையில் கூடை வைத்துக்கொண்டு அந்த தெருவில் வலது பக்கம் இடது பக்கம் இடது பக்கம் வலது பக்கம் என இப்படியும் அப்படியுமாக லாவகமாக நடந்தும் தாவியும் என்னை கடந்து போனாள்..
தெரு முடிந்துப்போன இடத்தில் எப்படி அந்த பெண் வந்தாள் என மாயாஞால ஆச்சரியமாக இருந்தது.
போய் பார்க்கலாமா..?
இரண்டு வீடு தள்ளி வாசலில் அமர்திருந்த அந்த ஹிந்திக்கார பாட்டி இப்போது என்னையே பார்த்துகொண்டே வெற்றியை இடித்துக்கொண்டிருந்தார்..
டொக்கு.. டொக்.. டொக்கு
எனக்கு மீண்டும்..
தெரு முடிந்துப்போன இடத்தில் எப்படி அந்த பெண் வந்தாள் என மாயாஞால ஆச்சரியமாக இருந்தது.
போய் பார்க்கமா..?
டொக்கு.. டொக்.. டொக்கு .. டொக்
இரண்டு வீடு தள்ளி வாசலில் அமர்திருந்த அந்த ஹிந்திக்கார பாட்டி இப்போது என்னை பார்த்து பேச எத்தனிப்பது போல தெரிய சட்டென எழுந்தேன்..
தெரு முடிந்துப்போன இடத்திலிருந்து எப்படி அந்த பெண் வந்தாள் என பார்க்க அந்த தெரு முனைக்கு போனேன்..
இன்னும் 50 அடிதூரம்..
எனக்கும் பாட்டிக்கும் 10 அடிதூரம்..
பாட்டியை கடக்கும் அந்த 0 விநாடியில்..
“பேராண்டி.. பீபிஜான் அக்கா பையனா..? ஊர் நாட்டுலருந்து வந்திருக்கயா..? நேத்துதான் சொல்லுச்சு.. என்றவர் “சரி.. இந்த பக்கம் எங்கே போற..? என்றார்.
தெரு முடிந்துப்போன இடத்தில் எப்படி அந்த பெண் வந்தாள் என பார்க்க போகிறேன் என்றா சொல்வது என யோசித்து இல்ல சும்மா இப்படி போய் அப்படி நடந்து வரலாம் என கூறிவிட்டு
இன்னும் 30 அடி..
இன்னும் 10 அடி
அந்த சுவரை மிக நெருங்கி பார்க்கையில் தெற்கு பக்கம் ஒரு மூன்று அடி இடைவெளியில் ஒரு சந்து போனது. அது பக்கத்து தெருவுக்கான இனைப்பு என புரிந்தது.
அட.. என நான் ஆச்சரியப்பட்டு நிற்கையில்..
“பாய்.. இங்க என்ன பன்றீங்க..? வாங்க.. என தம்பி மொய்தீன் வந்து நின்றான்.
தம்பி மொய்தீன் உடன் நான் அக்கா வீட்டிற்கு கிளம்பினேன்.
அந்த பாட்டி வாசலில் உட்கார்ந்து இன்னும் வெற்றிலையையும் பாக்கையும் இடித்துக்கொண்டிருந்தது.
“மொய்தீன்.. இந்த பாட்டி ஹிந்திக்காரங்க மாதிரி இருக்காங்க.. ஆனா தமிழ் பேசுறாங்க..?” என்றேன்..
“பாய்.. அவங்க ஹிந்திக்காரங்கதான், நம்மோட பேசி பேசி நல்லா தமிழ் பேசுவாங்க..” என்றவன் சின்னம்மாவிடம்..
“அம்மா.. நான் பாயை கூட்டிக்கிட்டு போறேன்..” என அழைத்து போனான்..
“கல்லியில பாத்து நடங்க பாய்.. என்றவனிடம்
கல்லியா.. ? என்றேன்..
பாய்.. கல்லின்னா தெருன்னு அர்த்தம் என்றான்..
ஓ.. கல்லின்னா தெரு என தெரிந்துக்கொண்டேன்..
கல்லியின் முகப்புக்கு வந்தோம்
. பக்கத்து பள்ளிவாசலில் பாங்கு சொன்னார்கள்.
மொய்தீனுடன் நடக்கையில் திடீரென “பாய்… என் தோஸ்துகிங்க கிட்ட சொல்லிட்டு போயிடலாம்.. வாங்க.” என தன் திட்டத்தினை செயல்படுத்தினான்
.
“டேய்.. அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போறன்னு சொல்லிட்டு இப்ப வேற எங்கயோ போற..” என்றேன்..
அட.. வாங்க பாய் அக்கா வீடு தோஸ்த் ஓட்டல் D Sector லதான் இருக்கு. பக்கம்தான் போயிடலாம் என்றான்.
கல்லியிலிருந்து வெளியேறிய நாங்கள் இடது பக்கம் திரும்பி சில கல்லிகளை கடந்து மீண்டும் இடது பக்கம் திரும்பினோம்..
சட்டென நம் ஊர் போல ஒரு வேப்பமரம், சற்றே நின்ற விளையாட கொஞ்ச இடம் அப்புறம் ஒரு கோவில் கான கிடைத்தது.
அட.. என நான் ஆச்சரியப்பட்டு நிற்கையில் மொய்தீன் தன் நண்பர்களுக்கு என்னை என் அண்ணன் என அறிமுகப்பட்டுத்தி வைத்தான்..
சரி.. போலாமா.. என்ற குழு என்னையும் இழுத்துகொண்டு போனது.
எனக்கு ஏதோ தவறாக பட.. மொய்தீன்.. அக்கா வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போகமா வேற எங்கையோ கூட்டிட்டு போகப்பாக்கிறே என தயங்கி நின்றேன்..
“அட.. வாங்க பாய் அக்கா வீடு தோஸ்த் ஓட்டல் D Sector’லதான் இருக்கு. பக்கம்தான் போயிடலாம் என்றான் மீண்டும்..
வேறு வழியின்றி நான் அவனிடம் மெல்லிய குரலில்.. சரி, நாம இப்ப எங்க போறோம்..? என்றதற்கு..
வாங்க பாய்.. உங்களுக்கு டிராம்பே பீச் காட்டுறேன்.. ஜாலியா குளிக்கலாம்.. என்றான்..
மொய்தீனின் தோஸ்த் ஒருத்தன்.. “நீச்சல் தெரியனும்னு அவசியம் இல்ல, பயப்படாதீங்க பாய்.. என்றான்..
“ஹே…நானெல்லாம் எங்க ஊரு ஆத்துலயே எதிர் நீச்சல் போடுறவன்.. எனக்கே நீச்சல் பத்தி பாடமா..? என சொல்ல நினைத்து சொல்லாமல் மவுனமாக நின்றேன்..
சரி.. போகலாம் என குழு கிளம்பியது. தெற்கு பக்கம் வழி எடுத்து சாலையில் நடக்க நடக்க
பெட்டிகடைகள்
சின்ன மளிகை கடைகள்
முடி வெட்டும் கடை
டீ கடை
என கடந்து கடந்து..
டிராம்பே என்கிற பிரதான சாலை அடைந்தோம்..
சற்றே
தூரத்தில்..
போஸ்ட ஆபிஸும், அந்த சிகப்பு நிற போஸ்ட் ஆபிஸ் டப்பாவும் காணகிடைத்தது.
மொய்தீன்.. வாயேன் போய் பார்ப்போம்.. என்றேன்..
பாய்.. அங்க என்ன இருக்கு போய் பார்க்க .. அது போஸ்ட ஆபிஸ் என்றான்..
அட.. வாடா என அவனை இழுத்துகொண்டு ஓடினேன்..
மற்றவர்களும் எங்கள் பின்னால் ஓடி வர போஸ்ட் ஆபிஸ் நெருங்கி அதன் பலகையை பார்த்தேன்
पोस्ट ऑफ़िस – Post Office
ट्रॉम्बे पोस्ट – Trombay Post
पिन कोड
400088
“என்ன பாய் பார்க்கிறீங்க..” என்றான் தம்பி மொய்தீன்..
இங்க 400088 ..
ஊர்ல 606208 என்றேன்..
சரி.. அதுக்கு.. என்றவனிடம்..
ம்ம்ம்.. 400088
Trombay Post, Cheeta Camp, Room No 7, H Line .. அப்புறம் நீ சொன்னியே D Sector.. தோஸ்த் ஓட்டல் தெருன்னு.. அது போதும்..
சரி.. அதுக்கு என்றவனிடம்..
“ம்ம்ம்.. நீ அக்காவோட வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போகவேனாம்.. நான் Address நானா போயிடுவேன்.. என்றவன் ஓட ஆரம்பித்தேன்..
“பாய்.. ஓடாதீங்க..” என அந்த சீத்தா கேம்ப் 400088’கள் 606208 ஆகிய மூரார்பாது என் பின்னால் ஒடி வர ஆரம்பித்தனர்.
மூரார்பாது – My Screen
Admin & Team

Leave a reply