
கோலி சோடா # MMS 000198
07-09-2025
MMS – 000198
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
மூரார்பாது கிராமம் 1980’களில்..
இரவு 7 மணிக்கு மயான அமைதி என்பார்களே அப்படி ஆகிவிடும்.
திருடன் போலிஸ் விளையாட்டில் திருடனே இருட்டுக்கும், நேரத்திற்கும் பயந்து வீட்டில் அடைகலமாகி விடுவான். போலிஸ்கள் தேடி தேடி களைப்பாகி நேராக கடைக்கு போய் பண்ணீர் சோடாவும், கலர் சோடாவும் வாங்கி குடித்து வீடு போய் சேர்வார்கள்..
கோலி சோடா
கோலி சோடா என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது தங்களின் மழலைப் பருவம்தான். சிறு வயதில் கோலி சோடாவை திறப்பதே ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆச்சர்யமான தருணமாக இருக்கும். அதில் இருக்கும் பளிங்கிக்காகவே கோலி சோடா வேண்டும் என்று அடம்பிடித்து வாங்குவதுண்டு. மற்ற கலர் சோடாக்களை திறப்பதற்கு ஓப்பனர் தேவைப்படுவது போல கோலி சோடாவிற்கு அது தேவைப்படுவதில்லை. கட்டை விரலை வைத்து அழுத்தியே திறந்துவிடலாம்.
மூரார்பாது 1985’களில்..
“யேய்.. இப்படி ராத்திரி 8 மணிக்கு என்ன கொல்லப்பக்கம் கூப்பிட சீட்டு எழுதி அனுப்பாதன்னு எத்தனை தரம் சொல்லி இருக்கேன்.. அந்த பையன் குமாருக்கு எப்ப எப்படி கொண்டாந்து தரனும்னு விவஸ்தை இல்லாம என் பாட்டி இருக்கப்பவே குமார் அண்ணன் இந்த சீட்ட தந்துச்சுன்னு என் மூஞ்சுக்கு நேரா நீட்டுரான்..”
“அய்யய்யோ.. அப்புறம் என்னாச்சு..?”
“அப்புறம் என்னாச்சா.. சத்தார் பாய் கடைக்கு சோடா வந்துட்டுன்னு தகவல் அனுப்பிகிறார் குமார்னு சொல்லி சமாளிச்சேன்..” என அவனிடமிருந்து கோலி சோடா வாங்கி கொள்ளலாம் அவள்
.
கோலி சோடா
கோலி சோடா என்பது கார்பன் ஏற்றப்பட்ட லெமன் அல்லது ஆரஞ்சு பிளேவரில் தயாரிக்கப்படும் பானமாகும். ஏப்ரல் – மே மாதங்களில்தான் இதன் விற்பனை அதிகரிக்கும்.
கோலி சோடா என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? கார்பன் ஏற்றப்பட்ட சோடாவை மூடுவதற்கு மூடிக்கு பதில் கோலியை பயன்படுத்தினர். கார்பன் ஏற்றப்பட்ட பானத்தில் இருந்து வரும் அழுத்ததால் கோலியும் அதில் சரியாகப் போய் பொருந்தி மூடி போல செயல்படும்.
மூரார்பாது 1990’களின் ஆரம்பத்தில்..
என் தம்பி அப்துல் ரஹிமுக்கு 10 வயது இருக்கலாம்..
“பாய்.. சத்தார் பாய் கடை வரைக்கும் வரியா..?”
ஏன்.. எதுக்கு..? அதும் இந்த நேரத்துல.. மழை வேற பேயுது. கரண்டும் இல்ல.. சத்தார் பாய் கடைய மூடி இருப்பாரு..
“எனக்கு வயிறு வலிக்குதுன்னு தாத்திகிட்டே சொன்னேன்.. தாத்திதான் சோடா வாங்கி குடிக்க சொன்னாங்க.. அப்புறம், தாத்திக்கும் வெத்தலை வேணுமாம்.. மணி 9 தான் ஆகுது. மூடி இருக்க மாட்டாரு.. போலாமா..” என கேட்பான் என் தம்பி அப்துல் ரஹிம்..
“சரி வாடா போகலாம்..” என அழைத்து செல்வேன்..
கோலி சோடா
ஹைராம் காட் என்பவரே முதலில் கோலி சோடாவை கண்டுப்பிடித்தவர் ஆவார். 1872ல் அவர் இந்த பாட்டிலுக்கான பேட்டன்ட் உரிமையையும் வாங்கிவிட்டார். இந்த பாட்டில் பிரிட்டீஸ் ஆட்சி செய்த நாடுகளிலெல்லாம் பிரபலமாக இருந்தது. இப்போதும் இந்த கோலி சோடா பிரபலமாக இருக்கும் இரு நாடுகள் இந்தியா மற்றும் ஜப்பானாகும். இந்தியாவில் கோலி சோடாவென்றும், ஜப்பானில் ரேமூன் என்றும் அழைக்கப்படுகிறது.
மூரார்பாது அதே 1990’களில்..
மூரார்பாது ஜனாப்.அமானுல்லா பாய் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அக்கடையின் முன்புறம் அபுபக்கர் ஷபியுல்லாவின் குளிர்பான கடை ஒன்றும் இருக்கும்.
நன்னாரி சர்பத் முதல் கோலி சோடா வரை கடை விரித்திருப்பான் அவன்.
சோடாக்களில்
கோலிசோடா
பண்ணீர் சோடா
ஆரஞ்சு சோடா
லெமன் சோடா என சிலவகைகள் இருக்கும்..
பெரிய அலுமினிய வாய் அகன்ற செவ்வக வடிவ தட்டும் அதன் மேலே ஐஸ்கட்டிக்கான தெர்மோகோல் பெட்டி, எலுமிச்சை பழங்கள், நன்னாரி சாறு பாட்டில்கள், குடத்தில் தண்ணீர், உப்பு, சக்கரை, எலுமிச்சை பழ சாறு பிழிய இடுக்கி மற்றும் கத்தி போன்றவைகள் வைத்திருப்பான்..
எலுமிச்சை சாறு ஜூஸ் – ரூபாய் 25 காசுகள்
நன்னாரி ஜூஸ் – ரூபாய் 50 காசுகள்
கோலி சோடா வகையறாக்கள் – ரூபாய் 50 காசுகள் என விலை இருக்கலாம்..
“அபு.. ஒரு நன்னாரி ஜூஸ் கொடுடா..”
காசு என்பவன் நாம் காசு தரவில்லை எனில் தரமாட்டான்
“டேய்.. என்னடா எனக்கே தரமாட்டேங்கிற..?” என்றால்
“நீ என் நண்பங்கிறது வேற.. என் பிஸ்னஸ்கிறது வேற..” என்பவன் பிறகு ஏதோ ஒரு யோசனைக்கு பிறகு
“இந்தா ஒரு ரூபா.. இப்ப இதை கடனா வாங்கிக்கோ.. பிறகு எனக்கு அதை திருப்பி தரனும்..” என ஜூஸ் போட்டு கொடுத்து நம்மிடம் பைசா பெற்றுக்கொள்வான்
கோலி ( ஆம்பள ) சோடா
கோலி சோடாவின் புகழ் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல எகிற ஆரம்பித்தது.
மூரார்பாதுவில் எனக்கு தெரிந்து ஜனாப்.பாஷா பாய் அவர்கள் சோடா பேக்டரி ஒன்றை நடத்தி வந்தார்.
இவர் நம் எஸ்.கே.ஆர் பேருந்து உரிமையாளர் ஜனாப்.அக்பர் அவர்களின் மாமனார் ஆவார்.
அவரது கோலி சோடா தயாரிக்கும் கூடம் சங்கராபுரத்திற்கான பேருந்து நிறுத்தமான இப்போதைய கனபதி பேக்டரி இயங்கும் இடத்தில் இருந்தது.
ஒரு 10’க்கு 10 இடமாக இருக்கலாம். தெற்கு புறம் திரு பெரியான் அவர்களின் சலூன் கடையும் வடக்கு புறம் ஜனாப் பாஷா பாய் அவர்களின் கோலி சோடா கடையும் இருக்கும்.
தண்ணீர் தொட்டியும், ஒரு பட்டை வடிவிலான சுழற்று மிஷினும் இருக்கும்..
கோலி சோடா தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் உப்பு, தண்ணீர் மற்றும் பிளேவர்களுடன் கார்பன் டையாக்ஸைட் அடைக்கப்பட்டு அந்த பாட்டிலை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக முன்பும் பின் பின்பும் சுழற்றுவார்கள். அப்போதுதான் அழுத்தம் ஏற்பட்டு பாட்டிலுக்கு மூடி போல ஒரு குண்டு செயல்பட்டு மூடும்.
கோலி சோடா தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:
- சோடா பவுடர் அல்லது பேக்கிங் சோடா
- எலுமிச்சை சாறு அல்லது சிட்ரிக் அமிலம்
- தண்ணீர்
- சர்க்கரை அல்லது சீனி
- சுவைக்கேற்ப பழச்சாறு அல்லது எசன்ஸ்
தயாரிப்பு முறை :
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
- பின்னர், இதை வடிகட்டி குளிர்விக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சோடா பவுடர் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது சிட்ரிக் அமிலத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர், சர்க்கரை தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப பழச்சாறு அல்லது எசன்ஸை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை பாட்டில்களில் நிரப்பி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
கோலி சோடா வகைகள்
- லெமன் சோடா
- ஆரஞ்சு சோடா
- கிரேப் சோடா
- பைனாப்பிள் சோடா
- மாம்பழ சோடா
- ஜல் ஜீரா சோடா
மூரார்பாது 2000’களில்..
“யப்பா.. என்னா வெயிலுப்பா.. ஒரு கலர் சோடா குடுங்க..”
ம்ம்ம்ம்.. கலர் சோடாவா.. சோடா சரியா சப்ளை இல்லண்ணே..
. கோகோ கோலான்னு கலர் ஒண்ணு புதுசா வந்திருக்கு தரவா.. ?”
“யேய்.. நீ என்னப்பா வேற ஒண்ண தர
. நம்ம கோலி சோடா இல்லியா..” என்பவர் வேறு வழியின்றி கோகோவை வாங்கி “இஸ்ஸ்ஸ் ஸப்ப்பா..” என்னா சுர்ர்ர்ன்னு நாக்குல உரைக்குது..
“ஏன்.. நல்லா இல்லியாண்ணே
.” என கடைக்காரர் கேட்கையில்..
“ம்ம்ம்ம்.. நல்லாதான் இருக்கு..” என நாக்கை சப்புக்கொட்டுவார் நம் மூரார்பாது மகாஜனம் ஒருவர்.
கோலி சோடா வரலாறு
தமிழ்நாட்டில் முதன்முதலில் திரு. கண்ணுசாமி முதலியார்தான் கோலி சோடா தொழிலை தொடங்கினார். அவர் கோலி சோடா பாட்டில்களை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் குளிர்பானங்கள் பிரபலம் அடைந்தது. அந்த சமயம் கோலி சோடாவையும் மக்கள் அதிகம் வாங்க ஆரமித்தனர்.
இடையில் கோகோ கோலா, பெப்ஸி போன்ற வெளி நாட்டு குளிர்பானங்கள் நம் சந்தையை பிடிக்க கோலி சோடா தடுமாறி சந்தையில் மயங்கி சரிந்தது.
பிறகு கோலி சோடா சுதேசி வியாபாரிகளின் விடா முயற்சியால் மயங்கி சரிந்த கோலி சோடா சந்தைக்கு சோடா அடித்து மயக்கம் தெளிவிக்க இன்று மீண்டும் பெரிய கடைகள், பார், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் மீண்டும் வாடிக்கையாளர்களால் விரும்பப்பட மீண்டும் கோலி சோடா விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மூரார்பாது 1980’களில்..
இடம் : சத்தார் பாய் அவர்களின் கடை
நேரம் : இரவு 8.30 மணியளவில்..
“வா.. என்னா கடை சாத்துற நேரம் வந்திருக்க..” என்பார்.
நான் ஏறக்குறைய ஒரு 7 – 8 வயதில் இருப்பேன். கையில் உள்ள சீட்டையும் ஒரு ஒத்த ரூபாய் நோட்டும் தருவேன்
.
சீட்டை அவர் லாந்தர் வெளிச்சத்தில் படிக்கும் நேரம் கடையை நோட்டமிட்டால்
முன் வரிசையில் கட்டை கட்டி அதில் கோலி சோடா வகைகளாக அனைத்தையும் நிறுத்தி வைத்திருப்பார்.
“ம்ம்ம்.. சோடா 1, வெத்தல, பாக்கு, சுண்ணாம்பு, தீப்பெட்டி 1 கேட்டுருக்காங்க
..இந்தா என நாம் கொண்டு வரும் பையில் போட்டு விடுபவர்.. “சோடா பாட்டில் காலையில கொண்டு வந்தா போதும்.. பார்த்து போ..” என மீத சில்லறைகளுடன் அனுப்பி வைப்பார்..
வீட்டுக்கு போய் கொலி சோடா குடிக்கும் ஆவலில் அந்த பையை இறுக பத்திரமாக பிடித்துகொண்டு
டுர்ர்ர்ர்ர்ரும்ம்ம்ம்ம்.. என வாயில் வண்டி கிளப்பி கிளம்புவேன்..
மூரார்பாது – My Screen
Admin & Team
Leave a reply