
முதல் அழுகை – கடைசி சுவாசம் # MMS – 000197
MMS – 000197
17-08-2025
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
முதல் அழுகை – கடைசி சுவாசம்
முதல் குரலும் முகம் மாறிய முகவரியும்..
மூரார்பாத் என்கிற மூராதாபாத் என்கிற மூரார்பாளையம்
என்கிற மூரார்பாது
நம் அனைவருக்கும் மிக நெருக்கமான பெயர். பெயர் மட்டுமல்ல அதுவே பல நேரங்களில் நம் அடையாளமும் கூட..
மூரார்பாது விட்டு தலைமுறைகள் சென்னை, ஈரோடு, பெங்களூரு, அச்சிருப்பாக்கம், கடலூர், மும்பை, துபாய், அமெரிக்கா என இடம் பெயர்ந்தாலும் அவர்களின் ஆணி வேர் அடையாளம் என்பது மூரார்பாது ஆகும்.
நாம் பிறந்த ஊர் ஆங்காங்கே தன் அடையாளங்களை மாற்றிக்கொண்டே வருகிறது.
நாம் படித்த பள்ளிக்கூடம்
நாம் பிறந்த வீடு
நம் பள்ளிவாசல் கட்டிடம்
நாம் பயன்படுத்திய வீதி
நாம் பயன்பட்டுத்திய பிரதான சாலை என அத்துனையும் மாறிக்கொண்டே வருகிறது அல்லது இடம் மாறியுள்ளது.
ஆரம்ப பள்ளிக்கூடம்..
நாம் படித்த ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வரையிலான பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கிய ஆரம்ப பள்ளிக்கூடம் தன்னையும் இழந்து தன் முகவரியையும் மாற்றிக்கொண்டுள்ளது.
வானவில் கீற்றுகொட்டாய்..
வானவில் கீற்றுகொட்டாய் தன்னையும் இழந்து தன் முகவரியையும் இழந்துள்ளது.
Islamic Cultural and Education Centre
தன்னையும் இழந்து தன் முகவரியையும் இழந்துள்ளது.
அஞ்சல் அலுவலகம்
தன்னையும் இழந்து, தன் முக்கியத்துவத்தையும் இழந்து தன் முகவரியை மாற்றிக்கொண்டுள்ளது.
இப்படியாக மூரார்பாதுவின் அடையாளங்களான
ஹபிபுல்லா பாய் அவர்களின் தேநீர் விடுதி..
பாஷா பாய் சோடாக்கடை
சத்தார் பாய் அவர்களின் பெட்டிக்கடை
திரு.போண்டா அவர்களின் பலகார கடை
பாரதி ஆங்கிலப்பள்ளி..
கார்சா பாய் அவர்களின் சைக்கிள் கடை
பிச்சனத்தம் செட்டியார் அவர்களின் மளிகை கடை
குண்டம்மா வெண்ணிலா அவர்களின் மரத்தடி கடை
கோசாலி ஹபிபுல்லா அவர்களின் மளிகை கடை
குல்பாய் அவர்களின் சைக்கிள் கடை
யூசுப் தாத்தா அவர்களின் பெட்ரோமேக்ஸ்
ஜனாப்.பி.என்.காதர் பாட்ஷா
மாவு மில்
யாசின் ரொட்டிக்கடை
ஆகிலா தேநீர் விடுதி என இன்னும் எத்துனையோ சொல்லிக்கொண்டே போகலாம்..
அரசு மேல் நிலைப்பள்ளி
நம் எல்லோருக்கும் மிக நெருக்கமான அரசு நடு நிலைப்பள்ளியானது உயர் நிலைப்பள்ளியானது. ஒரு காலத்தில் மேல் நிலைப்பள்ளியாகி இப்போது தன் அடையாள முகம் மாறி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியாகி நிற்கிறது.
வெற்று இடங்களாக நாம் ஓடி விளையாடிய இடங்கள்
எஸ்.ஏ மருத்துவமனையாக..
எஸ்.ஆர்.சூப்பர் மார்க்கெட்டாக..
கரூர் வைஸ்யா வங்கியாக..
ஆசாத் நகராக.. முகம் மாறி நிற்கிறது.
நமக்கு நம் சின்ன வயதில் சுவைகாட்டிய புளிய மரங்கள் நம் அவசர போக்குவரத்து தேவைக்காக தன்னையே தந்து நவீன சாலைகளை நம் காலடியில் வைத்து சென்றுள்ளன.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். அது மிக மிக நெருக்கமான உண்மை..
சரி.. மேலே சொன்னவைகள் மட்டுமா மாற்றத்தில்..
இல்லை..
பூனூரார் இல்லம்
சிங்கப்பூரார் இல்லம்
இராணுவ வீரர் அலாவுதீன் அவர்களின் இல்லம்
என மேலும்..
கரீம் ஆசிரியர்
கோசாலி ஹபிபுல்லா..
ரஹமதுல்லா ஆசிரியர்..
தலைவர் ஷபியுல்லா..
தோப்புரார் அப்துல் சத்தார்,.
அந்தி அப்துல் சலாம்..
வீரங்கியார் ஹனீபா..
டிக்காங் முஹமதலி மற்றும் பாஷு
தடபுடல் மொய்தீன்
எஸ்.எம்.எஸ் அப்துல் அஜீஸ் தாத்தா..
ஆசிரியர் கமால் பாஷா..
ஆசிரியர் அப்துல் கனி
இராணுவ வீரர் அப்துல் ரஹிம்
ஆகியோர்களின் இல்லம் என இன்னும் எத்துனையோ சொல்லிக்கொண்டே போகலாம்
.
முதல் அழுகை – கடைசி சுவாசம்
1975 ஆம் ஆண்டு – மூரார்பாது
மூரார்பாது கிராமத்தில் நான் பிறந்தேன். என் பெற்றோருக்கு மொத்தம் 9 பிள்ளைகள். தற்போது ஹயாத்தாக இருப்பவர்கள் 5 சகோதரிகள், 2 சகோதர்கள் என தற்போது நாங்கள் 7 பேர். நான் ஐந்தாம் பிள்ளையாக 1975 ஆம் ஆண்டு மூரார்பாது கிராமத்தில் உள்ள கூரை வீட்டில் பிறந்ததாக கூறுவார்கள். என் சகோதரன் தவிர என் தாயாரின் பிரசவத்தில் அத்துனை பேருமே பிறந்தது மூரார்பாது கிராமத்து வீட்டில்தான். மே மாதம் 3 ஆம் நாள் என்பது ஒரு கணக்குதானே தவிர அந்த நாளில்தான் நான் பிறந்தேன் என்கிற தகவலின் உண்மை தகவல் கேள்விக்குறியே..
பிரசங்கள் வீட்டிலேயே பெரும்பாலுக்கு பெரும்பால் நிகழும்.. ஒரு தாய் கிழவியும் இன்னும் சில பெண்களுமாக மஜ்சள், வெண்ணீர், கூர்மையான கத்தி, சற்றே சுத்தமான துணிகளின் உதவியோடு தாயிலிருந்து சேயை பிரசவிக்க செய்து விடுவார்கள்.
“ம்ம்ம்ம்மாமாஆஆஆ..” என்கிற என் அந்த முதல் குரல் ஒலித்தது 3/33, தெற்கு வீதி என்கிற மூரார்பாதுவின் கருவாட்டு வீதி ஆகும்.
பிறந்த வீடு.. 3/33, தெற்கு வீதி என்கிற கருவாட்டு வீதி
பிறந்த ஊர் – மூரார்பாது
மகப்பேறு மருத்துவம் முதல் பெருமழையினூடே வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதுவரை என நம்ம தாய்கிழவிகள் எத்துனையோ பேர் உண்டு.. “ம்ம்ம்ம்ம்மா ஆஆஆ..” என்கிற முதல் பெருங்குரல் கேட்ட அடுத்த சில நிமிடங்களில் குழந்தையோடு “சாயபு.. தாயும் – பிள்ளையும் சொகம்.. பச்ச உடம்புக்காரில்ல . செய்முறை சொல்லித்தாரேன்.. செலவு குழம்பு வச்சி கொடுங்க.. இந்தாங்க உங்க சிங்க குட்டி..” என சொல்லிவிட்டு ““காசா.. இதுக்கு எதுக்கு காசெல்லாம்.. நான் செத்தா இந்தா இருக்கான்ல, இந்த பேரன் என்னை பாட்டியம்மான்னு நின்னு நல்ல அடக்கம் செய்யட்டும்..” என சொல்லிவிட்டு போவாள் அந்த கிராமத்து வைத்திய தாய் கிழவி.
அடுத்த ஐந்தாம் நாளில் காட்டு வேலைக்கு செல்லுமளவுக்கு அந்த குழந்தை பெற்றவள் திறன் பெற்றிடுவாள்..
பிள்ளை பெற்றெடுத்தவள் சும்மா இருப்பாளா..?
தன் பிள்ளைக்காக..
வீட்டு வைத்தியமாக..
கடுக்காய்
சுக்கு
ஜாதிக்காய்
மாசிக்காய்
வசம்பு
திப்பிலி
மஜ்சள்
என அத்துனை மருத்துவ ஜீவனுல்ல பொருட்களையும் தனிதனியாக எண்ணெய் தடவி தீபத்தில் சுட்டு உரைக்கல்லில் (தன்) தாய்ப்பால் அல்லது பசும்பால் ஊற்றி ஒவ்வொரு உரை மருந்தையும் உரசி ஒரு சங்கடை அளவு எடுத்துக்கொள்வாள் அந்த தாய்..
நாம் பிறந்த வீடு நம்பிக்கையுள்ள மருத்துவமனையாகவும் தாயுக்கும் – சேயுக்கும் உடன் நிற்கும்.
வயதான காலத்தில் உடல் சுகவீனப்பட்ட ஒருவனை அல்லது ஒருத்தியை அவர்கள் பிறந்த வீட்டிற்கு கொண்டு வந்தால் அவர்களின் மன நிலை எவ்வாறாக இருக்கும்.
எங்கு நம் முதல் அழுகையை துவங்கினோமோ அங்கேயே நம் கடைசி சுவாசத்தினை “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என முடித்துக் கொள்கிற வாய்ப்பு கிடைத்தால் நமக்கு பரிபூரன சம மன நிலை இருக்கும்தானே..?
நான் பிறந்த மூரார்பாது கூரை வீடு தன்னை இழந்து தன் முகம் மாறி இன்று நிற்கிறது.
அது போல..
நீங்கள் பிறந்த வீடு..? நீங்கள் பிறந்த வீடு இன்னும் அப்படியே உள்ளதா..?
அல்லது
நீங்கள் பிறந்த வீடு தன் முகம் மாறியுள்ளதா..?
உங்களின் முதல் அழுகை என்கிற முதல் குரல் ஒலித்த வீடு இன்றும் அதன் வடிவில் அப்படியே உள்ளதா..? அல்லது அதை இழந்து நிற்கின்றீர்களா..?
உங்கள் பழைய வீட்டின் புகைப்படம் உள்ளதா..?
பகிரலாம்..
மூரார்பாது – My Screen
Admin & Team
Leave a reply