
மர்ஹூம் ஜனாப்.ஹாலிக் ஆசிரியர் – லவ் ஆல் # MMS 000195
MMS – 000195
06-07-2025
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
+91 98840 78865
கட்டுரைக்கான மூல ஆக்கம் –
ஜனாப்.இல்யாஸ் ஹாலிக் மற்றும் ஜனாப்.கமால் பாஷா
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
- சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்
- செல்வத்தைவிட பெரும் செல்வம் உடற் செல்வம்
- உடலை பேணுபவன் உலகைப் பேணுபவன்
- உடற்பயிற்சி செய், உடலை வலுப்படுத்து
- மன அழுத்தத்தை குறை, ஆரோக்கியத்தை அதிகரி
என இப்படி எல்லா வகைகளிலும் உடல் ஆரோக்கியம் குறித்து நமக்கு சொல்லப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடங்களில் நமக்கு விளையாட்டு நேரம் என ஒன்றை வைத்திருப்பார்கள்.
மைதானம் சென்று விளையாடி மீண்டும் வகுப்பறை வருவோம்.
லவ் ஆல்
ஆடு, ஓடு விளையாடு என நமக்கு சொல்லித்தரும் இந்த ஆசிரியர்களை கண்டால் நமக்கு பயம் இருக்காது.
மற்ற ஆசிரியர்கள் அப்படியும் இப்படியுமாக இருக்கையில் உடற்கல்வியியல் ஆசிரியர்கள் மட்டும் எப்போதும் உடற் திரனோடு பெரும்பாலும் மிடுக்காக இருப்பார்கள்.
மர்ஹூம் ஜனாப்.ஹாலிக் ஆசிரியர்
நமது ஊரை பூர்வீகமாக கொண்ட உடற்கல்வியியல் ஆசிரியர்கள் இரண்டு பேர்
ஜனாப்.ஹாலிக் ஆசிரியர்
மற்றும்
ஜனாப்.கமால் பாஷா ஆசிரியர்
நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருப்பது ஜனாப்.ஹாலிக் ஆசிரியர் அவர்கள் – பள்ளிவாசல் வீதி, மூரார்பாது
ஜனாப்.ஹாலிக் 30-12-1947 ஆம் வருடம் ஜனாப்.அமீர்ஷா மற்றும் மொஹ்தர்மா பாத்திமா பீ ஆகியோர்களுக்கு மகனாக மூரார்பாது கிராமத்தில் பிறந்தவர். மொஹ்தர்மா பாத்திமா நமது ஊரார் மிக அதிகமாக அறிந்த மர்ஹூம் ஜனாப்.பந்தேஷா ஆசிரியர் அவர்களின் சகோதரி ஆவார். ஜனாப்.ஹாலிக் தனது பள்ளிப்படிப்பினை மூரார்பாது பள்ளியில் முடித்தவர். ஜனாப் ஹாலிக் அவர்களின் உடன் பிறந்தவர்கள் எனில் இரண்டு இளைய சகோதரிகள் உண்டு. பெரிய தங்கை மொஹ்தர்மா கைருன்னிஷா அவர்கள் தற்போது கள்ளக்குறிச்சியிலும், இளைய தங்கை மொஹ்தர்மா பல்கீஸ் அவர்கள் உளுந்தூர்பேட்டையில் வசிக்கிறார்கள்.
மேலும், விபரங்கள் அறிய ஜனாப், ஹாலிக் ஆசிரியர் அவர்களின் மகனார் ஜனப்.இல்யாஸ் ஹாலிக் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது..
“என் தகப்பானார் ஹாலிக் அவர்களின் பள்ளி வகுப்பு நண்பர்களில் குறிப்பிட தக்கவர்களில் மிக முக்கியமானவர்கள் எனில் ஜனாப்.அபுபக்கர் ( மூரார்பாது பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர்) ஜனாப்.கமால் பாஷா ( சங்கராபுரம் பள்ளியில் உடற்கல்வியியல் ஆசிரியராக பணியாற்றியவர்) ஜனாப்.அப்துல் ரஜாக் ( மூரார்பாது பள்ளியில் உடற்கல்வியியல் ஆசிரியராக பணியாற்றியவர் ) ஆவார்கள்.”
“நம் சித்த மருத்துவர், என் நண்பன் ஜனாப்.சித்திக் அலி அவர்களின் தகப்பனார் ஜனாப்.ரஹமத்துல்லா அவர்கள் என தகப்பனார் ஹாலிக் அவர்களின் வகுப்பறை நண்பனாக அல்லது ஒரு வருடம் ஜூனியராக இருக்கலாம் என நினைக்கிறேன்” என்றவர்..
“பத்தாம் வகுப்புவரை மூரார்பாதுவில் படித்தவர் அதன் பின்னர் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA கல்லூரியில் Physical Education பாடப்பிரிவில் தன் கல்லூரி படிப்பினை தொடங்கினார். படித்து முடித்து ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை கிடைக்காததன் காரணமாக ஸ்ரீதரன் என்கிற பேருந்தில் நடத்துனராக ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றினார்.”
“என் தகப்பானாருக்கு 1970’ல் நிக்காஹ் நடந்தது. பந்தேஷா ஆசிரியர் – என் தாய் மாமா அவர்களின் மகள் மொஹ்தர்மா நூர்ஜஹான் அவர்களை நிக்காஹ் செய்தார் என் தகப்பனார். என் அம்மா நூர்ஜஹான் அவர்களுடன் பிறந்தவர்கள் எனில் தற்போது கோயம்புத்தூரில் வசிக்கும் ஜனாப்.கமால் பாஷா (Marvels of Science – Tamil ( Youtube) மற்றும் பெங்களூருவில் வசிக்கும் மொஹ்தர்மா ஜன்னத் பீவி ஆவார்கள்.
நான் 1971’ல் பிறந்தேன். என் தங்கை பர்வீன் பானு, தம்பிகள் அன்வர்தீன், ராஜ் முஹம்மது என நாங்கள் நான்கு பிள்ளைகள்” என்றவரிடம்..
“மாஷா அல்லாஹ், உங்கள் தகப்பனார் நடத்துனராக வேலை பார்த்தார் என்றீர்கள்.. பிறகு எப்படி அரசாங்க உத்தியோகம் கிடைத்தது.. எங்கெங்கே வேலை பார்த்தார்..?” என்கிற கேள்வியை முன் வைத்தோம்.
“ஆமாம், ஒரு வருடம் மேலாக நடத்துனராக வேலை பார்த்தவருக்கு நான் பிறந்த வருடம் 1971’ல் உடற்கல்வியியல் ஆசிரியராக அரசாங்கத்தில் எடுத்தானூர் என்கிற பள்ளியில் வேலை நியமனம் கிடைக்கிறது. அங்கே இரண்டு, மூன்று வருடம் வேலை பார்த்தவர் அப்போதைய அரசாங்க ஊழியர்களுக்கான சலுகைப்படி இரண்டு முதல் ஐந்து வருடம் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்கிற திட்டத்தின்படி விடுப்பு எடுத்து, அந்த விடுப்பினை பயன்படுத்தி இடையே வெளி நாடு சென்றவர் SODEXO என்கிற ஒரு உணவு நிறுவனத்தில் வேலை பார்த்தார். என் தகப்பனாரை போலவே நண்பன் சித்திக் அலியின் தகப்பனார் ஜனாப்.ரஹமத்துல்லா அவர்களும் விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைக்காக் சென்று வந்தவர் ஆவார்” என்றார் ஜனாப்.ஹாலிக் இல்யாஸ் அவர்கள்.
“சரி, மீண்டும் இந்தியா வந்தவருக்கு அரசாங்க வேலை நியமனம் உடனே கிடைத்ததா..? எங்கு பணி ஆனை பெற்றார்..?” என்றோம்..
“ம்ம்ம்.. கிடைத்தது. அப்படி மீண்டும் இந்தியா வந்தவருக்கு சூலாங்குறிச்சியில் வேலை கிடைத்தது என நினைக்கிறேன். அதன் பின்னர் சோமண்டார்குடி, குதிரைசந்தல், ஆண்டிமடம்,மங்கலம் பேட்டை, தியாக துருகம் மற்றும் மூரார்பாதிலும் உடற்கல்வியியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
“பாய்.. ஹாலிக் ஆசிரியர் அவர்களை பற்றி வேறு இணைப்பு செய்திகள் உண்டா..?” என்றபோது..
“ம்ம்ம்..ஏன் இல்லாமல், இவர் ஆஜானுபாகுவான உடற்கல்வியியல் ஆசிரியராக இருந்தாலும் மிக மென்மையான குணம் கொண்டவர்.. பாட்டுகள் கேட்பதோடு நில்லாமல் அதை அழகாக மேடைகளில் பாடுவதிலும் வல்லவர். கோசாலி ஜனாப்.ஹபிபுல்லா மற்றும் சிங்கப்பூரார் ஜனாப்.முத்தலீப் ஆகியோர்களின் மேடை நாடகங்களிலும், அதன் குழுவிலும் என் தகப்பனார் ஹாலிக் அவர்கள் பங்கெடுத்துள்ளார் என நினைக்கிறேன்.
மேலும், கபடி ,கால்பந்து மற்றும் இறகு பந்து ஆட்டம் ஆடுவதில் மிக சிறப்பான உடல் மொழி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றிகள் பல குவிப்பார் என்றும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
ஊர் பொங்கல் மற்றும் தீபாவளி குழு ஆட்டங்களுக்கு ஆட்ட நடுவராக இருந்து விளையாட்டுக்களை சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளார்” என்றவர் “என் தகப்பனார் குறித்து மேலும் பல விபரங்கள் வேண்டும் என்றால் என் தாய் மாமா கமால் பாஷாவிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.
Over to Janab Kamal Basha ( Marvels of Science Tamil – YouTube)
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
இந்த வார மூரார்பாது – My Screen’ல் என் மைத்துனர் ஹாலிக் பற்றி ஒரு கட்டுரை கொண்டு வர முனைப்பு எடுத்த மூரார்பாது – My Screen மஸூரா குழுவிற்கும், தம்பி அப்துல் ரஷிதுவிற்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
“ஹாலிக் எனக்கு மைத்துனர் ஆவதற்கு முன்பாகவே அவர் எனது அத்தை மகன். சிறு வயது முதலே எனக்கும் ஹாலிக்குக்கும் நல்ல நெருங்கிய பழக்கம் உள்ளது. எனவே, ஹாலிக்குடனான எனது நினைவுகளை இந்த நேரத்தில் உங்களுடன் பகிர்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.”
“Physical Education Teacher ஆக பணியில் சேர்ந்தவர் Physical Education Director ஆக பணி ஓய்வு பெற்றவர் ஆவார்.”
“அவர் எங்கு படித்தார் எங்கெங்கு பனியாற்றினார் என்பதையெல்லாம் என் சகோதரி மகன் இல்யாஸ் கூறியுள்ளார்.”
“என் மைத்துனர் ஹாலிக் உடனான அவரது YMCA சென்னை கல்லூரி கால வாழ்க்கையினை நினைவு கூற விரும்புகிறேன்.”
“பாடல்கள் பாடுவதில் அலாதியான ஆர்வம் கொண்டவர். கல்லூரி விழாவில் மேடையில் தான் பாடுவதாக தன் பெயரை அளித்திருந்தார். விழா நிகழ்வுகளுக்கு நடுவே “மாணவர் ஹாலில் மேடைக்கு வரவும்” என அறிவிப்பு செய்தார்கள்.”
“பெரிய கல்லூரி விழாவில் அத்துனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னால் மேடை ஏறி பாட வேண்டும் என உணர்ந்த அந்த தருனம் அவருக்கு உடல் நடுக்கம் ஆரம்பமாகி விட்டது.”
“ஒரு வழியாக மேடை ஏறியவர் சிறிது நேரம் ஸ்தமித்து நின்று விட்டார். மாணவரகளும் கூச்சல் எழுப்ப ஆரம்பிக்க, ஆசிரியர்களோ.. “ம்ம் பாடுப்பா..” என கூற ஆரம்பித்த விட்டனர்.”
ஒரு வழியாக தைரியத்துடன்
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும… ஆதவன் மறைவதில்லை…”
“ஆனைகள் இட்டே யார் தடுத்தாலும்.. அலைகடல் ஓய்வதில்லை”
என பாட ஆரம்பித்தவுடன் மாணவர்கள் மத்தியில் ஒரே கூச்சல் மற்றும் விசில் சத்தம் ஆரம்பமாகிவிட்டது.”
“தான் பாடுவது சரியில்லையோ என நினைத்து பாடுவதை நிறுத்திவிட்டு உடனே மேடையை விட்டு கீழே இறங்க எத்தனித்த நேரம்..”
“அட.. ஏம்பா.. என்னாச்சு.. ஏன் பாட்டை நிறுத்திட்ட.. தம்பி, பாடுப்பா.. பாடுப்பா..” என மேடையில் உள்ளவர்கள் கூறவும்..
“இல்ல சார்.. இல்ல சார்.. நான் பாடுல, எனக்கு பயமா இருக்கு சார்..” என கூறியவாறு மேடையை விட்டு கீழே இறங்க ஆரம்பிக்கிறார்.
“அட.. நீ நல்லாதாம்பா பாடுறே.. நீ நல்லா பாடுறன்னுதாபாடுறன்னுதான் எல்லாரும் விசிலடிச்சு பாராட்டுறாங்க.. போய் பாடுப்பா”‘ன்னு மேடையில் உள்ளவங்க சொல்றாங்க..
“அட.. அப்படியா சங்கதின்னு இவர் மீண்டும் மேடைக்கு போய் அப்போது எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் வெளிவந்த அரச கட்டளை படத்தின் மிக ஹிட அடித்த பாடலான..
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும… ஆதவன் மறைவதில்லை…”
“ஆனைகள் இட்டே யார் தடுத்தாலும்.. அலைகடல் ஓய்வதில்லை”
“ஆடிவா.. ஆடிவா.. ஆடிவா..”
“ஆடபிறந்தவளே ஆடிவா..” என மிகப்பிரமாதமாக பாடி முடிக்கவும் கூட்டத்தில் பெரும் கைத்தட்டல் மற்றும் விசில் ஒலி வின்னை முட்டியது. அவருக்குதான் அதற்கான பிரதான முதற் பரிசும் கிடைத்தது.
( ஜனாப்.தாஜூதீன் – பெங்களூரு சகோதரர் அவர்கள் இன்னேரம் இந்த பாடலின் வரலாறை தோண்டி எடுத்திருப்பார்.. குழுவிலும் போடுவார் என என்னுகிறேன் )
நாங்கள் ஒரு குடும்ப குழுவாக எப்போது கூடினாலும் என் மைத்துனர் ஹாலிக் அவர்களை பாட சொல்லி ரசிப்போம்.
அவரும் மிக அழகாக எந்த சங்கோஜமும் இல்லாமல் பாடுவார். அவர் பாடுவதை எங்கள் குடும்ப உறவுகள் மட்டுமில்லாமல் அவ்வழி செல்லும் மற்றோரும் கேட்டு ரசிப்பதுண்டு. ஏன் அப்படி மற்றவர்களும் ரசிப்பார்கள் எனில் அவர் அந்தளவுக்கு அச்சு பிழறாமல் அந்த சுருதியுடன் பாடுவார்.
அதே போல அவருக்கு நகைச்சுவையும் அதிகம். மேலும், பல விசயங்களை என் சகோதரி மகன் இல்யாஸ் கூறியுள்ளார்.
இதில் மிக குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் அவர் நடத்துனராக ஸ்ரீதரன் பேருந்தில் பணியாற்றிய நேரம் அது. நான் அப்போது நான் 6 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.
நம் ஊர் மூரார்பாதுவுக்கு காலை 11.30 மணியளவில் வரும். அது நமக்கான் இண்டர்வெல் நேரம் ஆகும். அது மாணவ – மாணவிகளுக்கான இண்டர்வெல் நேரம் நாங்கள் வெளியில் வரும் நேரம் என்பதால் பேருந்து ஹாரன் அடித்துகொண்டேதான் வரும். நான் ஓட்டமாக ஓடி பேருந்து நிறுத்தம் அடைவேன். பயனிகளை ஒரு நடத்துனராக இறக்கி ஏற்றுபவர் என்னை கவனித்து 25 பைசா கையில் தந்து “போலாம் ரைட்..” என விசில் குடுப்பார்.
நான் அந்த 25 பைசாக்களை எந்த செலவும் செய்யாமல் சேர்த்து வைத்து ஒரு அலார கடிகாரம் வாங்கினேன். அது எனக்கு அப்போது நான் அதிகாலையில் படிப்புக்காக நான் எழ மிகவும் மிகவும் உதவியாக இருந்தது..” என்கிறார் ஜனாப்.கமால் பாஷா..
இக்கட்டுரைக்கு ஆக்கமாகவும் ஊக்கமாகவும் இருந்த ஜனாப் கமால் பாஷா மற்றும் ஹாலிக் இல்யாஸ் ஆகியோர்களுக்கு மூரார்பாது – My Screen தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
சில கொசுறு தகவல்கள் :-
- ஜனாப்.ஹாலிக் ஆசிரியர் அவர்களின் மாமனார் ஜனாப்.பந்தேசா ஆசிரியர் அவர்கள் எப்போதும் துடிப்பானவர். தன் ஆசிரியர் பணி ஓய்வை முன்னிட்டு பெரும் அளவில் மக்களை திரட்டி உணவு விருந்து அளித்தவர். மூரார்பாது மஹல்லாவாசிகளுக்கு மிகவும் பரிச்சையமானவர்.
- மொஹ்தர்மா நூர்ஜஹான் ஹாலிக் அவர்களிடம் பள்ளியின் வகுப்பறையிலிரு து தண்ணீர் கேட்டு அருகிய நாட்கள் உண்டு. ஹாலிக் ஆசிரியர் அவர்களின் வீடு அப்படியான அமைப்பில் பள்ளியின் சுற்று சுவர் ஒட்டி இருக்கும்.
ஜனாப்.ஹாலிக் ஆசிரியர் அவர்கள் இறகு பந்து விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். அந்த ஆட்டமானது லவ் ஆல் என ஆரம்பிக்கும்.
இப்படியாக லவ் ஆல் என ஓடி ஆடியவர் 26-03-2025 ஆம் ஆண்டு புதன்கிழமை மாலை 4 மணியளவில் கள்ளக்குறிச்சியில் வபாத் ஆனார். 27-03-2025 காலை 11 மணியளவில் வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி கபரஸ்தானில் ஜனாஸா தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அல்லாஹ், அவரது நற்காரியங்களை பொருந்திக்கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் என்கிற உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக
.
ஆமீன்.. ஆமின்.
யாரப்பில் ஆலமீன்..
மூரார்பாது – My Screen
Admin & Team
Leave a reply