
தங்கமே தங்கம் # MMS 000203
MMS – 000203
01-02-2026
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️ & மூரார்பாது – My Screen & Team

+91 98840 78865
தங்கமே தங்கம்
இன்று தங்கம் எட்டாத்தங்கமாகி விட்டது. அக்காலத்தில் பேரசர்கள் குறுநில மன்னர்கள் மீது போர் தொடுக்க கூறும் காரணங்களில் மண் ஆசை, பெண் ஆசை மற்றும் பொன் ஆசை எனக்கூறுவார்கள்.
மூரார்பாது – My Screen – Flash Back
பதிவு – திருடா – திருடி
கட்டுரை எண் : 131
கட்டுரை நாள் : 18/02/2022
மூரார்பாதுவின்
திரு’டா – திரு’டி..
(இது கிணற்றைத் தவிர மற்றதெல்லாம் களவாடிய கிராமத்து வரலாறு..)
திருட்டு
ஒரு சிலருக்கு தொழில்..
ஒரு சிலருக்கு ஆர்வ விளையாட்டு..
ஒரு சிலருக்கு தேவைக்கேற்ற திருட்டுருண்டை..
மேலே உள்ளதில் இந்த ஆர்வக்கோளாரு மற்றும் விளையாட்டு திருடா திருடிகள் மிக மிக ஆபத்தானவார்கள்..
முதலாவது வகையறா – தொழில் முறை திருடா – திருடிகள்
இவர்கள் ஆடு – மாடு – கோழி – விவசாய பொருட்கள் – நகை – பணம் – பாத்திரம் என திருடுவார்கள். வாய்ப்புக்காக காத்திருந்து ஒரே நாளில் கிடைத்தவரை துவம்சம் செய்துவிட்டு போவார்கள். பொருளாதார இழப்பு இருக்குமே தவிர நம் பிரியமான அல்லது நமக்கு மட்டுமே தேவையான அல்லது உபயோகப்படும் பொருட்களை இவர்கள் திருட மாட்டார்கள் எனவும்..
இரண்டாவது வகையறா – ஆர்வக்கோளாறு திருடா திருடிகள்..
பஞ்சாயத்தில் பிடிபட்டால்கூட இவர்களை தண்டிக்க முடியாது. “ஏய்.. நீயும் அவனும்தான் ஒட்டுக்கா குளிக்க போனதா சொல்றே.. நீ கொண்டு போனதா சொன்ன ஜட்டியை காணலைன்னும் சொல்றே.. உன் சைஸ் வேற அவன் சைஸ் வேறன்னும் சொல்றே.. அவன் அப்புறம் எதுக்கப்பா உன் ஜட்டியை திருடனும்.. லாஜிக்கே இல்லியே.. அங்கனதான் எங்காவது இருக்கும்.. போய் தேடிப்போடப்பா..” என பஞ்சாயத்து முடியும்..
“பானு.. நீதான் கடைசியா பாடம் எழுதி காட்டிட்டு டீச்சர் வீட்டுலருந்து வந்திருக்கே.. தென்றல் போகும்போதுகூட பேப்பர் வெயிட்டு, பொட்டு டப்பாவும், லிப்ஸ்டிக்கும் டேபிள் மேலதான் இருந்ததான்.. டீச்சர் உன் மேலதான் புகார் சொல்றாங்கம்மா, அந்த பேப்பர் வெயிட் உருண்டைகூட பரவாயில்ல.. ஆனா, பொட்டு அப்புறம் அந்த லிப்ஸ்டிக் டப்பாவையும் நீ எடுத்து என்னம்மா பன்னப் போற, குடுத்துடு..” என்றால் சம்பந்தப்பட்டவளும் “அதானே, அதை எடுத்து நான் என் பண்ண போறேன்.. நீங்களே சொல்லுங்க.. நான் ஏன் எடுக்கனும்.?” என கூட்டத்தை திருப்பிக் கேட்பாள்..
“சார்.. இவன் எங்கிட்டே நேத்து சைக்கிள் கேட்டான் சார்.. காத்து கம்மியா இருக்குடா.. உன் வெயிட்டுக்கு இப்போ சைக்கிள் டயர் தாங்காது, அதனால இப்ப ஓட்ட முடியாதுன்னு சொன்னேன் சார். சரின்னு சிரிச்சிகிட்டே போயிட்டான். ஆனா, இன்னிக்கு பார்த்தா என் சைக்கிளோட பெல்லும், பெடலும் காணலே சார்..” என ஒருவன் கண் கசக்கி புகார் தந்தால் “சார்.. சைக்கிள் இப்போ ஓட்ட முடியாதுன்னு சொல்லி சைக்கிள் இல்லேன்னுட்டான்.. நான் சரின்னு சிரிச்சிக்கிட்டேதான் போனேனும் சொல்றான்.. அப்புறம் நான் ஏன் சார் அவன் பெல்லையும் பெடலையும் திருடனும். பெல்லையும் – பெடலையும் மட்டும் வச்சி நான் என்ன புல்லட்டா சார் செய்யப்போறேன்..” என்பான்.. இறுதியில் மல்லு கட்டிய கணக்கு ஆசிரியரே ஒரு கணக்காகிடுவார் எனவும்..
மூன்றாவது வகையறா – தேவைக்கேற்ற திருட்டுரண்டை
இவர்கள் “அய்யோ பாவம் வகையறா..” குடிக்கு தேவையான ஒரு 100 ரூபாய் அளவிலோ அல்லது குடும்ப செலவுக்கு தேவை என்கிற கண்ணோட்டத்தில் தன் சம்பாதியத்திற்கு ஒரு பங்கம் வந்துவிட்ட காலத்தில் திருட்டுக்கு கிளம்புவார்கள். அதன் பின்னர் அவர்கள் சம்பாத்தியம் சீரானதும் மீண்டும் நான் ரொம்ப நல்லவன்- நல்லவள் என்கிற கதாபாத்திர பாசறைக்கு திரும்பிவிடுவார்கள்.
இவர்கள் மையிடுவதெல்லாம் தோட்டத்து கொடியில் துவைத்து தொங்கப்போடப்பட்ட சற்றே விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் தோட்டத்து பண்ட பாத்திரங்கள் போன்றவையாகும்.
ஒட்டு மொத்தத்தில் ஆமா, அவங்க திருட்டு பேர்வழிதான் என்கிற பட்டியலில் சேரவே பல தகுதிச் சுற்று எடுப்பார்கள் எனவும்..
பள்ளிவாசலில் கஞ்சி கொட்றாவும் – காலணிகளும் மானாவாரி பயிற்போல மானாவாரியாக காணாமற் போகும்.
“பாய்.. அது என் செருப்பு..” என ஒருத்தரை காலும் களவுமாக பிடித்தால் “இல்ல மொய்தீன்.. நான் இங்கதான் என் செருப்பை விட்டிருந்தேன். கானலியா.. அதான் யாரும் மாத்தி போட்டுட்டு போய்டாங்களோன்னு..” என்பார். மாத்தியெல்லாம் போட்டு இருக்க மாட்டார்கள். வெறுங்காலோடு வந்து இவரது செருப்போடு போய் இருப்பார் அந்த காலனிக்கோளாறு பாய். இவர் கடைசி தொழுகையாளி வரை காத்திருந்தாலும் ஒரு செருப்பும் அங்கே மிஞ்சாது. எல்லாம் அவன் செயல் என பாதிக்கப்பட்டவர் வெறுங்காலோடு கிளம்ப வேண்டியதுதான். அடுத்தடுத்த நாட்கள் தன் செருப்போடு போன அவர் வருவாரா என காத்திருந்தாலும் அவர் வருவார், ஆனா செருப்பு வராதுங்கிற நிலைதான் எனவும்..
தற்போது மூரார்பாதில் மோசடிகள்..
ஒரு தகவல் கேள்விப்படுகிறோம்.அதாவது Money Multification மற்றும் Link Marketing என்கிறார்கள். ஒரு நபர் முதலீடாக செய்யும் பணத்தினை திட்ட மேலாளர்கள் வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்வார்களாம். முதலீட்டு தொகைக்கு ஏற்ப லாப சதவிகிதத்தில் முதன்மை முதலீட்டாளருக்கு ஒரு குறிப்பிட சதவிகித பங்கு கிடைக்குமாம். “உஷாரய்யா உஷார் – ஆசையே முன்னேற்றத்திற்கு காரணம் என்றாலும், பெரும்பாலும் அதுவே துன்பத்திற்கும் – பெரு இழப்புக்கும் காரணம்” என ஒரு தரப்போர் இது குறித்து கவலையும் எச்சரிக்கையும் தெரிவிக்கிறார்கள்.
ஒன்று – இரண்டு மற்றும் மூன்றாம் வகையறா திருடா மற்றும் திருடிக்களை விட இந்த Corporate வகை மிக மிக அபாயகரமானது எனவும் கட்டுரையை முடித்து இருப்போம்..
சரி, இப்போது என்னதான் சொல்ல வருகிறாய் என்கிற தாஜூதீன் பாய் போன்றவர்களின் குரல் கேட்கிறது..
தேவை கவணம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் பெரும் பணமீட்ட ஆசைப்படுதல் எப்போதும் மிக அபாயகரமானது என்பது காலத்தில் அழியாத வரலாறு..
சுனாமியை விட..
பெரும் மழையைவிட..
பெரும் வறட்சியைவிட..
மிக மிக ஆபாத்தானவர்கள் என்றது அன்றைய மூரார்பாது – My Screen பதிவு
அக்கால பேரரசர்கள் தன் குடியை பாராட்டி பரிசு வழங்க விரும்பினால் பொற்காசுகளை பரிசளிப்பார்கள். அவ்வாறு பெற்ற பொற்காசுகளை சாதாரன குடிகள் தனக்கு தோதான ஓரிடத்தில் தன் வாரிசுகளே அறியாதவண்ணம் புதைத்து வைப்பார்கள். வயோதிகம் காரணமாக அவர்களுக்கு மறதி, பார்வை கோளாறு அல்லது மரணம் ஏற்பட்டால் அந்த பொற்காசுகள் அப்படியே பூமித்தாயோடு சேர்ந்துவிடும் கதைகளும், பின்னர் நில வேலைகள் நடக்கும் பொழுதில் கிடைக்க.. புதையலோ புதையல் என அக்குடும்பம் திடீர் பணக்கார குடும்பமாகிவிடுவதும் உண்டு.
நம் முன்னோர்கள் தங்கத்தின் அருமை புரிந்தவர்களாக இருந்த காரணத்தினால் தன் வாரிசுகளுக்கு திருமண சீர் பரிசாக தங்கம் போட்டு திருமணம் செய்து வைத்தார்கள்.
“என் பிள்ள சீம ராசா மாதிரி.. 10 பவுனுக்கு ஒரு குண்டு மணி குறைஞ்சாகூட உன் பொண்ணு கழுத்துல தாலி ஏறாது ஆமாம்..” என கரார் காட்டிய பல பலே மாமிக்கள் அக்காலத்தில் உண்டு.
12-03-2021நம் மூரார்பாது – My Screen’ன் 106’வது கட்டுரையான
நிக்காஹ் ( எ ) திருமணம் கட்டுரையில் ஏராளமான உணவு வகைகளை, சகட்டு மேனிக்கு வீணடிக்கின்றனர். இவ்வாறான உணவு பதார்த்தங்களை யாராலும், அத்தனையையும் சாப்பிட முடியாது. கிடைத்தவற்றை, வயிற்றுக்குள் திணித்து, மூச்சு திணறி, காது வெடித்து, ‘பிரஷர்’ ஏறி, கார், பஸ் பிடித்து, வீடு வந்து சேர்கையில் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அப்துல் ரஹ்மான்” என்றாகிவிடும். சமீபத்தில் இப்படித் தான், ஒரு திருமண விழாவில் மணமகள் அணிந்திருந்த ஆபரணங்களைப் பார்த்து, ‘அடடா… நம்ம பாய் ஏராளமாக, தாராளமாக மகளுக்கு நகையை சேர்த்து வைத்திருந்தார் போலும். எவ்வளவு அள்ளிப் போட்டிருக்கிறார்” என தன் மனைவியிடன் ஒருவர் சொல்லியுள்ளாராம். ஆனால் அவர் மனைவியோ “அத்தனையும், ‘கவரிங்!’ போட்டோவும்… படங்களும் நன்றாக வரவேண்டும் என்பதற்காக, வாடகைக்கு வாங்கிய கவரிங் நகைகள் அவை. நாளை வந்து பாருங்க. உங்க பாய் மகள் எவ்வளவு நகை போட்டிருக்கிறார் என்று…” என சொல்வார் என பதிவிட்டிருப்போம்.

சரி, இந்த தங்கம் கடந்து வந்த விலைகள் என்னவென மிக சுருக்கமாக காண்போம்.
இந்தியாவில் தங்கம் விலையின் வரலாறு தோராயமாக சவரன் விலை
1920 ஆம் ஆண்டில் Rs,21
1950 ஆம் ஆண்டில் Rs.99
1970 ஆம் ஆண்டில் Rs,184
1980 ஆம் ஆண்டில் Rs.1,330
1990 ஆம் ஆண்டில் Rs,3,200
2000 ஆம் ஆண்டில் Rs.4,400
2010 ஆம் ஆண்டில் Rs.18,500
2020 ஆம் ஆண்டில் Rs.48,000
2025 ஆம் ஆண்டில் Rs.1,02,000
2026 ஆம் ஆண்டு சனவரியில் Rs.1,30,000 + என விலை ஏறிக்கொண்டே போகிறது.
ஏன் இந்த விலை ஏற்றம்..?
உலகளவில் மத்திய வங்கிகள் அதிக தங்கம் வாங்குவது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவு, பணவீக்கம், மற்றும் உலகளாவிய அரசியல் பதற்ற போர் சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது.
சீனா மற்றும் இந்தியாவில் நகை தேவை அதிகரிப்பு மற்றும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குவது, விநியோக பற்றாக்குறை ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
தங்கம் விலை உயர்விற்கான முக்கிய காரணங்கள்:
மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல்: ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பில் தங்கத்தை அதிகளவில் சேர்த்து வருவது விலை உயர முக்கிய காரணம்.
பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு வீழ்ச்சி: பணவீக்கம் அதிகரிக்கும் போது, காகிதப் பணத்தின் மதிப்பு குறைவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடுகின்றனர். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு காரணம்.
பூகோள அரசியல் பதற்றம்: போர் சூழல், பொருளாதார உறுதியற்ற தன்மை நிலவும்போது, பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்பட்டு, அதன் விலை உயர்கிறது.
தேவை அதிகரிப்பு & விநியோக பற்றாக்குறை: இந்தியா மற்றும் சீனாவில் தங்க நகைக்கான தேவை எப்போதும் அதிகமாக உள்ளது. அதே சமயம், தங்கத்தின் சுரங்க உற்பத்தி மற்றும் விநியோகம் குறைவாக இருப்பதால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்கிறது.
முதலீட்டாளர்களின் ஆர்வம்: பங்கு சந்தை மற்றும் பிற முதலீடுகளில் அபாயம் இருக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் இடிஎஃப் (ETF) முதலீடுகளில் ஆர்வம் காட்டுவது, விலையை உயர்த்துகிறது.
எளிமையாகச் சொன்னால், உலக அளவில் தங்கத்திற்கு இருக்கும் பற்றாக்குறையான சப்ளை-யும், அதிகப்படியான டிமாண்ட்-ம் தான் விலை உயர்வின் அடிப்படை என்கிறார்கள்.
ஆனால், உண்மை சற்று வேறாக உள்ளது.
இப்போதய தங்கத்தின் விலை ஏற்றம் சாதாரன மக்களின் வணிகத்தால் நிகழும் ஒன்று அல்ல. இது நாடுகளுக்கிடையேயான மற்றும் பெரும் வணிக நிறுவணங்களுக்கு இடையேயான போட்டியாகும்.
உலகில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்
தங்கத்திற்கு உலக பொருளாதாரத்தில் எப்போதும் ஒரு முக்கியப்பங்கு உண்டு. அதன் மதிப்பு மற்றும் விலையில் உள்ள ஸ்திரத்தன்மை காரணமாகவே தங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இன்றும் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தை வைத்திருக்கின்றனர். அந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
- அமெரிக்கா – அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான தங்க இருப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா 8,100 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இதில் பெரும்பாலான தங்கம் ஃபோர்ட் நாக்ஸ் போன்ற இடங்களில் உள்ள பாதுகாப்பான பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் தற்போதைய வலுவான உலகளாவிய நிலைக்கு அவர்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவும் முக்கிய காரணமாகும்.
2.ஜெர்மனி – ஜெர்மனி 3,350 டன்களுக்கும் அதிகமான தங்க இருப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அவர்களின் தங்கத்தின் கணிசமான பகுதி பிராங்பேர்ட்டில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள தங்கம் வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் இன்னும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தங்கம் ஜெர்மனியின் நிதிப் பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
- இத்தாலி சுமார் 2,450 டன் தங்கத்துடன் இத்தாலி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இத்தாலியின் பொருளாதாரம் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருந்தாலும், அதன் மத்திய வங்கி நீண்ட கால பாதுகாப்பான சொத்தாகத் தங்கத்தையே பெரிதும் நம்பி வருகிறது. 4.பிரான்ஸ் சுமார் 2,435 டன் அளவுள்ள தங்கத்துடன் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது. நாட்டின் பண ஸ்திரத்தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் பிரான்ஸ் மத்திய வங்கிக்கு ஒரு மிகவும் பயனுள்ள கருவியாக தங்கம் உள்ளது.
5.ரஷ்யா – ரஷ்யாவின் தங்க கையிருப்பு 2,300 டன்களுக்கும் அதிகமாக உள்ளது. அரசியல் அழுத்தங்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தாலும் ரஷ்யா கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து சீராகத் தங்கத்தைக் குவித்து வருகிறது, குறிப்பாக வெளிநாட்டு நாணயங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காகவே இவ்வாறு செய்கிறது.
6.சீனா -சீனா தனது தங்க இருப்பைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 2025-ஆம் ஆண்டில் 2,200 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை சீனா குவித்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகிய சீனா, யுவானை ஆதரிப்பதற்கும் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் தனது உத்தியின் ஒரு பகுதியாகத் தங்கத்தைக் கருதுகிறது.
7.சுவிட்சர்லாந்து தனது நிதி நிலை மற்றும் வங்கித் துறை வலிமைக்காக அறியப்படும் சுவிட்சர்லாந்து, சுமார் 1,040 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மிகவும் குறைவான மக்கள்தொகையைக் கருத்தில் கொள்ளும்போது, சுவிட்சர்லாந்தின் தனிநபர் தங்க கையிருப்பு உலகின் மிக உயர்ந்தவற்றில் ஒன்றாக உள்ளது.
8.இந்தியா 2025-ஆம் ஆண்டில், இந்தியாவின் மத்திய வங்கியின் கையிருப்பில் சுமார் 800 டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியா உலக அளவில் தங்க கையிருப்பில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது இந்தியாவின் கோயில்களிலும், தனிப்பட்ட அளவில் வைத்திருக்கும் பல டன் தங்கத்தைக் கணக்கில் கொள்ளாதது ஆகும். ஒருவேளை அதையும் கணக்கிட்டால் இந்தியா டாப் 3 இடங்களில் இருக்கக்கூட வாய்ப்புள்ளது.
9.நெதர்லாந்து – நெதர்லாந்து சுமார் 620 டன் தங்கத்தை வைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நெதர்லாந்து தனது தங்கத்தின் பெரும் பகுதியை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து உள்நாட்டு சேமிப்புக் கிடங்குகளுக்குத் திரும்பக் கொண்டு வந்தது.
10.துருக்கி 550 டன் தங்கத்துடன் துருக்கி பத்தாவது இடத்தில் உள்ளது.
இன்று இந்த தங்கம் இப்படியெல்லாமாகி காணக்கிடைக்காத அழைக்கவே முடியாத பொருளாகிவிடும் என்று அன்றே கணித்த நம் தாத்திமார்களும் – நானிமார்களும் தம் பேரக்குழந்தைகளை தங்கம் தங்கம் என தூக்கி கொஞ்சியுள்ளார்கள்.
தங்கம் அது தனக்கான மதிப்பை என்றும் இழப்பதில்லை..
எல்லா இடங்களிலும் தங்கம் தன் இருப்பை காட்டும்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள், அதாவது
“உன்னை தங்கம்னு நினைச்சேன்.. ஆனா, நீ தகரம்னு காட்டிட்டில்ல..”
தங்கம் தரையிலே தவிடு பானையிலே என்பார்கள்.. அதாவது நல்லவனை இனம் காணாமல் தீயவனை தூக்கி கொண்டாடி நோகையில்
“அந்தப்பையன் பத்தரை மாற்று தங்கம்க.. இவன் தவிடுங்க..” என்பார்கள்.
“பொன்னோட அழகை என்னன்னு சொல்ல.. தங்க விக்ரகம் மாதிரி இருபாங்க” எனவும் கூறுவார்கள்.
அக்காலத்தில் திருமணம் என வருகின்றபோது பெரும்பாலும் கேட்டறிய விரும்புகின்ற ஒரு சேதி
“பொண்ணுக்கு எவ்ளோ நகை போட்டாங்க..” என்பதே.
தாத்திமார்களும் / நானிமார்களும் தன் மருமகளுக்கு தராத தன் பூர்வீக நகைகளை தன் பேத்திக்கோ அல்லது பேரனின் மனைவிக்கோ தந்தளிப்பது உண்டு.
சாதாரன மக்களின் அவசர கால பணத்தேவைகளின் போது உடன் நிற்பது தங்கம்தான்.
சரி, இன்றைய நிலையில் தங்கம் வாங்கலாமா..?
ஒன்றை கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும். சந்தையில் பொருள் விலை ஏற்றம் என்பது வெகுஜன மக்களின் அன்றாட வாழ்வியல் பொருட்டு கானும் விலை ஏற்றமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அது ஆபத்தே..
இப்போதய இந்த சமீப கால தங்கத்தின் விலை ஏற்றம் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்வியல் பொருட்டு கானும் விலை ஏற்றமாக இல்லை.
தனியார் நிறுவணங்கள் / நாடுகள் வாரம் தோறும் வாங்கி குவிக்கும் ஆயிரம் கணக்கிலான கிலோ தங்கத்தினால் ஏற்படும் சந்தை அதிர்வுகள்.
மேலும், உலகளாவிய அளவில் டாலருக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பு அச்சுறத்தல் காரானமாக தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் கவணம் திரும்பியுள்ளது.
இரண்டு நாட்கள் முன்பு ரூபாய் 1,34,000/- ஆக விலை கண்ட தங்கம்
31-01-2026 ஆம் தேதியில் சவரன் விலை ரூபாய் 1,19,200/- என்கிறார்கள். வெள்ளி ஒரே நாளில் 85,000/- விலை சரிவு கான்கிறது.
தங்கத்தில் பெரும் திமிங்கிலங்கள் முதலீடு செய்வதால் தங்க கடலில் இந்த அதிர்வுகள். அந்த முதலீடுகளை மீண்டும் பணமாக மாற்ற முயற்சிக்கையில் இந்த அதிர்வுகள் காணாமல் போய்விடும்.
நம் இருப்பிலுள்ள தங்கத்தை காப்பதும், இப்போதைய சந்தை விலையில் தங்கம் , வெள்ளி வாங்காமல் இருப்பதுமே நலம் என தோன்றுகிறது.
நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் கண்ட மூன்று வகை திருடா திருடிகளைவிட பெரும் உலக சந்தையின் அதிரடி மாற்றங்கள் மிக ஆபத்தானவை.

தாத்திமார்களும் / நானிமார்களும் நம்மை என் தங்கம் என கொஞ்சிய அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் அப்போது புரியவில்லை..
இப்போது புரிகிறது.
இன்ஷா அல்லாஹ், மீண்டும் சந்திப்போம்.
மூரார்பாது – My Screen
Admin & Team






Leave a reply