
தாவடிப்பட்டு மர்ஹூம் ஜனாப். முஹம்மது முஸ்தபா # MMS 000 204
MMS – 000204
15-02-2026
ஜனாப்.மு.மு.பாருக்.

&
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865
தாவடிப்பட்டு மர்ஹூம் ஜனாப். முஹம்மது முஸ்தபா
ஜனாப்.முஹம்மது முஸ்தபா அதுவும் தாவடிப்பாட்டார் முஸ்தபா என்றால் மூரார்பாது மஹல்லாவாசிகளுக்கு மிகவும் பரிச்சையமான பெயர்.
“அப்படியா..? எனக்கு தெரியாதே..? என்பவர்கள் மூரார்பாது மஹல்லாவாசியாக இல்லால் இருப்பவர்களாக இருப்பார்கள், அல்லது எப்போதாவதுகூட மூரார்பாது சுன்னத் பள்ளிக்கு தொழு வராதவர்களாக இருப்பார்கள்.
ஏறக்குறைய எல்லா வக்த்துக்கும் தொழுகைக்கு தவறாமல் வருபவர்களில் தாவடிப்பட்டு ஜனாப். முஹம்மது முஸ்தபா அவர்களும் ஒருவர்..
ஏன் அவரை தாவடிப்பட்டு முஸ்தபா என்கிறோம்..? அதுதான் அவருக்கான பெயர் அடையாளமா என்றால் அது மட்டுமல்ல..
அரபி மதரஸா முஸ்தபா என்கிற இன்னுமோர் அடையாளமும் அவருக்கு உண்டு. அரபி மதரஸாவுடன் அவருடைய தொடர்பு என்ன என பார்க்கும் முன் வாருங்கள் சற்றே பின் நோக்கி போவோம்..
காலம் 1971 மூரார்பாது
மூரார்பாது அல்மதரஸதுல் ஹஸனதுல் ஜாரியா அரபி & உருது மதரசா
நம் முன்னோருக்கும், நமக்கும், நமக்கு பின்வரும் சந்ததியினருக்கும் மார்க்க கல்வியின் தொடக்கம் நமது அரபி வகுப்பு என்கிற அரபி மதரசாக்களே..
அப்படியான அரபி மதரசா நமது ஊர் மூரார்பாதுவில் எப்போது முறையாக தொடங்கப்பட்டது எனக் காணலாம்..
மர்ஹூம். ஜனாப்.S S அப்துல் ஜப்பார் அவர்கள் 1971’ல் மூரார்பாது அல்மதரஸதுல் ஜாரியா அரபி & உருது மதரசா கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு அப்போதைய புதுவை முதல்வர் M O H பரூக் மரைக்காயர் அவர்களை சந்தித்து தேதி பெற்று அவர்களை விழாவிற்கு அழைத்து வந்ததிலும், அக்காலத்தில் நமது ஊர் மூரார்பாது மதரசாவின் முன்னேற்றத்தில் மர்ஹூம் ஜனாப்.ப.இ.மீரா மைதீன் அவர்களுடன் இனைந்து பணியாற்றியதிலும் பெரும் பங்கு வகித்தவர் .
மதரஸா துவக்க நாள் : 1971 செப்டம்பர் 17
ஜனாப்.ப.இ.மீராமைதீன் சாஹிப் அவர்கள் நிர்வாகியாக மூரார்பாது சுன்னத் ஜமா அத்தார்கள் தலைமையிலான
“மூரார்பாது அல்மதரஸதுல் ஹஸனதுல் ஜாரியா அரபி & உருது மதரசா” என்கிற பெயரில் உருவாகியுள்ளது.
“அதெல்லாம் சரி.. தொடக்கமே குழப்பமாக இருக்கிறதே.. நமது (பெண்கள்) அரபி மதரசாவின் பெயர் மதரசா யே மிஃப்தாஹ் அல் குலூபி பெண்கள் அரபி கல்லூரி என்பதுதானே.. ஆனால், கல்வெட்டில் மூரார்பாது அல்மதரஸதுல் ஹஸனதுல் ஜாரியா அரபி & உருது மதரசா என இருக்கிறதே.. இது என்ன விதமான வரலாறு” என்பவர்களுக்கு.. சற்றே பொருங்கள்..
ஆரம்ப காலத்தில் ஜனாப்.மீராமைதின் அவர்கள் முன்னெடுத்த மதரசா நமது ஊர் மூரார்பாது அரபி & உருது மதரசா ஆகும். அவருடன் இனைந்து நமது ஊர் பிள்ளைகளுக்கு
அப்துல் கரீம் வாத்தியார்,
காஜி முஸ்தபா
சூரப்புத்துரார் அல்லாபிச்சை மோதினார்,
கருப்பு மோதினார்,
அப்துல் ரஜாக் மோதினார்,
ராஜ் முஹமது இமாம் போன்றோரும் இன்னும் சிலரும் முக்கிய பங்கு எடுத்துள்ளனர்.
மூரார்பாது சுன்னத் ஜமாத் மூலமாக அரபி & உருது கல்வி கூடம் இருந்த அதே காலகட்டத்தில் பெருவாரியான பிள்ளைகளுக்கு அரபி சொல்லிக்கொடுத்தவவர்களில் மிக முக்கியமானவர் மர்ஹூம் கரீம் வாத்தியார் அவர்களின் மகள் ரஹீமா ( ஹஜ்ரத் ) ஆவார். இவரிடம் அரபி பயின்ற பிள்ளைகள் ஏராளம். இவரின் அரபி உச்சரிப்பும் மிக தெளிவாக இருக்கும். நோன்பு காலங்களில் முழு குரான் ஓதி முடிக்கும் பிள்ளைகளுக்கு இவர் தரும் பணப்பரிசு அப்போது மிகப்பிரபலம்.. மொஹ்தர்மா ரஹீமா அவர்களுக்கு அவரது அரபி பாடசாலை வகுப்புகளுக்கு பக்க பலமாக இருந்தவர் அவரது கணவர் தாவடிப்பட்டார் ஜனாப் முஹம்மது முஸ்தபா அவர்கள்..
ஒவ்வொரு தினமும் பிள்ளைகள் அரபிப்பாடம் முடிந்து செல்லும் போது ஐந்து கலிமாவுடன் இவ்வாறாக..
ஹஜ்ரத்தே மாணாக்கர் நாங்கள்,
ஆதம் நபி மக்கள் நாங்கள்,
ஆகிர் நபி உம்மத் நாங்கள்
வேதமே குரான் ஆகி,
நாடியே ஓத வந்தோம்,
நன்றாய் பாடமாக்கி எங்களை அனுப்ப வேண்டும்.
ஹஜ்ரத்தே ஸலாம் அலைக்கும்..
ஸலாம் கூறி விடைபெறுவார்கள் என நாம் நம் மூரார்பாது – My Screen’ன் 85 ஆம் பதிவு 01-11.2020’ல் பார்த்திருப்போம்.
அரபி பாடத்திற்காக ஜனாப்.முஹம்மது முஸ்தபா மற்றும் மொஹ்தர்மா ரஹீமா ஆகியோர்கள் என்றால் பின்னாளில் அவர்களின் மகனார் ஜனாப்.மு.மு.பாருக் உலக கல்விக்காக முக்கியத்துவம் அளித்து நன்கு படிக்கும் பொருளாத போராட்ட பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டினார் என்பது வேறோர் கிளை பாதையாகும்..
மெல்ல மெல்ல உலக கல்வியின் பக்கம் பெரும்பாலானோர் ஈர்க்கப்பட்டு அல்லது தள்ளப்பட்டு விடுகிறோம். 10 ஆம் வகுப்பும் கூடவே சிலர் டுடோரியல் கல்லூரி மற்றும் 12 ஆம் வகுப்புவரை சராசரியாக படிக்கும் ஆண் ,பெண் என இருபாலரும் வந்து விடுகிறோம்.
“மூரார்பாது மதரஸா – 1990’களில்..
மதரசாவின் தொடக்கம் 1994’ல்
ஆலிமா – மதினா பேகம் உஸ்தாத் அவர்களுக்கு சுல்தான் வீதி பொகர்தீன்.சாஹிப் அவர்களின் இளைய மகன் முன்னாள் மூரார்பாது முஸ்லிம் சுன்னத் ஜமாத் தலைவர் ஜனாப். அக்பர் பாஷா அவர்களுடன் 1990 ஆம் ஆண்டு நிக்காஹ் நடக்கிறது. அப்பொழுது அவர் மதரசாவில் ஒரு வருட படிப்பை மட்டும் முடித்த நிலையில் அவருக்கு திருமணத்தை அவர்களது பெற்றோர்கள் முடித்து வைக்கிறார்கள். அதன்பிறகு தனது கணவரிடம் தன்னுடைய படிப்பை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் தனது செலவிலேயே மேற்கொண்டு படிக்க வைக்கிறேன் என்று படிக்கவும் வைக்கிறார்.
மேலும், அவரது தங்கையான ரமீஜா பேகம் ரியாஸ் அஹமத் அவர்களையும் அதே மார்க்க படிப்பு படிக்க உடன் அனுப்புகிறார். இவ்வாறாக 1994 ஆம் ஆண்டு இருவரும் படிப்பை முடித்து ஆலிமா பட்டம் பெற்ற நிலையில் தங்களுடைய வீட்டு திண்ணையில் தொடங்கிய மதரசாவை விரிவாக்கவும், ஊர் மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்லவும், நமது பள்ளிவாசலின் முன்பு இருக்கின்ற அந்த கட்டிடத்தில் மதரசா தொடங்கினார்கள்.
மதரசாவின் நிர்வாகம் ஆரம்ப கால கட்டத்தில் பெண்களால் 1994’ல் நிர்வகிக்கப்பட்டாலும், பின்னர் 1995’களில் மர்ஹூம் ஜனாப்.கரீம் வாத்தியார் அவர்கள் தலைவராகவும், ஜனாப். கரடிசித்தூர் ரஜாக் அவர்கள் கணக்காளராகவும் , பொருளாளராகவும் பின்னர் செயலாளராகவும் இருந்து கவணித்து வந்துள்ளார்கள். 1995 முதல் 2015 வரை 20 வருடம் அரபி மதரசா நிர்வாகத்தில் இருந்துள்ளார் ஜனாப் கரடிசித்தூர் அப்துல் ரஜாக் அவர்கள்
ஜனாப். அப்துல் ரஜாக் அவர்களின் காலத்தில் தலைவராக ஜனாப்.அப்துர் ரஹ்மான் ( தப்படியர் ), மேலேரி மங்கலத்தார் ஜனாப்.சவுக்கத் அலி மற்றும் ஜனாப்.முஹம்மதுமுஸ்தபா (தாவடிப்பட்டார் ) அவர்கள் தலைவராகவும் இருந்துள்ளார்கள்.
மதரசாவின் முக்கிய பொறுப்புகளில் இருந்தோர்
தலைவராக மர்ஹூம் ஜனாப். அப்துல் கரீம் வாத்தியார், பஷீர் அஹமது வாத்தியார்,
செயலாளராக கரடிசித்தூர் ஜனாப். அப்துல் ரஜாக்,
நீண்ட நாள் தலைவராக ஜனாப்.அப்துல் ரஹ்மான் ( தப்படியார் )
நிர்வாகிகளாக ஜனாப். கோசாலி ஹபிபுல்லாஹ் மற்றும் ஜனாப்.நூருல்லாஹ் ஆகியோர்களும் இருந்துள்ளனர்.
மதரசாவின் மற்றும் சில நிர்வாகிகள் யார் யார் என வரலாற்றினை பார்க்கின்றபோது 2018’ல் தாவடிப்பட்டார் ஜனாப்.M.முஹமது முஸ்தபா – தலைவராக பொறுப்பேற்கிறார்.
யார் இந்த முஸ்தபா..?
தென்னாற்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் தாவடிப்பட்டு என்கிற மிக சிறிய கிராமத்தில் 4 ஆண் சகோதரர்கள் மற்றும் 2 பெண் சகோதரிகளுடன் 19540‘களின் வாக்கில் பிறந்தவர்தான் ஜனாப்.முஹம்மது முஸ்தபா.
விவசாயம் ஒன்றே பிரதானம் என்ற நிலையில் தன் 10-12 வயதில் அப்பா வபாத் ஆகிட 5 ஆம் வகுப்புவரை மட்டுமே இருந்த தாவடிப்பட்டில் 5 ஆம் வகுப்புவரை படித்தவர். அவரது குடும்பத்தில் அதிகம் படித்தவர் என்றால் அது ஜனாப்.முஹம்மது முஸ்தபா அவர்கள் மட்டுமே. 5 ஆம் வகுப்புவரைதான் படிப்பு என்றாலும் தமிழில் எந்த பிழையும் இன்றி எழுதக்கூடியர் என்கிறார்கள்.
ஜனாப்.முஹம்மது முஸ்தபா அவர்களுக்கு நமது ஊர் அப்துல் கரீம் ஆசிரியர் அவர்களின் 8’ஆம் வகுப்புவரை அப்போதே படித்த மொஹ்தர்மா ரஹீமா அவர்களுடன் 1968-69 வாக்கில் நிக்காஹ் நடந்தது.
மர்ஹூம் அப்துல் கரீம் ஆசிரியராக இருந்தாலும் விவசாயத்தின்மீது மிகுந்த நாட்டம் கொண்டவராக இருப்பார். அதனால், தனது மாமனார் மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களுடன் இனைந்து விவசாயம் செய்துள்ளார்.
விவசாயம் பொய்க்கவும் 1975-80’களில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினால் பஞ்சம் பிழைக்க சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு வெளிநாட்டு வேலைக்கு சென்றார்.
12 – 15 வருட வெளி நாட்டு வாழ்க்கையில் போதுமான வருமானம் என்றாலும் தன் மனைவி ரஹிமாவின் அரபி பாட வகுப்புகளுக்கு அவர் தடை ஏதும் சொன்னதில்லை. குடும்ப மருத்துவர் என்பதுபோல மூரார்பாதுவில் நிறைய குடும்ப பிள்ளைகளுக்கு அரபி பாடம் எடுத்தவர் என்றால் அது மொஹ்தர்மா ரஹீமா முஸ்தபா அவர்கள்தான்.
12-15 வருட வெளிநாட்டு வாழ்க்கைக்கு பிறகு விவசாய நிலம் சொந்தமாக வாங்கி விவசாயம் செய்துள்ளார்.
அவரது மகனார் ஜனாப் மு.மு.பாருக் அவர்களிடம் அவரது தந்தை முஹம்மது முஸ்தபா குறித்து கேட்ட சில விபரங்களுக்கு..
“விவசாய அறுவடையின்போது நான் என் சின்ன வயதில் இரவில் அப்பாவுடன் காட்டில் தங்கி காவல் இருப்பேன். அந்த இரவுகள் நமக்குள் அச்சம் ஏற்படுத்தினாலும், தந்தை அருகில் இருக்கிறார் என்கிற என்னமே, “இன்னும் என்னடா பயம், இன்னும் என்னடா முழிப்பு.. தூங்குஊஊஊ..” என சுகமான தூக்கத்தை தந்துவிடும்
“அப்பா, எப்போதும் படிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார். நான் படிக்கலபா.. நீ நல்லா படிச்சிக்கோ.. படிப்புதான் உன்னை காப்பாற்றும், உன்னை நம்பி வந்து உதவின்னு கேட்டு நிற்பவர்களையும் காப்பாற்றும்..” என்பார்.
“1990’களில் என்னை பொறியியல் படிப்பு படிக்க வைக்க ஆசைப்பட்டார். பெரும் பணம் தேவைப்பட்டதால் அந்த படிப்பை அன்று படிக்க எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதற்காக என் தந்தை மிகவும் மனம் வருந்தினார்.”
“என் நாநா மர்ஹும் அப்துல் கரீம் அவர்களுக்கு உதவியாக மதரஸா நிர்வாகத்தில் உடன் நின்றாலும் அவர் முழுக்க முழுக்க மதரஸா நிர்வாகத்தின்பால் வந்தது வேறோர் காலகட்டத்தில்தான்.”
“மதரஸா நிர்வாகத்தில் பொருளாளர், செயலாளர் மற்றும் தலைவர் என பொறுப்பில் இருந்தாலும் மதரஸா சந்தா வசூலிக்க இவரே வீதி வீதியாக செல்வார்.”
“ஒரு கால கட்டத்திற்கு அவரது பெரும் எண்ணங்களில் மாத சந்தா, பிள்ளைகள் சேர்க்கை, சாப்பாடு, பட்டமளிப்பு, மதரஸா கட்டணம் கட்ட வழியில்லாத பிள்ளைகளுக்கான தேவை என்றே யோசிப்பார். ஜனாப் கரடி சித்தூர் அப்துல் ரஜாக் அவர்களுடன் இனைந்து மதரஸா பணியாற்றினார்.
“நம் சுற்று வட்டாரத்தில் பெண் பிள்ளைகள் தங்கி பாடம் பயிலும் ரிஸ்வான் மதரஸா என்றால் அது நம் மூரார்பாது பெண்கள் மதரஸாதான். மற்ற ஊர்களில் பெண்கள் தங்கி பயிலும் அரபி பாட சாலைகள் ஆரம்பிக்க நமது ஊர் மதரஸாவின் மாணவிகள் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்க பெரும் கவலை கொண்டார் என் தகப்பனார்.”
த.மு.மு.க ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மிக தீவிரமாக அந்த இயக்கத்தில்பால் ஈர்க்கப்பட்டார்.
இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை என கடுவு ஜனாப்.அப்துல் கனி ஆசிரியர், ஜனாப்.பஷீர் ஆசிரியர், காபரா ஜனாப்.முஸ்தபா, ஆகியோருடன் களம் கண்டவர்.
மக்கள் வட்டியின் பக்கம் செல்வதை தடுக்க வட்டியில்லா கடனாக ஜனாப்.இப்ராஹிம் அவர்களுடன் இனைந்து ஜனாப்.அப்துல் கனி ஆசிரியர், ஜனாப்.பஷீர் ஆசிரியர், ஜனாப்.காபரா முஸ்தபா ஆகியோர்களுடன் என் தந்தையும் செயல் ஆற்றியுள்ளார். மேலும், இஸ்லாமிய வட்டியில்லா வங்கி கடன் முன்னெடுக்கும் பணிகளை சிலாகித்து பேசுவார் என் தந்தை..” எனவும் நினைவு கூர்ந்தார் ஜனாப்.மு.மு.பாருக்.
மேலும் தன் தந்தை குறித்து நினைவு கூர்கையில்..
“அவருக்கு தாவடிப்பட்டுவைவிட மூரார்பாதுவை மிக அதிகம் பிடிக்கும் எனலாம். இருப்பினும் வாரம் அல்லது 10 நாட்கள் ஒருமுறை தாவடிப்பட்டுவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று தன் உறவுகளையும், நிகழும் விவசாயம் குறித்தும் கண்டு வருவார்.”
“என்னுடன் அவர் சவுதி அரேபியாவில் இருக்க 6 மாதம் விசா எடுத்து அழைத்து வந்தேன். ஒரு மாத முடிவிற்குள்ளாகவே தனக்கு இங்கே சரிவராது எனவும், மூரார்பாதுவிற்கு என்னை அனுப்பிவிடு என 40 நாட்களில் மீண்டும் மூரார்பாது வந்துவிட்டார். அப்படி மூரார்பாது – பள்ளிவாசல் – தொழுகை – மதரஸா என்றே தன் நாட்களை விரும்பி அமைத்துக்கொண்டார்.”
“அவரது திருப்தியே என் நிம்மதி என அவரது போக்கிலேயே நானும் அவரது எண்ணத்திற்கு வழி அமைத்திருந்தேன்.”
“சனவரி மாதம் 2026 முதல் வாரம் எல்லாவற்றையும் மாற்றிப்போட்டது.
நாம் ஓடி ஆடி ஓய்வில்லாமல் விளையாடிய மூரார்பாது பிரதான சாலை என் தந்தையை ஓய்வுக்கு கொண்டு போன நாள் 06-01-2026″ என முடித்துகொண்டார் ஜனாப்.மு.மு.பாருக் அவர்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுவூன்.
கள்ளக்குறிச்சி To திருவண்ணாமலை ( வழி – மூரார்பாது )
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலகம் மறுக்க முடியாத சொல்லியல். அப்படி இருக்க மூரார்பாது மட்டும் என்ன செய்யும்..!
“என்னய்யா ரோடு இது குண்டும் குழியுமா..?” என ஆதங்கப்பட்டவர்களுக்கும்..
“கள்ளக்குறிச்சி To திருவண்ணாமலை 69 கிலோமீட்டர்தான்.. ஆனா, முழுசா இரண்டு மணி நேரம் ஆகுது” என வேதனைப்பட்டவர்களுக்கும்..
“அட.. கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகர் ஆகிடுச்சுல்ல.. இனிமே பாருங்க வளர்ச்சியை என..” ஜோசியம் சொன்னவர்களுக்கும்..
“நான் வளர்கிறேன் ஊராரே..” என்கிற ரீதியில் பிரதான சாலை பெருக்கப்போகிறது.
இரண்டு வழி சாலை இப்போது அதிவேக நான்கு வழி சாலை. கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக பங்களிப்பில் முதலமைச்சர் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் 69 கிலோமீட்டர் தூரம் கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை சாலையானது விரிவாக்கம்.
ஏன் இந்த விரிவாக்கம்..?
மேற்சொன்ன அந்த 69 கிலோமீட்டர் பயண நேரம் தற்போது 100 முதல் 120 நிமிடங்களாக உள்ளதாம். சாலை விரிவாக்கத்திற்குப்பிறகு அது 70- 80 நிமிடங்களாகுமாம்.
விபத்து சொல்லிவிட்டு வருவதில்லை.. கவனம் நம் சாலைகளில் மிக முக்கியம்.
அல்லாஹ், மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களின் பாவங்களை மன்னித்து அவரது நற்காரியங்களை ஏற்று, மிக உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக..
ஆமின்
மூரார்பாது – My Screen
Admin & Team








Leave a reply