
இந்திரன் – சந்திரன் # MMS 000 208
MMS – 000208
17-05-2026
✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்..)
ஆதிகால மனிதன் சிறு சிறு ஒலி எழுப்புதல் மூலமாக தன் எண்ண ஒட்டத்தை எதிராளிக்கு புரிய வைத்தான். அவ் ஒலியே வட்டாரங்களின் பரப்பளவுக்கு ஏற்பவும் அதன் வியாபார மற்றும் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பல்வேறு மொழிகளாக உயிர்பெற்றன. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி என்பதெல்லாம் அவரவர் தன் மொழிக்கு பெருமை சேர்க்க பேசுவதாகும்.
கடின உழைப்பாளிகளாக ஆதி கால மனிதர்கள் இருந்தனர். அவர்கள் உழைப்பின் மிச்சமும் சொச்சமுமே நாம் இப்போது அனுபவிக்கும் அத்துனையுமாகும்.
விவசாயம் முதல் கடின காடு திருத்தி அதை வாழ்விடமாக்கியது வரை..
உழைப்பாளிக்கு சோர்வு தெரியாமல் இருக்க வேலை களத்தில் இலக்கியம் படைத்தனர். அதனை பாடல்களாகவும் ஊர் கூத்து, தெருக்கூத்து வடிவிலும் பேசி , பாடி மற்றும் ஆடி மகிழ்ந்தனர். மக்களிடையேயான வரவேற்புகளால் நிறைய கூத்து குழுக்கள் உருவாகின. அதன் மூலம் கலைகள் பல முகங்கள் கொண்டு கரகாட்டம், ஒயிலாட்டம், குயிலாட்டம்,பொம்மலாட்டம், தப்பாட்டம், பறையாட்டம், இசையாட்டம், ஒப்பாரி, மேடை கச்சேரி, மேடை நாடகம் என பல்வேறாக வேர் விட்டன. ஒரே கருத்துகளை பல்வேறு குழுக்களும், பல்வேறு கருத்தாக்கத்தை ஒரே குழுவும் பாடல், இலக்கியம், இசை என அவர்கள் சார்ந்த வட்டாரத்தில் மக்கள் முன் வைத்தனர். அவைகளே ஊர் திருவிழாக்களில் பிரதான இடம் பிடித்தன. இது போன்ற நிகழ்வுகளால் சாதாரன சாமானியனும் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டான்.
மூரார்பாதுவில் R.அபிபுல்லா அவர்களின் இறைவனின் தீர்ப்பு
01-12-1978 – 03-12-1978 தேதிகளில்..
இடம் : மாட்டுத் தொழுவம் – கோசாலி அபிபுல்லா அவர்களின் தோட்டம்..
நாடக ஒத்திகை களம்
பத்மனாபன் : “அடடே.. வாங்க.. வாங்க..”
சிலோன் சிங்காரம் : வாங்க வாங்க அப்படின்னு வரவேற்பு சொன்னா மட்டும் போதுமா.. கை மாத்தா பணம் வாங்கினதை வாங்கிக்க வாங்கன்னு சொல்ல வேண்டாமா..
பத்மனாபன் : “சிங்காரம்.. இந்த பத்மனாபன்கிட்டே குடுத்த பணம் பதுங்கு குழியில போட்ட மாதிரி.. எங்கேயும் போகாது.. வாங்கிகலாம் வாங்கிகலாம்..”
சிலோன் சிங்காரம் : அட என்னங்க நீங்க.. பதுங்கு குழியில போட்ட பணத்தால என்ன உபயோகம்.. தங்கத்துல போட்டாலும் அது ரெட்டிப்பாகுமே..
“முத்தலீப்.. நிறுத்து நிறுத்து.. டயலாக்ல நீ என்ன சொல்லனும்னா..
“அட என்னங்க நீங்க.. பதுங்கு குழியில போட்ட பணத்தால என்ன உபயோகம்.. தங்கத்துல போட்டாலும் அது ரெட்டிப்பாகும்.. ஏன் தகரத்துல போட்டாலும் அது கண்டிப்பாகும்.. ஆனா, உங்ககிட்டே குடுத்துட்டு நடையா நடக்குறேன்.. செருப்பா தேயுறேன்..”
அப்படின்னு சொல்லனும்..
சரி.. சரி மறந்துட்டேன் என..
“அட என்னங்க நீங்க.. பதுங்கு குழியில போட்ட பணத்தால என்ன உபயோகம்.. தங்கத்துல போட்டாலும் அது ரெட்டிப்பாகும்.. ஏன் தகரத்துல போட்டாலும் அது கண்டிப்பாகும்.. ஆனா, உங்ககிட்டே குடுத்துட்டு நடையா நடக்குறேன்.. செருப்பா தேயுறேன்.. என டயலாக்கை சரி செய்து கொள்வார்.
ம்ம்ம்.. அப்படி பேசும்போது அந்த குடைய கக்கத்திலருந்து கைல எடுக்கனும்.. டயலாக்ல “உங்ககிட்டே குடுத்துட்டு நடையா நடக்குறேன்.. செருப்பா தேயுறேன்..” அப்படின்னு சொல்லும்போது முகத்தை ரொம்ப கவலையா தோ இப்படி.. இப்படி வச்சிக்கிட்டு “உங்ககிட்டே குடுத்துட்டு நடையா நடக்குறேன்.. செருப்பா தேயுறேன்..” ன்னு சொல்லிட்டு குடைய மீண்டும் கக்கத்துல வச்சிக்கனும்.. சரியா.. ரிகர்சல் போலாமா..
மீண்டும் ரிகர்சல் போகும்..
இப்படியாக கலையின் மீதான ஆர்வத்தை சுய நாடக மேடைகளின் மூலம் தீர்த்துக்கொண்டார்கள் நம்மவர்கள்
இடம் : அரிசி ஆலை மைதானம் – பரமனத்தம் மூரார்பாது கிராம எல்லை..
நேரம் : மாலை 6 மணி..
காலம் : 1985’களிலும் – அதன் முன்னரும் மற்றும் அதன் பின்னரும்
ஆடாமல் ஆடுகிறேன், ஆண்டவனைத் தேடுகிறேன்.. வா.. வா.. வா..
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க, நல்லா பாட்டு படிக்கும் வானம்பாடிதானுங்க..
ரெக்கார்ட் டான்ஸ்..
ஒரு மாட்டு வண்டி..
பாடலின் ஆட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சில பகட்டான உடைகள்
கலர் பூச்சுக்கள்
“நீங்கள் அனைவரும் மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் நடன நிகழ்வில், இதோ.. இப்போது முதல் பாடலாக..”
“அம்பிகையே, ஈஸ்வரியே என்னை ஆள வந்த கோயில் கொண்ட குங்குமக்காரி..”
கூட்டம் மெல்ல மெல்ல பெருங்கூட்டமாக வட்ட வடிவில் அமர – நிற்க அதுவே நேரம் போக போக பெருங்கூட்டமாகும்.
ஒரு பாடல் முடிய அடுத்த பாடல் ..
அடுத்த பாடல்.. என ரெக்கார்ட் டான்ஸ் அடுத்தடுத்த கட்டம் போய் கொண்டிருக்கும் வேளையில்..
“மொய்தீன் சாயபு அவர்களின் மகன் திரு .முஸ்தபா அவர்கள் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர் மற்றும் நவரச நாயகி சரோஜா தேவி அவர்களின் பரவச நடிப்பில், வாலி அவர்களின் காதல் வரிகளில், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஈர்க்கும் இசையில், LR ஈஸ்வரி மற்றும் TM சவுந்தர்ராஜன் குரலில் வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை படத்திலிருந்து நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்கிற பாடலை கேட்டு 1000 பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதோ அவருக்காக அவரின் விருப்பப் பாடல் உங்கள் முன்னால்..
கூட்டம் கரகோஷித்து பலத்த ஒலி எழுப்பும்..
நான் அப்துல் ரஷித் ஹபிபுல்லா 5’ஆம் வகுப்பு படித்த 1985 ஆம் வருடம்
நம் ஆரம்ப பள்ளியின் ஆசிரியர் திரு சிகாமணி அவர்கள்
ஆஜானுபாகுவான தோற்றம்..
கருப்பு கண்ணாடி..
சபாரி உடை
கையில் எப்போதும் ஒரு குட்டைப்பை என காட்சியளிப்பார்.
ஒரு நாள் பாட வேளையில் ஒரு அறிவிப்பை செய்தார்
“துரைங்களா.. நம்ம பள்ளியில ஒரு நாடகம் போடலாம்னு இருக்கேன்.. யாரு யாருக்கெல்லாம் அந்த நாடக்கத்துல நடிக்க ஆசை.. கை தூக்குங்க..” என்றார்.
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டேமே தவிர ஒருவரும் கை தூக்கல..
நான் கை தூக்கலாம் என நினைத்த நேரத்தில்
பக்கத்தில் இருந்த நண்பன் ஹசன் முஹம்மது ரஹமதுல்லா என்னை உஷார் செய்தான்..
“யேய்.. கைய கிய்ய தூக்கிடாத..?”
“ஏண்டா.. நாடகம்தானே.. நடிக்கலாம்.. நீயும் கைய தூக்கு..” என்றேன்..
“ம்ஹூம்.. நாடகம்னா நிறைய வசனம் பேசனும், அதுவும் பாக்காம பேசனும்.. அதுக்கு மனப்பாடம் செய்யனும்.. முடியுமா உன்னால..! அதான் சொல்றேன்.. சும்மா இரு” என்றான்.
“ம்ம்ம்.. வெரி குட், முதல் ஆளா நம்ம ஜாபர் துரை கை தூக்கி இருக்காப்ல..” என ஜாபர் ஹனீபா பெயரை பேப்பரில் எழுதிக்கொண்டார்.
“அப்புறம், வேற யாரு..” என மாணவ மாணவிகள் கூட்டம் பார்த்து பேசிக்கொண்டே இருக்கையில்..
“சார்.. நானு..” என அபுபக்கர் ஷபியுல்லா கை தூக்க அவனது பெயரையும் பேப்பரில் எழுதிகொண்ட சிகாமணி ஆசிரியர் நாடகத்தின் அருமை பெருமையுடன் கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் என பேசிக்கொண்டே போக போக.. எனக்கு கலர் கலர் ஆடையுடன் ரிக்கார்ட் டான்ஸில் ஆடையுடன் ஆடியவர்கள் நினைவுக்கு வர..
நண்பன் ஹசனிடம் “டேய்.. கைய தூக்கிடவா..?” என அனுமதி கேட்டேன்..
“ம்ஹூம்.. திரும்ப சொல்றேன்.. நாடகம்னா நிறைய வசனம் பேசனும், அதுவும் பாக்காம பேசனும்.. அதுக்கு மனப்பாடம் செய்யனும்.. முடியுமா உன்னால..! அதான் சொல்றேன்.. சும்மா இரு” என்றான்..
“யேய்.. அபுபக்கரே கைய தூக்கிட்டான்.. நம்மால முடியாதா.. பாத்துக்கலாம்.. கைய தூக்கட்டுமா..” என நான் நண்பன் ஹசனிடம் பேசியதை கவணித்த சிகாமணி ஆசிரியர் “எலே துரை அங்க என்ன பேச்சு..?” என என்னை எழுப்பிவிட்டவர் “சொல்லு.. என்ன பேசிக்கிட்டு இருந்த..” என கையில் இருந்த பெரம்பை காற்றில் அலையவிட்டபடி கேட்க..
“சார்.. அது வந்து..” என இழுத்தேன்..
“ம்ம்ம். சொல்லு.. நான் பேசறதை கவனிக்காம அப்படி என்ன அங்க பேச்சு..” என்றார்
நான் மீண்டும் “சார்.. அது வந்து..” என இழுக்கையில் நண்பன் ஹசன் முஹம்மது சட்டென எழுந்து..
“சார்.. இவனுக்கு நாடகத்துல நடிக்க ஆசை.. பேர் கொடுக்க சோத்தாங்கை தூக்கனுமா..? இல்ல பீச்சாங்கை தூக்கனுமான்னு கேட்டான் சார்..” என்றான்..
“அட.. அவ்வளவுதான..” என்ற ஆசிரியர் சிகாமணி “எங்க கைய தூக்கு பார்ப்போம்..” என்றார்
நான் என் சோத்தாங்கையை தூக்கினேன்..
ம்ம்ம்.. குட் பேரை சொல்லு என என் பேரை அப்துல் ரஷித் என எழுதிகொண்டார்.

இந்திரன் – சந்திரன்
தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு மதியம் 3 மணிக்கு மேல் மற்ற மாணவ – மாணவிகள் முன் ஒத்திகை நடக்கும்..
கப்பல் வியாபாரியாக ஜாபர் அலி ஹனீபாவும்..
கப்பல் வியாபாரி ஜாபர் அலி ஹனீபா வின் மகன்களாக அபுபக்கர் ஷபியுல்லா இந்திரனாகவும், அப்துல் ரஷித் ஹபுபுல்லாவாகிய நான் சந்திரனாகவும் கதாபாத்திரங்கள் ஏற்றோம்.
“ஹலோ.. சொல்லுங்க.. ஆமா ஒரு லட்ச ரூபா சரக்கு கப்பல் மூலமா மெட்ராஸ்லயிருந்து அனுப்புறேன்.. நீங்க பேமெண்ட் இங்க கோல்டா கொடுக்க சொல்லிடுங்க..” என அப்பா ட்ரங்க் கால் மூலம் இது போல அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்.
செல்வ செழிப்பின் காரணமாக இந்திரன் அபுபக்கர் ஷபியுல்லா சரியாக படிக்காமல் ஊதாரிதனமாக செலவழிப்பான்.
எங்கள் அம்மா இந்திரனை கண்டிக்கும்போது அப்பா குறுக்கே வந்து “யேய்.. என் பையனை படி படின்னு தொல்லை பண்ணாதே.. அவன் ஜாலியா இருக்கட்டும்..” என 5 ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை அவனிடம் எடுத்து வீசுவார்.
இந்திரன் அதை எடுத்துக்கொண்டு “ஸ்வீட் டாடி.. தேங்க் யூ டாட்” என கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவான்..
சந்திரன் ஒழுக்கமாக படிக்கும் வேலையை பார்ப்பான்..
“மை டியர்.. கப்பல்ல குட்ஸ் அனுப்புற கூலியே மிக அதிகமா இருக்கு.. அதனால நானே சொந்தமா 50 லட்சத்துல ஒரு கப்பல் வாங்க பொறேன்..” என அம்மாவிடம் அப்பா சொல்வார்.
“50 லட்சமா.. வேனாம்பா.. அவ்வளவு பணத்துக்கு எங்க போவீங்க..” என்பேன் நான்.
“மை டியர் சன்.. 50 லட்சம்கிறது ஒன்னுமே இல்ல.. கருப்பு பணம் இருக்கு. மேலும் நம்ம பிராப்பர்டிய வித்தாலே இன்னிய தேதிக்கு 25 லட்சம் வரும். மீதி கடன் வாங்கிக்கலாம்..” என்பார்.
நானும் அம்மாவும் வேண்டாம் என்போம்.
எல்லாம் சரியா வரும்.. கடத்தல் சரக்கு மூலமா பெரிய லாபம் பார்க்கலாம் என்பார்.
ஒருநாள் ஒரு பொழுதில் இன்ஸூரன்ஸ் செய்யாமல் ஒரு கப்பல் வாங்கிட.. அந்த கப்பல் தன் முதல் பயானம் துவங்கிய நாளில் மிகப்பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடினார்.
இரு வாரம் சென்ற நிலையில் அந்த போன் வந்தது..
ட்ரிங்.. ட்ரிங்..
ட்ரிங்.. ட்ரிங்..
ட்ரிங்.. ட்ரிங்..
ஹலோ..
ஆமா.. நான்தான் பேசுறேன்..
ஆமா, சரக்கு போய் சேந்திருச்சா..? இஸ் எவ்ரிதிங் பைன்..
இல்லியா..? ஏன்..
எ.. எ.. எப்ப..?
“ஓ மை காட்” என பெருங்குரலில் கதற ஆரம்பித்தார்.
இந்திரன் சந்திரனாகிய சகோதரர்கள் நாங்கள் மற்றும் அம்மா அப்பாவிடம் ஓடி வருவோம்.
“ஏங்க.. ஏங்க என்னங்க ஆச்சு..” என்பார் அம்மா..
டாடி.. டாடி என்னாச்சு டாடி..” என்போம் அவரது பிள்ளைகள் நாங்கள்..
கப்பல்… கப்பல் என நெஞ்சை பிடித்துகொள்வார் அப்பா..
“கப்பலுக்கு என்னாச்சுங்க..” என பதறுவார் அம்மா..
“கப்பல்.. கப்பல் நடுக்கடல்ல மூழ்கிடுச்சாம், எல்லாம் போச்சே..” என சரிந்து விழுந்து இறந்தே போவார்.
நாடகம் படிப்பின் அவசியம், தொழிலில் நேர்மை மற்றும் அகலக்கால் வைக்காதே என கூறும் கருத்தாக முடியும்.
நாடகத்தில்கூட சரியாக நடிக்கத்தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், நிஜ வாழ்வில்கூட மிக சிறப்பாக நடிக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள்..
“அவ பசப்பு வார்த்தையில விழுந்துட்டன் மச்சான்.. நல்லா ஏமாத்திட்டாடா.” என கதறுவோரும் உண்டு..
“ஆக, நாங்க ஆட்சிக்கு வந்தால்..” என தேர்தல் நேரம் மட்டுமின்றி எப்போதும் நடிக்கும் அரசியல்வாதிகளும்..
“என் திரைப்படத்தில் எப்போதும் ஒரு நல்ல கருத்து இருக்கும்.. அதை மக்களுக்கு ஒரு பாடமாக்கவே அதை படமாக எடுக்கிறேன்..” என நிஜத்திலும் நடிப்பவர்கள் ஒரு சில நேரங்களில் “ஏங்க.. படத்தை படமாக பாருங்க.. ஏன் இப்படி ஜாதிய பிரச்சனை பன்றீங்க.. அது வெறும் படங்க” என நிஜத்தில் சில நேரம் கதறல் நடிப்பு நடிக்கிறார்கள்.
தலைவர்கள், சினிமா நடிகர்கள், நடிகையர்கள் மட்டுமல்ல..
குடும்ப உறவிலும்..
வியாபாரத்திலும்..
நட்பு என்கிற வட்டாரத்திலும் சில நேரங்களில் – பல நேரங்களில் நடிப்புகள் உலா வருகிறது.
கிராமங்கள் தோறும் தெருக்கூத்து மற்றும் நாடகங்களும்..
உள்ளூர் மேடை நாடகம் நமக்கு பள்ளி காலத்திலும்..
சென்னை போன்ற பெரு நகரில் நாரதகான சபா, மியுசிக் அகாடமி போன்ற கூடங்களில் அரங்கேறின..
மனிதர்கள் இப்படி எனில் காலங்களும் பெரும் நடிப்பை காட்டும்..
மே மாசம் கடும் வெயிலுக்கு இடையே திடீரென மழை ஆட்டம் காட்டுவதெல்லாம்.காலத்தின் நடிப்பு..
இனிப்பாகத்தான் இருக்கும் என நம்பி வாங்கும் மாம்பழம் புளிப்பை காட்டுவது தாவரத்தின் நடிப்பு..
“வெளி நாட்டுல நல்ல சம்பளம், சாப்பாடு, தங்க இடம்னு நம்பி வந்தேன்.. பாலைவனத்துல போட்டு சாகடிக்கிறாங்க மாப்ளே..” என்பது ஒருவனை நம்ப வைத்து மோசம் செய்யும் உலக மகா நடிப்பு..
உள்ளூர் ஜமாத் தலைவராக, பஞ்சாயத்து தலைவராக, வார்டு மெம்பராக இன்னாரே வருவார் என மக்கள் நினைக்கையில் அந்த மக்களே மக்களுக்கு ஆட்டம் காட்டி வேறு ஒரு முடிவை தருவதும் மக்கள் நடிப்பாகும்..
சட்டமன்ற, நாடாளுமன்ற, முதலமைச்சர், பிரதமர் என இந்தியாவோ அல்லது அமெரிக்காவின் அதிபரோ இவரே என மக்கள் நினைக்கையில் “ம்ஹூம்.. இல்ல வேறோர்” என வரும் முடிவும் மக்கள் மக்களிடையே காட்டும் நடிப்பு என்ன வகை..
சமீபத்திய மிகப்பெரிய மேடை ஆட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தல்..
அவனெல்லாம் அரசியலுக்கு வரமாட்டான்..
வந்தான் அவன்..
கூட்டமெல்லாம் வராது..
வரவைத்தான் அவன்
ஒரு 10℅ வாங்குவானா..
அதிகமாகவே வாங்குவேன் என்றான் அவன்..
எல்லா தொகுதியிலும் நிற்க ஆள் கிடைக்குமா அவனுக்கு..?
எல்லா தொகுதியிலும் நிற்க வைத்தான் அவன்..
234’ல் ஒரு 4 தேறுமா என்றார்கள்..
108 அடித்தான் அவன்..
அதெல்லாம் சரி, முதல்வர் ஆக மாட்டான் என்றார்கள்
ஆனான் அவன்..
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
மூரார்பாது – My Screen
Admin & Team







Leave a reply