
தெற்கும் – வடக்கும் # MMS 000212
MMS – 000212
19-07-2026
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️
+91 98840 788654
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
மூரார்பாதுவில் 1950’களில் தற்போதைய பேருந்து நிருத்தம் மிக பிரதான இடமாக இருந்திருக்குமா எனத்தெரியவில்லை..
நம் பள்ளிவாசல் முகப்பு பக்கமோ அல்லது ஏரிக்கரையை சார்ந்த மாரியம்மன் முன்பக்க மைதானமோ அல்லது காலனி சார்ந்த மாரியம்மன் கோவில் பிரதான நேர் வீதியோ இருந்து இருக்கலாம்..
1980’களில் ஜெயா தேனீர் விடுதியும், ஹபிபுல்லா பாய் தேனீர் விடுதியும், ஹமீத் தாத்தாவின் கடையும் கூட பிரதானமாக மக்கள் பொதுவாக கூடும் இடங்களால் உருவாகி இருக்கலாம்.
மூரார்பாதுவில் தெற்கும் – வடக்கும்
1960 அல்லது 1980’களில் மூரார்பாதுவில் நாம் அறிந்த வீதிகள் எனில் அது
காலனியின் மூன்று மூன்று வீதிகளாகவும், அதில் மாரியம்மன் கோவில் வீதியும் நமக்கு நன்கு தெரியும்..
பின்னர்
- தெற்கு வீதி என்கிற கருவாட்டு வீதி
- பள்ளிவாசல் வீதி என்கிற இரண்டாம் வீதி
- நடுவீதி என்கிற மூன்றாம் வீதி
- சுல்தான் வீதி என்கிற நான்காம் வீதி
- வடக்கு வீதி என்கிற ஐந்தாம் வீதி
அப்புறம், பிரதான சாலையும், அஜ்முல்லா அவர்களின் காட்டுகொட்டாய், வக்கீல் சவுக்கத் அலி மற்றும் சக்கரை சாயபு அவர்களின் காட்டுக்கொட்டாய் என்றோ பெயர் அடையாளம் போகும்.
தெற்கு வீதி என்கிற கருவாட்டு வீதி
1980’களில் மூரார்பாதுவில் வீடுகளுக்கு இடையே நெருக்கம் என்பதெல்லாம்.கிடையாது.
கருவாட்டு வீதி என்கிற தெற்கு வீதியில் மூன்று வீட்டு மனைகள் காலியாக கிடக்க அதன் பின்னர் எங்கள் கூரைவீடு ஆரம்பிக்கும். வீட்டுக்கு பாதுகாப்பு எனில் முள்ளுபந்தலும், தென்னங்கீற்றால் வேயப்பட்ட தட்டியுமே ஆகும்.
அதன்பிறகு மேற்கில் மர்ஹூம் அப்துல் மஜீத் வரலாற்று ஆசிரியர் அவர்களின் வீடும் பின்னர் பெரும் இடைவெளிகளில் சிங்கப்பூரார் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் வீடு மற்றும் எதிர்புறம் மேற்கிலிருந்து கிழக்காக மர்ஹூம் பூனுரார் ஆதம்ஷா, மர்ஹூம் தப்படியார் அப்துல் ரஹ்மான், மர்ஹூம் பெட்ரோமாக்ஸ் முஹம்மது யூசுப் தாத்தா, நண்பன் ஜப்பானி, மர்ஹூம் இப்ராஹிம் மாமா வீடு மற்றும் சிக்கந்தர் சாயபு ஆகியோர்களின் வீடுகள் இருக்கும். ஒரு வீதியில் அப்போது இருந்த வீடுகள் எண்ணிக்கை இவ்வளவே.
மாற்று மத சகோதரர்களின் வீடுகள் மிக சொற்ப எண்ணிக்கையில் மேற்கில் ஆங்காங்கே இருக்கும்.
தெற்கு வீதி என்கிற கருவாட்டு வீதி‘யின் அமைப்பு இது. நாம் இன்னும் வடக்கு நோக்கி வருகையில் இரண்டாம் வீதி என்கிற பள்ளிவாசல் வீதி மிக நேர்த்தியாக சற்று வீடுகள் அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் இருக்கும். இந்த வீதியை மூரார்பாதுவின் அழகி எனலாம் அக்காலத்தில்.
மூன்றாம் வீதியும் சுல்தான் வீதியும் மற்றும் வடக்கு வீதி என்கிற ஐந்தாம் வீதியும் மூரார்பாதுவின் பெயர் அடையாளங்களாகும்..
மெல்ல மெல்ல உருமாறிய மூரார்பாது

1990’களின் இறுதி வாக்கில் நாம் ஆடி ஓடிய மிளகாய் தோட்டம் ஆசாத் நகர் என்கிற பெயரில் மனை போட்டு விற்பனையானது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருந்த இப்பகுதி மிக வேகமாக வளர்ந்துள்ளது. ஆசாத் நகரின் பெரும் வரவேற்பில் மேலும் பல நகர்கள் மூரார்பாதுவில் உருவாகின..
குறிஞ்சி நகர்
ஆசாத் நகரின் தொடர்ச்சி எனலாம். இந்த நகர் மிளகாய் தோட்டத்திற்கு நேர் கிழக்கே வருகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் உள்ள இப்பகுதி மிக வேகமாக வளர்ந்த மற்றும் வளர்ந்து வருகின்ற பகுதியாகும்.
மேலும், மூரார்பாதுவில் வேறு என்னென்ன நகர்கள் உள்ளதென ஜனாப்.சாதிக் பாஷா முஹம்மது அஸ்லம் – Er TNEB (பெட்ரோமாக்ஸ் யூசுப் தாத்தா அவர்களின் மகள் வழி பேரன்) அவர்களிடம் கேட்டோம்.
“பாய்.. மூரார்பாதுவில் நகர்களுக்கு பஞ்சமில்லை. முதலில் இதை நாம் மூரார்பாதுவின் நகர்கள் என சொல்லக்கூடாது. ஏனெனில் ஆசாத் நகர் பரமநத்தம் கிராம பஞ்சாயத்தில் கள்ளக்குறிச்சி யூனியன் கீழ் வருகின்றது. மூரார்பாதுவிற்கான நில மதிப்பைவிட அரசு வழிக்காட்டலில் பரனமநத்தம் ஒரு படி மேலேயுள்ளது. காரணம் பரமநத்தம் கள்ளக்குறிச்சி என்கிற மாவட்ட தலை நகர் (யூனியன்) பகுதியின் கீழ் வருகிறது. அதே நேரம் மூரார்பாது சங்கராபுரம் என்கிற வட்டார (யூனியன்) பகுதிக்குள் வருகிறது.”
“அப்புறம் நகர்கள் எனில்
ஆசாத் நகர்
குறிஞ்சி நகர், அன்னை ஆயிஷா நகர்
காஜியார் நகர்,காதர் பாய் நகர்
வட்டிம்ஷா நகர்
வேல்ஸ் நகர்,வி ஐ பி நகர்
அஞ்சுமன் நகர்,வானவில் நகர்
பாலாஜி நகர் என நகர்கள் உள்ளது.
நிலத்தின் மதிப்பு ஒரு செண்ட் 2.5 முதல் 3 லட்சங்கலிருந்து 18 முதல் 25 லட்சங்கள்வரை உள்ளது. மிக முக்கியமான இன்னொரு விசயம் உங்களுக்கு ஊரில் ஒரு இடம் வாங்க நினைத்தாலும் இன்று விற்பனைக்கு ஊருக்குள் இடமும் இல்லை. அப்படியே வந்தாலும் அதை வாங்க மிக கடுமையான போட்டி இருக்கும் என்கிறார்.
ஊர் வளந்து கொண்டே வருகின்ற அதே நேரத்தில் ஊரின் அழகு தேய்ந்துகொண்டே போகின்றது.
சாலையோரம் வளர்ந்து அழகு காட்டி நிழல் தந்த புளிய மரங்கள் இன்று இல்லை.
12-11-2021’ஆம் தேதியிலான மூரார்பாது – My Screen 119’வது கட்டுரையில் மூரார்பாதுவின் மழை நீர் வடிகால் குறித்த கட்டுரையில்..
மூரார்பாதில் நீர் வடிகால்கள்..
காலனி குடியிருப்பு பக்கம் பெய்கின்ற மழை நீர் முக்கால் பாகம் பிரதான சாலையை தொட்டு தெற்கு பக்கம் வழி எடுத்து பள்ளி மைதானம் வழியே பயணித்து நமது ஊர் ஆற்றுக்கு முன்பாக பிரியும் சின்ன வாய்காலில் சேர்ந்து கிழக்கு பக்கம் ஓடும்.
அதேபோல இரண்டாவது வீதியின் நீரானது திரு.சங்கிலி அவர்கள் வீட்டு முகப்பு தொட்டு பின் பள்ளிக்கூடம் வழியாகவும், கருவாட்டு வீதி – தெற்கு வீதி என்கிற முதல் வீதி தண்ணீர் அனைத்தும் மேற்கிலிருந்து கிழக்காக பிரதான சாலையில் தற்போதைய S A மருத்துவனையின் தெற்கு பக்கம் பிரியும் வடிகாலில் இனைந்து காலனி வழியாக ஆறு நோக்கி ஓடும்.
மூன்றாவது வீதி தண்ணீரும் – சுல்தான் வீதி என்கிற நான்காவது வீதி மற்றும் ஐந்தாவது வீதி, மர்ஹூம் தடபுடல் மொய்தீன் சாஹிப் வீட்டு பக்கமிருந்து வாய்க்கால் எடுத்தது போல வரும் தண்ணீரும் இனையும் இடமான Post Man அப்துல் காதர் பாய் வீட்டின் முன் மிக பிரம்மாண்டமாக இனையும். ஒரு சின்ன வெற்றிடத்தில் சேரும் தண்ணீரானது அங்கே ஆர்பரித்து சிறு ஓடை போல சாலைக்கு குறுக்கே கட்டியுள்ள பாலம் தாண்டி பரமனத்தம் சாலையில் தெற்கு பக்கமிருந்து குயவர் வீட்டின் வழியாக முள்ளுக்காட்டுக்கும் பரமனத்தம் ஏரிக்கும் செல்லும் காட்சி மிக அற்புதமாக இருக்கும்.
மேற்கு பக்கமிருந்து நம் மஹல்லாவாசிகள் அனுப்பும் காகித கப்பல் மிக அழகாக நம்மை கடந்து பிரதான சாலையின் கிழக்கு பக்கம் செல்லும்.. சிறுவர்களாக நாம் விட்ட விதவிதமான கத்தி கப்பலும் சாதாரன கப்பலும் அழகு. மழை வரும் முன்னே வீசும் லேசான சாரலில் மண் கிளப்புகிற அந்த மண் வாசனை நெஜ்சுகூடு வரை பரவும். மழைகாலத்தில் வரும் மின் மினிப்பூச்சும், வித விதமான பட்டாம்பூச்சிகளும் ஈசலும் , தட்டானும் “அடடா.. அழகுடா..” என்றாகும். தட்டானில்கூட சாதா தட்டான் , ஹெலிகாப்டர் தட்டான் என்றெல்லாம் உயிர்பெடுக்கும்.. தட்டானை பிடித்து அதன் வால் முனையில் நூல் கட்டி கூடவே ஓடி கீழே விழுகின்ற கதையெல்லாம் நடக்கும்.. பெரியவர்கள் புதுமழையில் நனையக்கூடாது என பாடம் எடுப்பார்கள். நாம் ஆடும் கோலி குண்டு முதல் கோட்டி புல் வரையிலான ஆட்டத்தினை மழையும் சேர்ந்து இசையிட்டு ரசிக்கும். மழையில் தொப்பலாக நனைந்து வீடு வரும் பிள்ளை காய்ச்சல் கண்ட வரலாறு மிக குறைவே. அப்படியே காய்ச்சல் வீட்டு பிள்ளைகள் கண்டாலும் முன்னோர்களிடம் கை வைத்தியம் இருந்தது.
நகர்கள் தோன்றி தோன்றி நம் கிராமத்து அழகை நகர்த்திவிட்டன..
மூரார்பாது – My Screen
Admin & Team









Leave a reply