
பெட்டிக்கடை # MMS 000213
MMS – 000213
02-08-2026
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்..)
1970’களில் கிராமத்து பெட்டிக்கடைகள் என்பது வெறும் வியாபாரத் தளமாக இல்லாமல், கிராமத்தின் செய்திப் பரிமாற்ற மையமாகவும் சமூகக் கூடாரமாகவும் திகழ்ந்தன. சிறு மரப்பெட்டிகள் அல்லது ஓட்டு வீடுகளின் திண்ணைகளில் அமைந்த இக்கடைகள் எளிமைக்கும் கிராமிய வாழ்வியலுக்கும் சான்றாக இருந்தன.
கிராமத்து பெட்டிக்கடைகளின் தோற்றமும், அங்கு கிடைத்த பொருட்களும் இன்றைய நவீன பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) பார்க்க முடியாத ஒரு தனித்துவமான கிராமிய அழகைக் கொண்டிருந்தன.
பெரும்பாலான கடைகள் பெரிய மரப்பெட்டிகளால் ஆனவை. காலையில் பெட்டியின் கதவுகளைத் திறந்து, மேலே ஒரு பலகையையும் கீழே ஒரு பலகையையும் முட்டுக் கொடுத்து வைப்பார்கள். சில கடைகள் வீட்டின் முன் திண்ணையிலேயே அமைந்திருக்கும்.
கடையின் முன்புறம் வரிசையாகக் கண்ணாடி ஜாடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் வண்ணமயமான மிட்டாய்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
கடையின் கூரையிலோ அல்லது மரச்சட்டங்களிலோ ஷாம்பு பாக்கெட்டுகள், சீப்பிலைகள், பொறி உருண்டைகள் மற்றும் இதர தின்பண்ட பாக்கெட்டுகள் கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருக்கும்.
தராசும் அதன் இரும்பு எடைக் கற்களும்கூட (முக்கியமாக 50 கிராம், 100 கிராம் கற்கள்) சில பெட்டிகடைகளின் கல்லாப்பெட்டியின் அருகில் இருக்கும்.
மின்சாரம் இல்லாததால், இரவில் கடையை வெளிச்சமாக்க ‘ஹாஸ் விளக்கு’ (Petromax light) அல்லது சிம்னி விளக்கு பயன்படுத்தப்பட்டது.
கடைகளில் தேன் மிட்டாய், கடலை மிட்டாய், இஞ்சி மொரப்பா, சீரக மிட்டாய், மைசூர் பாக்கு, தேங்கா மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், கல்கோனா, ஓமப்பொடி, காரச்சேவு, உப்புக்கடலை, குடலு, சோடா வகைகள் மற்றும் அப்பளம் போன்ற பொருட்களுடன் இதர பொருட்களாக பீடி, சுருட்டு, புகையிலை, வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு மற்றும் தீப்பெட்டிகளும் விற்பார்கள்.
கோபால் பல்பொடி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, பலூன், சிலேட்டு, பலப்பம், இங்க் மற்றும் தேர்வு எழுத அட்டையுடன், வெள்ளை பேப்பர், நோட்டு போன்ற பொருட்களும் கிடைக்கும்.
மூரார்பாதுவில் பெட்டிக்கடைகள்
1970’களின் இறுதியே எனக்கான பால்ய வயது மூரார்பாதில் ஆரம்பமானது.
அப்போது மிக பிரபலம் எனில் ஹாஜிரார் அவர்களின் பெட்டிக்கடையும், சத்தார் பாய் அவர்களின் கடையும், ஹமீத் தாத்தா அவர்களின் கடையும்தான் எனலாம்.
மளிகை கடையாக பிச்சனத்தம் செட்டியார் அவர்களின் கடையும், எங்கள் வீட்டின் மேற்கு முன்பக்க முகப்பில் ஒரு மளிகை கடையும், மூன்றாம் வீதியில் பாத்திமா ஆசிரியை அவர்கள் வீட்டின் எதிரில் ஒரு கடையும் எனக்கு நினைவில் வருகிறது.
இவ்வாறான பெட்டிக்கடைகள் அக்காலத்தில் தகவல் தாங்கும் மையங்களாகவும் இருந்தன..
இடம் சத்தார் பாய் கடை:
“என்ன கணேசா..? ஆளு ரொம்ப நேரமா இங்கயே நிக்குற.. கினறு வெட்டு வேலை முடிஞ்சு போச்சா..?” என்பார் சத்தார் பாய்.
“அட எங்க பாய்.. இந்த குமாரு வேலைக்கு வருவான் அவனோட சைக்கிள்லயே மேட்டுக்கு போயிடலாம்னு பாக்குறேன். அவன் வீட்டுலயும் காணோம், ரோட்டுலயும் காணோம். அவன் இல்லாம ஒத்தயா போயி ஒரு வேலையும் ஆகாது. அதான் என்ன செய்யன்னு பாக்குறேன்..” என்கிற கணேசன் “சரிங்க பாய்.. வெயிலு ஏறிப்போச்சு.. இனி வேலைக்கு ஆகாது. அவன் இப்படி வந்தானா என்னை பார்க்க வீட்டுக்கு வர சொல்லுங்க.. அப்படி வீட்டுல இல்லன்னா கிழக்க வர சொல்லுங்க..” என தகவல் ஏற்றி வைப்பார்.
“ஏய்.. கிழக்கன்னா எங்கப்பா..” என விபரமாய் கேட்டு வைப்பார். அப்படி கேட்டவர் அந்த குமாரு ரோட்டு பக்கம் வருகையில் “யேய்ய்.. குமாருஊஊ..” என கவனித்து அழைத்து கணேசனின் தகவலை எத்தியும் வைப்பார்.
“பாய்.. தாமோதரன் பஸ் போயிடுச்சு ?..” முதல் கொண்டு “செத்த இந்த பைய உள்ள வைங்க பாய்.. எங்க ஊட்டுல வந்து வாங்கிப்பாங்க..” என்கிற வகையான அத்துனை வேலையும் அங்கு நடக்கும்.
1980’களின் துவக்கத்தில்
- இரானுவ வீரர் அம்மா அவர்களின் பெட்டிக்கடை இரண்டாம் வீதியின் சாலையில் கிழக்கு – தெற்கு முகப்பிலும்..
- ஜெயராம் அண்ணா அவர்களின் பெட்டிக்கடை சங்கராபுரம் மார்க்க பேருந்து நிறுத்தத்திலும்..
- ரொட்டிக்கடை யாசின் பெட்டிக்கடை மூன்றாம் வீதியின் சாலையில் கிழக்கு – தெற்கு முகப்பிலும்
- அமானுல்லா பாய் அவர்களின் பெட்டிக்கடை ஆகிலா இனிப்பகம் முன் சாலையில் மேற்கு தெற்கு பக்க முகப்பிலும்
- கல்யான மண்டபம் யாசின் பெட்டிக்கடை பிரதான பள்ளிக்கூடம் எதிரிலும்
- பள்ளிக்கூடம்.அருகில் சிராஜுதீன் தம்பியின் ஒரு பெட்டிக்கடையும்
- வெண்ணிலா என்கிற குண்டம்மாவின் பெட்டிக்கடை கருவாட்டு வீதியின் முகப்பிலும் இருக்கும்
- பன்ருட்டியார் அவர்களின் கடை போண்டா அவர்களின் கடைக்கு சற்று தள்ளி சாலையின் கிழக்கு தெற்காக அமைந்திருக்கும்.
இதில், அதிக பிரபலமான பெட்டிக்கடையெனில் அது ஜெயராம் அண்ணா அவர்களின் பெட்டிக்கடையே ஆகும். காரணம், இரண்டு மரப்பெட்டிகள் அமைத்து மிக பிரம்மாண்டமாக
பொங்கல் என்றால் வாழ்த்து அட்டைகளும், தீபாவளி என்றால் பட்டாசுகளுமாக வியாபாரத்தில் அசத்தல் காட்டுவார்.
அங்கே விதவிதமான தின்பண்டங்களும் கிடைக்கும். அந்த கடையின் பொலிவு இன்று குறைந்து போனாலும் இன்றுவரை ஜெயராம் அண்ணா அவர்களின் தொடர் முனைப்பில் மூரார்பாதுவில் அந்த கடை மக்களுக்கான பயன்பாட்டில் உள்ளது மிக ஆச்சரியமான ஒரு விசயம்.
இராணுவ வீரர் அவர்களின் பெட்டிக்கடை
மேலே குறிப்பட்டது போல இந்த பெட்டிக் கடை இரண்டாம் வீதியின் சாலையில் கிழக்கு – தெற்கு பகுதியில் அமைந்திருக்கும். அந்த பெட்டிக்கடையில் பொருட்கள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும். பெட்டிக்கடையின் உள்ளே இரானுவ வீரரின் சட்டமிட்ட புகைப்படத்தை வைத்திருப்பார் அவரது மனைவி. மிக மென்மையாக பேசும் சுவாபம் கொண்டவர்.
ரொட்டிக்கடை யாசின் – பெட்டிக்கடை
இதுவே நமக்கான பெரும் பொழுது போக்கிடம் எனலாம். இங்கே நமக்கு கொடுக்கல் – வாங்கல் கணக்கும் இருக்கும். ஒரு நோட்டு வைத்து அதில் நமக்கான கணக்கை யாசின் வைப்பதுண்டு. இந்த கடையில் பெரும்பாலும் யாசினும், இதர நேரங்களில் யாசின் தம்பி யாகூப் கவனித்துக் கொள்வார்கள். எப்போதாவது யாசினின் தந்தை மற்றும் அம்மா கடையில் கான கிடைப்பார்கள். சில நேரங்களில் நானும் அந்த கடையில் விற்பனையாளராக விற்பனையை கவனித்ததுள்ளேன்.
அமானுல்லா பாய் பெட்டிக்கடை: ஆகிலா இனிப்பகம் முன் சாலையில் மேற்கு தெற்கு பக்க முகப்பில் இந்தக் கடை இருக்கும். இந்தக்கடையும் நமக்கு ஒரு அபிமானமான கடையே. ஜெயராம் அண்ணா கடைக்கு ஈடு தரும் வகையில் மிக பிரமாண்டமாக அதிக பொருட்களுடன் இருக்கும். இந்த கடையின் முன்பாக இட அனுமதி வாங்கி அப்போது மர்ஹூம் ஷபியுல்லா அவர்களின் மகன் நண்பன் அபுபக்கர் ஷபியுல்லா ஒரு குளிர்பான கடை வைத்து தன் வியாபார தந்திரத்தை காட்டுவான். இந்த கடையை எவ்வாறு மிக லாபகரமாக நடத்துவது என ஜனாப்.அன்சர் அலி இப்ராஹிம் பிரதான ஆலோசகராக செயல்படுவார்.
கல்யான மண்டபம் யாசின் பெட்டிக்கடை: இது பிரதான பள்ளிக்கூடத்தின் முன் சாலையின் எதிர்பக்கம் இருக்கும். அவ்வளவாக பொருட்கள் இருக்காது. நண்பன் யாசின் நமக்கு நல்ல பழக்கம் என்பதால் ரொட்டிக்கடை யாசின், மர்ஹூம் அமானுல்லா பாய் கடையில் நமக்கு நேரம் போக்க வசதியில்லையெனில் நம் இருப்பிடம் இதுவாக இருக்கும். பெருமபாலும் விடுமுறை நாட்களில் கல்யாண மண்டபம் யாசின் இருப்பான். அப்படி இல்லையில் அவனது அப்பா கடையை கவனித்துக்கொள்வார். மிக எளிய தோற்றத்தில் இருக்கும் கடை அது. பின்னர் யாசின் வெளி நாடு வேலை என சென்றுவிட கடையை மூடிவிட்டார்கள்.
ஹாஜிரார் பெட்டிக்கடை: நண்பன் மொய்தீனின் பெட்டிக்கடை இது. பெரும்பாலும் அவனது அம்மா கவணித்துகொள்வார். இங்குதான் நான் முதன்முதலில் சில்க் ஷாம்பு ஷாசே பாக்கெட்டை பார்த்தேன். நீள சரமாக தொங்க விட்டுருப்பார்கள். அது வழு வழுவென பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். மேலும், வாழைப்பழத்ததாரையும் தொங்க விட்டுருப்பார் மொய்தீனின் அம்மா.
பண்ருட்டியார் பெட்டிக்கடை: இது போண்டா அவர்களின் கடைக்கு பக்கத்தில் – பட்டறை ஆசாரி அவர்களின் கூடத்திற்கு அருகிலும் இருக்கும். ஒரு வகையில் எங்கள் குடும்பத்திற்கு உறவாக இருக்கும் பன்ருட்டியார் கடைக்கு எப்போதாவது தின்பண்டம் வாங்குவதுண்டு.
பூனைக்கண்ணு பெட்டிக்கடை: இதுவே பள்ளிக்கூடம் மிக அருகில் இருக்கும். இங்கு பெட்டிக்கடையுடன் உணவு கூடமும் நடத்தி வந்தார்கள். மாற்று மத சகோதரர்கள் மட்டுமின்றி நம் சகோதரர் குடும்பங்களும் உணவு வாங்கி செல்வதுண்டு. உணவு அருந்தவும் அங்கே இட வசதி செய்யப்பட்டிருக்கும்.
குண்டம்மா பெட்டிக்கடை
குண்டம்மா என அழைக்கப்படும் இவரது பெயர் வெண்ணிலா ஆகும். இவரின் கணவர் பெயர் ராஜேந்திரன். இவர் மூரார்பாது பூர்வீகம் கிடையாது. எங்கள் வீட்டின் மேற்கு பக்க வீட்டில் வாடகைக்கு தன் கணவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வந்தவர். திரு. ராஜேந்திரன் கள்ளக்குறிச்சி உஷா சில்க் கடைக்கு வேலைக்கு சென்றுவிட ஒற்றை ஆளாக பள்ளிக்கூட பிள்ளைகளுக்கான பிடித்த கடையாக திறன்பட நடத்தியவர். பெட்டிக்கடை என ஒன்று இருந்தாலும் தின்பண்டங்கள் கள் தேன் மிட்டாய், முறுக்கு, எலந்தப்பழம், நெல்லிக்காய், கொடுக்காப்புளி போன்ற அத்துனையையும் பெரும்பாலும் கீழே சாக்கு விரித்து அதில் பரப்பி காட்சிக்கு வைத்திருப்பார். கடுமையான உழைப்பை தந்து தன் குடும்ப பொருளாதாரத்தை ஈடுகட்டியவர். கடையை கவனிக்க ஆள் சிரமப்பட்டலும் தன் பெண் பிள்ளைகளை கடையில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார். இரவில் அவர் அன்றைய வியாபார வரவுகள் என்ன காசுகளாக என்னும்போது நான் பல நேரம் உடன் இருந்துள்ளேன்.
“ம்ம்ம்.. இன்னிக்கு வியாபாரம் கம்மிதாகம்மிதான்.. எங்க இந்த ஆள வச்சிக்கிட்டு வியாபாரம் பாக்குறது..” என தன் கணவரை காட்டி சிரிப்பார்.
மூரார்பாதுவில் நாம் பார்த்த அந்த பெட்டிக்கடைகள் நமக்கு தந்த பரவசம் இன்று நம் பிள்ளைகளுக்கு கிடைக்காத ஒன்று.
பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் சென்றாலும் நமக்கு இன்றும் அழகான காட்சிகளாய் விரிவது இந்த கடைகளே..
எனெனில் அவைகள் பெட்டிக்கடைகள் மட்டுமல்ல, நம்மை அதன் பக்கம் சுட்டி இழுத்த கடைகளுமாகும்.
உங்களுக்கு 1980-90’களில் மூரார்பாதுவில் பிடித்த அபிமான பெட்டிக்கடை எனில் எது..? ஏன்..?
இன்ஷா அல்லாஹ், வாருங்கள் மீண்டும் உங்கள் அபிமான பெட்டிக்கடைக்கு..
மூரார்பாது – My Screen
Admin & Team







Leave a reply