
ICEC – MMS 000210
21-06-2026
MMS – 000210
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ் & Team✍️✍️
+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
1980-90’களில் மூரார்பாது
சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில்
பொழுது போக்கு அக்காலத்தில் குண்டாட்டம், மட்டைபந்து ,மீன் பிடி, கிணறு, காடு, ஆறு, ஏரி மற்றும் அனைக்கட்டு என்றே கழியும்..
இது எதுவும் இல்லையெனில் ஹபிபுல்லா பாய் தேனீர் விடுதியின் தினத்தந்தியும், செல்வம் அண்ணார் அவர்களின் ஜெயா தேனீர் விடுதியின் தினகரனுமே கடைசி புகலிடம்..
டேய்.. அது முந்தாநேத்து பேப்பர்டா.. அதயா நீ இத்தன புரட்டு புரட்டுறே என்பார் செல்வம் அண்ணார்.
ஹபிபுல்லா பாய் தேனீர் விடுதிக்கு வந்தால் கலிபுல்லா பாயும், ரவூப் பாயும் பேப்பர் படிக்க வரிசையில் இருப்பார்கள்.
அவர்கள் படித்து கொட்டாவி விட்டு அந்த பேப்பரே நைந்து போகும் அளவுக்கு புரட்டி புரட்டி புரட்டி புரட்டி என்ன.. என்பது போல நம்மை கவனித்து ம்ம்ம்.. படி என தருவார்கள்.
அப்பாடா.. பேப்பர் கிடைச்சது என ஆசுவாசமாகி அந்த 4 பக்கங்களை புரட்டினால் ஒரு பக்கம்கூட எந்த சினிமா விளம்பரமும் இருக்காது.
“பாய்.. நீங்க வச்சிருக்கீங்கல, அந்த பேப்பர் கொடுங்க..” என்றால்..
“டேய்.. அதுக்குள்ள 4 பக்கமும் படிச்சிட்டியா..?”
“ம்ம். பாத்துட்டேன் பாய்..” என்பேன்.
“பாத்துட்ட.. அப்ப படிக்கல..” என நமக்கு நாம் எதிர்பார்த்த அந்த சினிமா விளம்பர பக்கங்களை தருவார்கள்..
அது பிறகு மெல்ல மெல்ல நமக்கு செய்திதாள் வாசிக்கும் பழக்கத்தையும், மாலை 7 மணிக்கு ஆல் இந்திய ரேடியோ, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி வரை கொண்டு சென்று நிறுத்தியது.
1980-90′ ல்
மூரார்பாதுவில்
ICEC ( Islamic Cultural and Educational Centre)
மூரார்பாதுவில் ICEC என்கிற Islamic Cultural and Education Centre ஜனாப்.சவுக்கத் அலி – வழக்கறிஞர், ஜனாப்.சாதிக் அலி இப்ராஹிம் ( சீனா – கானா ) மற்றும் ஜனாப்.மு.மு.பாருக் ஆகியோர்களின் முனைப்பால் கரடி ஜனாப்.முஹம்மது இப்ராஹிம் மற்றும் ஜனாப்.அப்துல் ரவூப் அப்துல் மஜீத் (சுன்னத் ஜமாத் தலைவர் ) போன்றவர்களுடன் இனைந்து துவங்கப்பட்ட காலம் 1980-90’களில் எனலாம்.
மூரார்பாது மற்றும் சுற்றுவட்டார அளவில்
இஸ்லாமியர்களுக்கான சமூக வாழ்வியல் பொறுப்பையும், கல்வி குறித்த விழுப்புணர்வையும் பிரதான நோக்கமாக கொண்டு துவங்கப்பட்ட அமைப்பு..
மாணவ – மாணவிகளின் கல்வி இடை நிற்றல் ஏன்..? எதனால்..? என ஆராய்ந்து தீர்வு காண முற்பட்டது
மட்டைப்பந்து 🔥 தீயாய் இளைஞர்கள் மத்தியில் பரவி விரவி கிடந்த காலமது. மூரார்பாதுவில் 3 Star Cricket Club A Team, B Team, C Team என F Team வரை தாராளமாய் வளர்ந்து கிரிக்கெட் ஒன்றே விடுமுறை நாட்களில் உலகம் என இருந்தது. A Team’க்கு ஜனாப்.அப்துல் ரவூப் தலைவராகவும், B Team’க்கு ஜனாப்
மு.மு.பாருக் மற்றும் C Team’க்கு ஜனாப்.ஷம்சுதீன் அப்துல் சத்தார் போன்றவர்கள் அணித்தலைவராகவும் இருந்துள்ளார்கள் என்பது கொசுறு செய்தி.
நூலகம்
தற்போது மதரஸா-யே-மிப்தாஹ் அல்குலூபி பெண்கள் அரபி மதரஸா நடக்கும் ஜமாத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் ஆண் – பெண் பிள்ளைகளைக்கு அரபி பாடம் முதல் தளத்தில் எடுப்பார்கள்.
அரபி முடிந்து
ஆதம் நபி பிள்ளை நாங்கள்..
…
…
ஹசரத்தே ஸலாமலைக்கும் என ஓதி கலைவார்கள்.
அப்படியான அந்த கட்டிடத்தில் கீழ் தளத்தில் அஞ்சல் நிலையம் அருகாமை முகப்பில் 10’க்கு 7 என்கிற சதுர அடியில் ஒரு நூலகம் திறக்கப்பட்டது.
அங்கு இஸ்லாமிய இதழ்களுடன், தினமணி மற்றும் விழிப்புணர்வு, தன்னம்பிக்கை வளர்க்கும் நூல்களும் கிடைக்கும்
அரசியல் புரிதல் மெல்ல.நமக்குள் ஊற்று எடுத்த 1980′-90களின் காலக்கட்டத்தில் அங்குதான் நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, பொன் மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன், ஆர்.எம் வீரப்பன், வை.கோபால்சாமி, வெற்றி கொண்டான் போன்றவர்களின் நிகழ்கால அரசியல் அசைவுகளையும், அறிஞர் அண்ணா, காமராஜர், பக்தவச்சலம் மற்றும் கக்கன் போன்றவர்களின் கடந்த கால வரலாறுகளையும் படிக்க முடிந்தது.
ஜனாப்.மு.மு.பாருக் அவர்களிடம் ICEC மற்றும் நூலகம் குறித்து மேலும் பெற்ற சில விபரங்கள்..
“இப்படியாக ICEC ஆரம்பிக்க வேண்டும் என்றவுடன் அப்போது ஜமாத் பொறுப்பிலிருந்த மர்ஹூம் அப்துல் மஜீதார் மற்றும் என் தாத்தா அப்துல் கரீம் அவர்களை அனுகி ICEC, நூலகம் மற்றும் அதன் நோக்கம் குறித்து விளக்கி மதரஸா கட்டிடத்தின் முகப்பு இடத்தை பெற்றோம்.”
“கிரிக்கெட் மோகத்திலிருந்த நம் ஊர் இளைஞர்களை தொழுகையின் பக்கமும் அழைத்து வந்தோம். நிறைய பேர் தொழ வருகவே வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது பள்ளிவாசல் இரண்டு மூன்று வரிசைவரை இதர நாட்களிலும் நிறையும்.”
“நூலகத்தில் உணர்வு, Sunday Times, Employment News, தினமணி போன்ற நாளிதழ்கள் கிடைக்க செய்தோம். அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஜனாப்.A1 மொய்தீன், Expo India ஜனாப்.சம்சுதின் போன்றவர்களை Sponcer பிடித்து அதனையும் பார்த்துகொண்டோம். எங்கள் அணி ஊரில் ஒரு திருமணம் என்றால் சாப்பாடு பரிமாறுதல் போன்ற வேலைகளையும் செய்து பணமீட்டும்.”
“மர்ஹூம் கெண்டியார் அப்துல் ரஜாக் மகன் அப்துல் அஜீஸ் மற்றும் நன்றாக படிக்கும் அவரை போன்றவர்களை தற்காலிக வேலையைவிட நிரந்திர கல்வியே முக்கியம் என அவர்களை கல்வியின் பக்கம் திருப்பினோம்.”
“ஜனாப்.சத்தார் பாய் அவர்களின் கடை முன் கரும்பலகை வைத்து நேரு, காந்தி, காரல் மாக்ஸ் மற்றும் திருக்குரான் வசனங்கள் எழுதி வைத்தோம்.”
“வெள்ளிக்கிழமைகளில் சேமப்பாளையம், பாலப்பட்டு, சங்கராபுரம் மற்றும் லக்கினாயக்கன் பட்டி போன்ற ஊர்களுக்கு சென்று இளம் வயதில் படிப்பை தவிர்த்து வெளி நாடு செல்வது சரியானதல்ல என வழக்கறிஞர் சவுக்கத் அலி அண்ணார் போன்றவர்களை வைத்து பேசி விளங்க வைப்போம்.”
“இந்த அமைப்பிற்காக அதிகமதிகம் நேரம் அளித்த ஜனாப்.சாதிக் அலி இப்ராஹிம் ஒரு கால கட்டத்தில் வேலை கிடைத்து வெளி நாடு சென்றுவிட்டார். நானும் கள்ளக்குறிச்சி பாரதி கல்லூரியில் வேலை, சென்னைக்கு இடம் பெயர்வு, பின்னர் வெளி நாட்டு வேலை வாய்ப்பு என இடம் பெயர்ந்துவிட்டேன்.
மூரார்பாது – My Home மூலமாக கல்விக்கான முன்னெடுப்பை கான கிடைத்தபோது மிக பெரிய சந்தோசம் அடைந்தோம்.. மக்கள் நல மற்றும் கல்விப்பணியில் அன்சர் அலி அண்ணார், ஜனாப்.பீர் முஹம்மது போன்றவர்கள் முனைப்பு காட்டுகின்றனர். இப்போது மூரார்பாது இஸ்லாமிய கல்வி வழிக்காட்டி அமைப்பு என ஆரம்பிக்கப்பட்டாலும் இது எல்லாவற்றிற்கும் முன்னோடி ICEC’தான்” என முடித்துக்கொண்டார் ஜனாப். மு.மு.பாருக் அவர்கள்
காலம் எல்லாவற்றையும் ஒரு நேரத்தில் மாற்றியமைக்கிறது.
அப்போது ICEC..
இப்போது
மூரார்பாது இஸ்லாமிய கல்வி வழிக்காட்டி அமைப்பு.
பெயர்கள் மாறலாம். ஆனால், திட்டம் ஒன்றுதான்.
ICEC வழி வந்த மூரார்பாது இஸ்லாமிய கல்வி வழிக்காட்டி அமைப்புக்கு வாழ்த்துக்கள்.
மூரார்பாது – My Screen
Admin & Team






Leave a reply