
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் (எ) சிங்கப்பூரார் # MMS – 000211
MMS – 000211
05-07-2026
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
வெளி நாடுகளில் வேலை என்பது 1940-50′களில் நினைத்துக்கூட பார்க்க முடியாத கற்பனை வேலையாகும்.
காரணம், அப்போதெல்லாம் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் தொடர்பு எல்லைக்கு மிக மிக அப்பால் இருப்பார்கள். மேலும், இன்ன வேலைதான், இன்ன சம்பளம்தான் என்கிற எந்த உத்தரவாதமும் இருக்காது. 1940’களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டிற்கு வேலைக்கு சென்றது சாதாரன துனிச்சல் கிடையாது. அப்படி சென்றவர்தான் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் என்கிற சிங்கப்பூரார் மூரார்பாது மக்களால் சிக்கப்பூரார் என பெருமிதத்துடன் அழைக்கப்பட்டவர் பற்றிய கட்டுரை இது.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் (எ) சிங்கப்பூரார்
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அப்போதைய தென்னாற்காடு மாவட்டம், கடலூர், பண்ருட்டியின் ஆண்டிக்குப்பம் பகுதியில் பிறந்தவர்.
வீட்டிற்கு மூத்த மகனான இவருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரரிகள்.
மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர், ஆண்டிக்குப்பம் பகுதில் தன் இளமை காலத்தினை கழித்துள்ளார். மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் குடும்பம் செல்வ செழிப்பான நில புலன்களுடன் வாழ்ந்த குடும்பம். இருப்பினும், தன்னார்வம் காரணமாக தன் 17 ஆம் வயதில் தன் சகோதரன் மற்றும் பிற 3 நண்பர்களுடன் கப்பல் வழிப்பயனமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு என்ன விதமான வேலை, என்ன சம்பளம் என்கிற விபரம் நமக்கு கிடைக்கவில்லை. தன் 17 வயதில் சென்றவர் 10 வருடம் கழித்து தன் 27’ஆம் வயதில் தாயகம் திரும்பிள்ளார்.
நிக்காஹ் – கதீஜா பீவி
27’ஆம் வயதில் இந்தியா திரும்பியவர் கடலூரை பூர்வீகமாக கொண்ட கதீஜா பீவி அவர்களை நிக்காஹ் முடித்தார்.
தன் திருமனத்திற்கு பிறகும் சிங்கப்பூர் வேலைக்கு சென்று பணிபுரிந்துள்ளார்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூமா கதீஜா பீவி தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை.
கதீஜா பீவி என்கிற சிங்கப்பூராங்க தாத்தி

மர்ஹூமா கதீஜா பீவி சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். மூரார்பாது கோசாலி ரம்ஜான் பீவியும் – கதீஜா பீவியும் தோழிகள் என்றே சொல்லலாம். நாம் இருவர் இடையே நுழைந்தால் திடீரென தெலுங்கில் மாட்லாடுவார்கள் இருவரும். ஊதுபத்தி அல்லது சாம்பிரானி மணத்தினை கதீஜா பீவி தாத்தி நுகர நேர்ந்தால் அவருக்கு உடல் முறுக்கேறி இறந்த நம் முன்னோர்கள் பெயர் குறிப்பிட்டால் அவர்களுடன் மாட்லாடுவார்..
மர்ஹூம் அப்துல் முத்தலீப்

மர்ஹூம் அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூமா கதீஜா பீவி தம்பதிகளின் மூத்த மகன். மூரார்பாது தெற்கு வீதி என்கிற கருவாட்டு வீதியில் வசித்தவர். வட்டார ஆட்சியர் அலுவலக ஊழியர். மிகச்சிறந்த நகைச்சுவையும், மூரார்பாது சுன்னத் ஜமாத்தில் 1990’களில் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹூமா கதீஜா பீவி தம்பதிகளின் இரண்டாம் பிள்ளை மர்ஹூமா கைருன்னிஷா பேகம் என்கிற பெண் பிள்ளை ஆவார். மர்ஹூம் அப்துல் முத்தலீப் அவர்களின் சகோதரி. இவர் மும்பையில் ஹாஜி பஷீர் அஹ்மது அவர்களுக்கு நிக்காஹ் முடித்து கொடுக்கப்பட்டவர். நம் சொல்லின் செல்வர் மும்பை குலாம் முஹம்மது ஹாஜியின் பெரியம்மா உறவு முறை ஆவார்.
மர்ஹூம் சுலைமான் அலி
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் மற்றும் மர்ஹுமா கதீஜா பீவி தம்பதிகளின் மூன்றாம் வாரிசு. இவர் மர்ஹூம் அப்துல் முத்தலீப் அவர்களின் சகோதரர். மும்பையில் வசித்த இவரது குடும்பம் தற்போது சேலம், கோயம்புத்தூர் என வசிக்கிறார்கள்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் இளைய சகோதரரின் பேத்தியை மூரார்பாது ஜனாப்.அப்துல் கனி ஆசிரியர் (கடுவு) அவர்களின் மூத்த மகனார் ஜனாப்.ராஜ் முஹம்மது நிக்காஹ் முடித்துள்ளார் என்றும், மர்ஹூம் அந்தி சலாம் அவர்களின் மகனார் ஆசிரியர் அபுபக்கர் மற்றும் மூரார்பாது நடுவீதி மர்ஹூம் டைலர் ரஹ்மதுல்லா ஆகியோர்களுமே மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரிகள் வழி உறவு முறையாகும்.
மூரார்பாதுவில் 1990’களில் துவங்கப்பட்ட அல் ரஹ்மானியா ஆங்கில பள்ளி துவங்கியதும் மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் உடன்பிறந்தவர்களின் வாரிசுகள் துவங்கிய பள்ளி என்பதும் கூடுதல் தகவலாகும்.
சிங்கப்பூரார் அப்துல் ரஹ்மான்
நம் இப்போதைய தலைமுறைகளிடம்கூட நாம் செய்யும் தொழிற்சார்ந்து நம்மை அடையாளம் கானும் பழக்கம் இருக்கிறது. இது அக்காலத்தில் மிக அதிகமாகவும் பெருமையாகவும் இருந்துள்ளது.
தோப்புரார் அப்துல் ரஹிம் / சத்தார்
வீரங்கியூர் ஹனீபா
லால்பேட்டை சுலைமான்
பண்ருட்டியார் என்கிற வரிசையில் சிங்கப்பூரார் என மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அழைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரார் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் துருவத்தார் வகையறாவையும், மர்ஹூமா கதிஜா பீபி அவர்கள் தோப்புறாங்க வகையறாவையும் சார்ந்தவர்கள் என்கிறார்கள்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் பங்களிகளே தெற்கு வீதி மர்ஹூம் இப்ராஹிம் சாயபு மற்றும் ஜனாப்.ஹசன் முஹம்மது அவர்களின் தகப்பனார் ரஹமதுல்லாஹ் போன்றவர்களுமாகும்.
மர்ஹூம் அப்துல் ரஹ்மான் சாயபு
சிங்கப்பூரில் நீண்ட வருடங்கள் வேலை பார்த்து தன் கடைசி பயனமாக உள் நாட்டு கலவரம் மற்றும் போர் அச்சுறுத்தல் காரணமாக சம்பாதித்த பணத்தினை தாயகம் கொண்டு வர இயலாமல் தன் மனைவிக்கு சிங்கப்பூர் சேலைகளையும், தன் பிள்ளைகளுக்கு சட்டை துணிகளையும் கொண்டு வந்துள்ளார்.
“எங்கள் வீட்டில் சிங்கப்பூர் பாரம்பரிய கலையம்சம் கொண்ட பீங்கான் மற்றும் பாத்திரங்களை நான் பார்த்துள்ளேன்..” என்கிற அவரது மகன் வழிபேத்தி ஆயிஷா பேகம் “மூன்றாம் வகுப்புவரை படித்தவர் என்றுதான் சொல்லுகிறார்கள். ஆனாலும், அவரது கையெழுத்து நோட்டினை நான் பார்த்துள்ளேன். அவரது எழுத்துக்கள் மிக மிக அழகாக இருக்கும்..” என்றவர், “பாய், என் தாத்தா மூரார்பாது சுன்னத் ஜமாத்தில் தலைவராகவும் இருந்துள்ளாராம்..” என நினைவு கூர்கிறார்.
விவசாயமும் – அரிசி அரவை ஆலையும்

ஒரு காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் சிங்கப்பூர் செல்வது சரியாக இருக்காது என முடிவெடுத்தவர் ஆண்டிகுப்பம் பகுதியிலிருந்து மூரார்பாதுவிற்கு குடிபெயர்கிறார். இங்கேயே விவசாய நிலம் வாங்கி விவசாய குத்தகைவிடுகிறார் என சொல்லப்படுகிறது.
மேலும், மூரார்பாது அரிசி ஆலையினை கோசாலி ஹபிபுல்லாஹ் அவர்களுடன் இனைந்து குத்தகைக்கு எடுத்து நடத்தியவர். இவரது காலத்தில்தான் மணிலா அறவை இயந்திரம் அரிசி ஆலையில் மிகப்பெரிதாக இயக்கப்பட்டது. அந்த அரைப்பட்ட மணிலாக்களின் தோல்கள் மலை போல் குவிந்து கிடக்கும். அதில் சிறுவர்களாக குதித்து விளையாடினாலும், கோபம் காட்டமாட்டார்.
இறுதி காலம்
கட்டுரையாளரான அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ் ஆகிய எனக்கு 1983’களில் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்கள் அவர்களுடன் நெருக்கம் இருந்தது. என் தகப்பனார் கோசாலி ஹபிபுல்லா அவர்கள் அரிசி ஆலையின் குத்தகையில் பங்குதாரர் என்பதால் நானும் அங்கே பல நேரங்களில் அப்துல் ரஹ்மான் தாத்தாவுடன் கழித்துள்ளேன்.
நன்றாக 6 அடிக்கு குறையாத உயரம் என்றாலும் மெல்லிய தேகம் உடையவர். எப்போதும் வெள்ளை வேட்டியிம் முழங்கை வரை மடித்து விடப்பட்ட வெள்ளைச் சட்டையுமே இவரது பெரும் அடையாளம் எனலாம்.
ஒரு நாள் கோடை விடுமுறை காலம் என்பதால் நான் அரிசி ஆலையில் அவருடன் இருந்தேன். அஸர் நேரத்தில் அரிசி ஆலையின் பணியில் இருந்தவர் தீடீரென தளர்ந்து விழுந்தார். என்னவானது என அங்கிருந்தோர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்க மிக சுய நினைவுடன் இருந்த
அப்துல் ரஹ்மான் தாத்தா தன்னை வீட்டிற்கு தூக்கிசெல்ல கேட்டுகொண்டார். கயிற்று கட்டிலில் அவரை படுக்க வைத்து வீட்டிற்கு தூக்கி சென்றார்கள்.
Paralysis என்கிற கை கால் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டு ஆறு மாத காலம் படுத்த படுக்கையாக இருந்தவர் ஒரு நாள் இறைவனடி சேர்ந்தார்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்
அல்லாஹ், மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவரது நண்மைகளை ஏற்று அவருக்கு மிக உயர்ந்த சுவனத்தை அளிப்பானாக..
ஆமின்.!
மூரார்பாது – My Screen
Admin & Team







Leave a reply