
கழுகு Vs ராஜாளி # MMS 000 214
MMS – 000214
16-08-2026
✍️ அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

+91 98840 78865
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
இடம் : மூரார்பாது பள்ளிக்கூட பிரதான மைதானம்
காலம் : 1980’களில்..
ஒரு மதிய வேளை இருக்கலாம். நண்பர்களாக மூரார்பாது பள்ளிக்கூட பிரதான மைதானத்தில்
புல் – கோட்டி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தோம். மிக அரிதாக வானத்தில் கழுகு மிக மிகப் பெரும் உயரத்தில் பறப்பது கானக்கிடைக்கும். ஆனால், அன்று ஒரு 50 அல்லது 80 அடிக்குள் கழுகு பறக்கும் பிரம்மாண்டம் காணக்கிடைத்தது. அதன் பறந்து விரிந்த பெரும் சிறகை மேலும் கீழும் அசைக்காமல் விரித்த வண்ணம் மேலிருந்து லேசாக கீழே சரிந்த வண்ணம் வானில் வட்டமடித்தது.
மற்ற பறவை இனங்கள் படபடவென இறகை அடித்தால் மட்டுமே நெடு நேரம் வானில் பறக்க அல்லது நிலைக்க முடியும். ஆனால், கழுகு, ராஜாளி போன்ற பறவைகள் அதன் பிரமாண்ட இறகை விரித்தே வானில் நிலைத்து வட்டமிடும்.
கழுகின் பறக்கும் உயரம் குறைய குறைய எங்களுக்கு அதை கவனிக்கும் ஆர்வம் அதிகமானது. இடையே மிக அரிதாக அது அலறல் சத்தம் கேட்கும். அது கம்பீரமான, உரத்த அலறல் ஒலியை எழுப்புவதில்லை. அவை பொதுவாகக் கீச்சுக் குரலில் விசில் அடிப்பது போன்ற மெல்லிய, உயர் சுருதி கொண்ட ஒலிகளையே எழுப்புகின்றன. பல கழுகுகளின் ஒலிகள் கடல்வாழ் நாரை அல்லது சிறு பறவைகளின் ஒலியைப் போலவே இருக்கும்.
பார்க்க அவ்வளவு அழகாக இருந்த அந்த கழுகு திடுமென மைதானத்தின் தென் – மேற்கு பக்க 100 அடி தொலைவில் சர்ரென கீழே இறங்கியது மட்டும் எங்கள் பார்வைக்கு தெரிய அது பூமியை அடைந்த காட்சியானது அங்கு வளர்ந்திருந்த பசுமை முள்வேளி செடிகளால் பார்வைக்கு முழுதும் கிடைக்கவில்லை.
அக்கழுகு இறங்கிய கணத்தில் ஒரு பெருங்கூச்சல் கேட்டது.
“அடியேய்.. குஞ்ச தூக்குது பாரு.., தொரத்து தொரத்து.. ஏ சாமீஈஈ” என்கிற கூச்சலுக்கு நடுவே தாய் கோழி ஒன்றின் பெருங்கத்தலும், கோழி குஞ்சுகளின் கீச் கீச் சத்தமும் கேட்ட அந்த கணத்தில் கழுகு தன் அலறல் சத்தத்துடன் காலில் கோழி குஞ்சினை பற்றியவாக்கில் மேலே எழும்பி சர்ரென ஒரு உயரம் தொட்டு மின்னல் வேகத்தில் மேற்கு பக்கம் பறந்து மறைந்தது.
“டேய்.. கழுகுடா, கோழி குஞ்சியை தூக்கிடுச்சு.. அப்படியே சர்ருன்னு வந்துசுல்ல..” என்றார்கள் உடன் விளையாடிய நண்பர்கள்.
“அட..” என எனக்கு பிரம்மிப்பாய் இருந்தது அந்த கழுகின் செயல்..
மூரார்பாது பள்ளிக்கூட பிரதான மைதானத்தில் அதிகமதிகம் விளையாடும் அத்துனை பேருக்கும் அந்த தென்மேற்கு அனைக்கட்டு வழியில் இருக்கும் அந்த வீட்டினை நன்றாக நினைவில் இருக்கலாம்.
வீட்டுக்கு போகாமல் தொடர் விளையாட்டில் இருக்கும் நேரங்களில் அங்கே சென்று தண்ணீர் வாங்கி குடிப்பது மிக அரிதாக இருக்கும்.
அங்கே சட்டென ஓடிப்போய் என்னவென பார்க்கையில் அவர்கள் கழுகு கோழி குஞ்சியினை பிடித்து போன அதிர்சியிலிருந்து மீளவில்லை.
தாய் கோழி கொக் கொக்.. என கத்தியபடி ஆக்ரோஷமாக அங்கும் இங்குமாக சீறிக்கொண்டிருந்தது.
“ஏம்புள்ள.. அது அடிக்கிற வரைக்கும் அப்படி எப்படி கவனிக்காம விட்டீங்க.. வாரம் பத்து நாள் இப்படி அடிச்சுட்டு போகுது.. கோழியை வளத்து அத இப்படி குடுக்கவா..” என பாட்டி ஒருவர் புலம்பி கொண்டிருந்தார்.
“ஆமாம், பூச்சுடும் அது வருதா வருதான்னா பாக்க முடியும்.. என்னத்த சொல்ல..” என்றவர் மீண்டும் கழுகு வரலாம் என்கிற பயத்தில் மேய்ந்த கோழியையும் அதன் குஞ்சுகளையும் பெரிய பெரிய கூடையில் அடைத்தார்.
கழுகு பெரும்பாலும் குடியிருப்புகள் பக்கம் இரை தேடி வராது எனவும், காட்டில் காட்டெலி, முயல் அல்லது நீர் தேக்கத்தில் மீனை வேட்டியாடி உண்ணும் எனவும் ஆய்வு குறிப்புகள் கூறுகிறது.
ஆமாம்…கழுகின் கதைதான என்ன..?
செப்டம்பர் முதல் சனிக்கிழமை – சர்வதேச கழுகுகள் தினம்!
‘அக்சிபிட்ரிடே’ என்னும், பறவை குடும்பத்தை சேர்ந்த, வலுவான பெரிய ஊனுண்ணி, கழுகு. பறவைகளின் அரசன் என்ற சிறப்பையும் பெற்றது. அதிகாரம், சுதந்திரம் மற்றும் மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது, இப்பறவை.
உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாக காணப்படுகின்றன. பெரும்பாலும், ‘ஆதி உலகம்’ என்று சொல்லப்படும், ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பாவில் தான், கழுகுகள் அதிகம் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம், 74 இனங்கள் உள்ளன. அவற்றுள், 60 இனங்கள், மேற்கூறிய, மூன்று பகுதிகளில் காணப்படுகின்றன.
பொதுவாக, “கடல் கழுகுகள், கால் வரை ரோமம் உள்ள கழுகுகள், பாம்பு உண்ணும் கழுகுகள் மற்றும் ராட்சச கழுகுகள் என, நான்கு வகைகள் கொண்டவை.
பறவை இனங்களில், கழுகு மட்டும் தான், 70 ஆண்டு ஆயுட்காலம் கொண்டது. அதேபோல், அதிக உயரம் பறக்க கூடியவையும், கழுகு மட்டும் தான்.
பெண் கழுகு, ஆண் கழுகை விட, சற்றுப் பெரியதாக இருக்கும். ஆண் கழுகுக்கு பரீட்சை வைத்த பின்பே, அதன் மீது நம்பிக்கை வைக்கும், பெண் கழுகு.
அதாவது, ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்கு சென்று, சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும், பெண் கழுகு. பின், மேலே ஆணுடன் உயரத்திற்கு பறந்து சென்று, அந்த குச்சியை கீழே போட்டு, காத்துக் கொண்டிருக்கும். அக்குச்சி நிலத்தில் விழும் முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும், ஆண் கழுகு.
இவ்வாறு குச்சியை போடுவதும், எடுத்து வருவதுமாக, பல மணி நேர பரீட்சை நடைபெறும். ஆண் கழுகிடம் உள்ள பொறுப்புணர்வை உறுதிப்படுத்திக் கொண்டதும், உறவு கொள்ள ஒப்புக்கொள்ளும், பெண் கழுகு.
மிக உயரமான முட்களை உடைய மரக்கிளைகள் அல்லது மலைச் சரிவுகள் மற்றும் பாறைப் பிளவுகளில் என, மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும், கழுகு.
முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கள் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடு கட்டும், ஆண் கழுகு. பின், பெண் கழுகு, அக்கூட்டில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும்.
ஒரு பெண் கழுகு, ஒரு முறைக்கு, இரண்டு முட்டைகள் இடும். முதலில், பொரித்து வெளிவரும் குஞ்சு அல்லது அளவில் பெரிய குஞ்சு, தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும்.
இவ்வாறாக ஆதிக்கம் செலுத்தும், குஞ்சானது, பொதுவாக பெண்ணாக இருக்கும். ஏனெனில், பெண் குஞ்சு, ஆண் குஞ்சை விட பெரியது. இந்த படுகொலையைத் தடுக்க, அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
எதிரிகளை தாக்கவும், தன் முட்டைகளைப் பாதுகாக்கவும், ஆபத்து காலங்களில், உடலில் இருக்கிற கந்தக அமிலத்தை கழுகுகள் உமிழும். கந்தக அமிலம், எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும், அந்த உயிரினம் கருகிவிடும்.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை, கழுகுக் குஞ்சுகளை கூட்டில் வைத்து, உணவு ஊட்டும், தாய் பறவை. பிறகு, மென்மையான கூட்டை நீக்கி விட்டு, முட்கள், கூர்மையான குச்சிகளை, குத்துவது போல கூட்டில் வைக்கும். இதனால், கூட்டின் ஓரத்திற்கு வரும் குஞ்சை, கீழே தள்ளிவிடும்.
குஞ்சு நிலை தடுமாறி விழப்போகும் போது, இறக்கைகளை விரித்துப் பறக்க முயலும். ஆனால், அவற்றால் பறக்க முடியாது. குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல், ஆண் கழுகு பறந்து சென்று, தன் முதுகில் தாங்கி, மீண்டும் கூட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும்.
இது போல், தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, குஞ்சுகளை பறக்க வைத்து, தானாக இரை தேட அனுப்பிவிடும்.
எலி, கோழி, மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி, கழுகு. இது, ஏற்கனவே இறந்து போனவைகளை உண்ணாது; புதிதான இரையையே உண்ணும். இது, மிக அபாரமான பார்வை திறனை கொண்டது. 1,000 அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலை கண்டு வேட்டையாடவும் இதனால் முடியும்.
கழுகு, தன், 40 வயதை அடையும்போது, அதன் அலகு, இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகி விடுவதோடு, வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்கு கனமாக மாறிவிடும்.
இந்நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க போராட்டத்துக்கு தன்னையே உட்படுத்துவது, இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.
அச்சமயம், உயர்ந்த மலைக்கு பறந்து சென்று, அங்கிருக்கும் பாறையில் தன் அலகை வேகமாக மோதி, உடைக்கும். புதிய அலகு வளரும் வரை, அங்கேயே தனித்திருக்கும்.
புதிய அலகு வளர்ந்த பின், இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின், புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்திற்கு, சுமார், 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு, அதன்பின், 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.
புயல் காற்றின் மூலம், மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடியும் என்பதால், புயலை மிகவும் விரும்பும், கழுகுகள். மேலும், அவை மணிக்கு, 32 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் உடையவை.
உலகின் மிகப்பெரிய கழுகான, பிலிப்பைன்ஸ் நாட்டு கழுகுகளின் இறக்கை, 8 அடி நீளம் உள்ளவை. அவை, ஒரு ஆட்டையோ அல்லது ஒரு மானையோ துாக்கிச் செல்லும் அளவிற்கு, திறன் உடையவை.
குதிரைகள் நின்று கொண்டு துாங்குவது போல, கழுகுகள் மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டே துாங்கும். அவை, மிகவும் புத்திசாலித்தனமானவை. ஆமை, நத்தை போன்றவற்றை உண்ணும் போது, அவற்றின் ஓடுகள் உடையும் வண்ணம், அவைகளை மலை உச்சியில் இருந்து பாறை மேல் வீசி எறிந்து, பின் ஓட்டை உடைத்து உண்ணும்.
சுற்றுச்சூழல் மாசடைதலை தடுப்பதில், கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. அப்படிப்பட்ட அந்த இனம், உலகில் வேகமாக அழிந்து வருகிறது.
பயிர்களை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக, விவசாயிகள் ரசாயனப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள், நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி, இறக்க நேரிடுகிறது.
கழுகுகளின் அழிவிற்கு இன்னொரு காரணம், மின்சாரக் கம்பிகள். பெரும்பாலான கழுகுகள், மின் கம்பியில் மோதி, இறக்கின்றன.
இது, பெரிய பிரச்னையாக உருவெடுத்ததை அடுத்து, அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில், கழுகும் சேர்க்கப்பட்டுள்ளன; அதைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காகவே, ஆண்டுதோறும், செப்டம்பர் முதல் சனிக்கிழமை, சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
ராஜாளி
ராஜாளி மற்றும் கழுகு இரண்டும் மாமிச உண்ணிப் பறவை இனங்கள் ஆகும். கழுகு (Eagle) பெரிய உடல் அமைப்பு, கூர்மையான பார்வை மற்றும் உயரமாகப் பறக்கும் திறன் கொண்டது என்றால் ராஜாளி என்பது பொதுவாக வல்லூறு (Falcon) அல்லது போநெலி கழுகு போன்ற மிகவேகமாகப் பறந்து இரையைக் கைப்பற்றும் திறன் கொண்ட ஒரு சிறப்புக் கொன்றுண்ணிப் பறவையைக் குறிக்கும்.
உடல் அமைப்பு மற்றும் தோற்றம்
கழுகு: பெரிய உடல், அகலமான இறக்கைகள் மற்றும் வலுவான வளைந்த அலகு கொண்டது.
ராஜாளி: சற்றுச் சிறிய அல்லது நடுத்தர வடிவம், கூர்மையான இறக்கைகள் மற்றும் இலகுவான உடல் அமைப்பு கொண்டது.
பறக்கும் வேகம் மற்றும் முறை
கழுகு: காற்றில் நீண்ட நேரம் வட்டமடித்து, உயரத்தில் இருந்து பார்வையாக்கி இரையைத் தேடும்.
ராஜாளி: மின்னல் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. திசையை உடனடியாக மாற்றி வானத்தில் பறந்து சென்று இரையைப் பிடிக்கும்.
இரை மற்றும் குணம்
கழுகு: முயல், மீன் மற்றும் பெரிய பறவைகளை வேட்டையாடும்.
ராஜாளி: மிகத் துல்லியமாகச் செயல்பட்டு சிறிய பறவைகள் மற்றும் விலங்குகளைப் பிடிக்கும். இது தமிழ்நாட்டில் சில வகைப் பருந்து மற்றும் வல்லூறு இனங்களோடு தொடர்புபடுத்தி அழைக்கப்படுகிறது.
கழுகு மற்றும் ராஜாளி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையை சார்ந்தவை.
நம் மூரார்பாது பள்ளிவாசல் பின்பக்க புறா பொந்தில் புறாக்களின் முட்டையும், மரங்களில் காக்கா குருவி முட்டையும் ஏன் மிக அரிதாக கிளிகளின் முட்டையும் பார்த்துள்ளோம். ஆனால், கழுகு ,பருந்து போன்ற பறவைகளின் முட்டைகளோ அல்லது கூடுகளோ நமக்கு காணக்கிடைத்ததில்லை. ஏனெனில் அவைகள் மிக உயரமான மலை உச்சியின் பாறை இடுக்குகள் அல்லது அடந்த வனத்தின் மிக உயரமான மரத்தின் உச்சியில் கூடி கட்டி வாழும் பழக்கம் உடையவை.
படித்ததில் பிடித்தது
மரத்தில் கூடு கட்டும் கழுகுகள் கீழ் பரப்பை முட்களாலும், அதன் மேற்பரப்பை தன் மெல்லிய, பல்கீன அல்லது சற்றே முதிர்ந்த சிறகுகளை பிய்த்தும் கட்டுமாம். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த ஒரு குறிப்பிட்ட காலம்வரை அதற்கான உணவை தரும் தாய் கழுகானது அதன் குஞ்சு வளர வளர அக்கூட்டில் இருக்கும் சிறகுகளின் எண்ணிக்கையை குறைத்துகொண்டே வருமாம். அப்படி கூட்டில் உள்ள சிறகுகள் விலக்க விலக்க அக்கூட்டின் பஞ்சு தன்மை போய் முள் கூட்டில் தங்கியுள்ள குஞ்சுகளுக்கு அதன் முட்கள் குத்த இனி இந்த கூடு நமக்கு சரிவராதோ என தவிக்குமாம்..
இப்படியான காலத்தில் ஒரு நாள் பெரும் இரையை தன் குஞ்சுகளுக்கு அளித்து ஒவ்வொரு குஞ்சாக சுமந்து பெரும் உயரம் அடைந்து தன் குஞ்சினை பூமி நோக்கி விட்டுவிடுமாம் தாய் கழுகு..
பெரும் உயரத்தில் தாய் கால்விட்டதால் பூமி நோக்கி கீழே விழும் குஞ்சு சட்டென சுதாரித்து தன் இறகை விரித்து பறக்குமெனில் அன்றோடு தாய் கழுகு – சேய் கழுகு உறவு முடிவுக்கு வந்து விடும். இனி சேய் கழுகு தன் இரையையும், தனக்கான கூட்டினையும் அதுவே தேடிக்கொள்ளும்.
அதே நேரத்தில், பெரும் உயரத்தில் தாய் கால்விட்டதால் பூமி நோக்கி கீழே விழும் குஞ்சு சட்டென சுதாரித்து தன் இறகை விரித்து பறக்க இயலாமல் தடுமாறவோ அல்லது பூமி நோக்கியோ விழத்தான் போகிறது எனில் சுதாரிக்கும் தாய் கழுகு மணிக்கு அதீத வேகத்தில் தன் குஞ்சியை மீண்டும் தன் வசப்படுத்தி மீண்டும் மேலே உயரம் அடைந்து தன் குஞ்சினை பூமி நோக்கி விட்டுவிடுமாம் தாய் கழுகு.. இது போல அந்த குஞ்சு பறக்க இயலும் வரை அந்த தாய் கழுகு அதை விடுவதும் – பிடிப்பதும், மீண்டும் விடுவதும் – பிடிப்பதுமாக இருக்கும்.
விடுபட்ட அந்த குஞ்சு கழுகானது தானே பறக்கமெனில் அன்றோடு தாய் கழுகு – சேய் கழுகு உறவு முடிவுக்கு வந்து விடும்.
அன்று நாம் பார்த்த கழுகுகள் – ராஜாளிகள் நமக்கு பிரமிப்பை தந்தன.. இப்போது நாம் அவைகளை பார்ப்பது மிக அரிதாகி விட்டது அல்லது இல்லை எனலாம்..
யூ – டியூபில் காணக்கிடக்கின்றன பல அரிதான கழுகள் மற்றும் ராஜாளியின் காணொளிகள்.
மூரார்பாதுவில் நீங்கள் கழுகுகள் அல்லது ராஜாளி என்கிற பருந்துகளை பார்த்ததுண்டா..?
மூரார்பாது – My Screen
Admin &Team









Leave a reply