
மர்ஹும். L.U.ஷபியுல்லா # MMS 000216
18-10-2026
MMS – 000216
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்..)
✍️அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ்✍️✍️

மூரார்பாது
மர்ஹும். L.U.ஷபியுல்லா
(மக்கள் தலைவன் – சிகப்பு எம்.ஜி.ஆர் & விஜயகாந்த்)
1949 ஆம் ஆண்டு
மர்ஹூம் லா.உமர் ஷாஹிப் மற்றும் மர்ஹூமா ஜெய்தூன் பீ தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் மூரார்பாது மக்கள் தலைவன் என பெரிதும் அறியப்பட்ட தலைவர் மர்ஹூம் லா.உ என்கிற L.U ஷபியுல்லா அவர்கள்.
மர்ஹூம்
L.U ஷபியுல்லா அவர்களுடன் பிறந்தவர்கள் 7 பேர் ஆகும்.
- மர்ஹூம். L.U.
கமாலுதீன் - மர்ஹூமா L.U.பீபிஜான் –
- மர்ஹூம்.L.U.பஷீர் அஹமது
- மர்ஹூம். L.U.பஷீர் அஹமது
- மர்ஹும்.L.U.ஷபியுல்லா
- மர்ஹூம்.L.U.சதக்கத்துலா
- மர்ஹூம்.L.U.அமானுல்லா – மர்ஹூம்
- ஜனாப்.L.U.ஷம்சுதீன் ஆகியோர்களாகும்.
11’ஆம் வகுப்பவரை படித்த இவர்தான் அவரது குடும்பத்தில் அதிகம் படித்தவராகும். அக்காலத்தில் வேலை வாய்ப்புக்காக மும்பை செல்வதும் அல்லது சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கோ வேலைக்கு செல்வதுமே நடை முறையாக இருந்துள்ளது. சவுதி வேலைக்கு செல்லும் முன்னர் தப்லீக் ஜமாத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் உத்திர பிரதேசம், அம்பாலா , ஹரியானாவரை செல்வாராம்.
திருமண வாழ்க்கை.
1975’ல் தனது உறவு முறையில் ஜனாப்.ஜானி சுல்தான் ஷாஹிப் மற்றும் மொஹ்தர்மா ஆமீனா பீ தம்பதியரின் மகள் மொஹ்தர்மா மொய்தீன் பீ அவர்களை நிக்காஹ் முடித்தார்.
மேற்படி தமப்திகளுக்கு 6 பிள்ளைகள்
1.ஜனாப்.S. அபுபக்கர் ( மூரார்பாது S A மருத்துவமனையின் நிறுவனர் )
2.மொஹ்தர்மா ஜமீலா பானு
3.மொஹ்தர்மா ஆபிதா பானு
4.மொஹ்தர்மா ஆஷிபா பானு
5.மொஹ்தர்மா ஆரிபா பானு
6.மொஹ்தர்மா ஹசீனா பேகம் என 6 பிள்ளைகள்
1976’ல் வேலை காரணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். தொடர்ச்சியாக பத்து வருட சவுதி வாழ்க்கை.
ஊர் தலைவர்
1986’ல் அவரது அம்மா மர்ஹூமா ஜெய்தூன் பீ அவர்களின் ஆசை மற்றும் ஊக்கத்திற்கு ஏற்ப முதல் முறையாக மூரார்பாது ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிட்டு தலைவர் ஆனார். எதிர்த்து நின்றவர் திரு.தாயாளன் அவர்களின் தகப்பனார் என கூறப்படுகிறது.
மூரார்பாது என்கிற ஊருடன் தலைவர் என்றால் மிக அதிகமானோரால் உச்சரிக்கப்படும் பெயராக L.U.ஷபியுல்லா அவர்கள் தன்னை மாற்றிக்கொண்டது இந்த காலகட்டத்தில்தான்.
மாற்று மத சகோதரர்கள் இவரை அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு மேள தாளங்களுடன் 1986‘களில் வரவழைத்து மிகப்பெரிய மரியாதை செலுத்தினர். சில பெண்கள் இவரை காக்க வந்த தெய்வம் என மனமுருகி வாழ்த்தியதும் வரலாறு.
அப்போது கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் கோரதாண்டவம் ஆடிய காலம். தலைவராக பொறுப்பேற்றவர் ஏரிக்கரை அருகே உள்ள மிகப்பெரிய குடிநீர் தொட்டியை அமைத்து தண்ணீர் பஞ்சம் போக்கினார் எனக்கூறப்படுகிறது.
1986 முதல் 1996 வரை ஊர் தலைவராக தொடந்தார். 1996’ல் மூரார்பாது ரிசர்வ் தொகுதியாக அரசால் அறிவிக்கபட்டது. இதனால் போட்டியிட வாய்ப்பினை இழந்தார்.
மீண்டும் 2011’ல் மூரார்பாது ஊ.ம.தலைவருக்கு போட்டியிட்டார். ஜனாப்.ஷபியுல்லா அவர்களை தலைவர் வேட்பாளராக எதிர்த்து போட்டியிட்டவர் திரு.ஜெயவேலு அவர்கள். அந்த 2011 தேர்தல் முடிவுகள் மிக பரபரப்பாக மக்கள் எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஏனெனில் திரு ஜெயவேலு அவர்களும் மிக வலுவான மற்றும் ஒரு தரப்பு மக்களால் மிக நன்கு நேசிக்கப்பட்டவராகவும், பேராதரவு பெற்றவராகவும் இருந்ததே அதற்கு காரணமாகும். தேர்தல் முடிவுகள் மக்களின் ஆதரவு பெற்றவர் ஜனாப்.ஷபியுல்லா அவர்களே என மீண்டும் அவரை தலைவர் ஆக்கியது. அந்த தேர்தல் குறித்து ஜனாப் பிரோஜ் அலி நினைவு கூர்வதாக நம் மூரார்பாது – My Screen’ல் 31/05/2020’ஆம் ஆண்டு ஒரு பதிவு வெளியிட்டு இருப்போம். அதில் பிரோஜ் அலி நினைவு கூர்கையில்..
“மூரார்பாது கிராமம் முழுவதும் பிரோஜ் அலி ஆகிய நான் ஆட்டோவில் பரப்புரை செய்ததும், இதயத்துல்லா முழு மூச்சுடன் உழைத்ததும், அவருடைய Tata Ace வாகனம் மூலம் வேலை செய்ததும் மறக்க முடியாதது.”
மூரார்பாது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்து தலைவராக சபியுல்லா பாய் அவர்கள் தலைவராக ஆனதும், தேர்தலில் இரவு பகல் பாராமல் வேலை செய்தது.
இரவு 1மணிக்கு மேல் வெற்றி பெற்றதாக அறிவித்தவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியதும்,
மூரார்பாதில் விடியற்காலை பட்டாசு வெடித்து ஊரை எழுப்பி விட்டதும் இன்றும் நினைவில் நிற்கிறது என்றவர் மேலும்,
நாங்கள் இருவரும் தற்போது குவைத்தில் வசித்தாலும் கடந்த காலங்களில் நடந்த நிகழ்ச்சிக்கு இட்டு சென்றதற்கு நன்றி என அப்போது பதிவிட்டிருப்பார்.
ஏறக்குறைய 17 வருட காலம் மூரார்பாது ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக பதவி வகித்தவர். மாற்று மத சகொதரர்களோ அல்லது நமது மார்க்க வழி மஹல்லாவாசிகளோ என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக நீண்ட நெடிய காலம் தலைவராக பொறுப்பில் இருந்தவர். இவரது காலத்தில் மூரார்பாது கிராமத்திற்கு கிடைத்த நலத்திட்ட உதவிகள் பல உண்டு..
குறிப்பாக, கழிவு நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைத்தும், சிமெண்ட் சாலை அமைத்ததும் இவரது காலத்தில்தான் இடையிடையே உடல் நிலை சோர்வு மற்றும் வயோதிகம் காரணமாக தன் மகன் ஜனாப்.அபுபக்கர் அவர்களுடன் சிறிது காலம் சவுதி அரேபியாவில் வாழ்ந்தார். சகல வசதிகள் அவருக்கு கிடைத்தது. இருப்பினும் , ஊரில் மக்களுடன் வாழ வேண்டும் என்கிற பேராவலில் மீண்டும் மூரார்பாது மஹல்லா வாழ்க்கைக்கு திரும்பியவர் ஜனாப்.L.U.,ஷபியுல்லா அவர்கள்.
தன் ஊர் மக்களுக்கு நல்ல மற்றும் மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்கிற தன் ஆசை தன் மகன் அமைத்த S A மருத்துவமனை மூலம் நிறைவேறியதாக அவருக்கு மிக நெருக்கமானோருடன் சொல்வதுண்டு. அவரை தெரிந்தவர்கள் அவர் மூலம் மருத்துவ கட்டணத்தில் தள்ளுபடி பெற்றதும் சமீபகால வரலாறு ஆகும்.
குனாதிசயங்கள்
பழகுவதற்கு மிக எளிமையானவர். அவர் அதிகமதிகம் உபயோகிக்கும் வார்த்தை எனில்
பாரேன் என்றோ அல்லது ஆச்சரிய நெடிலாக பார்ற்ற்றா.. என்றோ இருக்கும்.
உதவி என கேட்டு வந்து நிற்போரை அவர் வெறுமனே அனுப்பியதில்லை என்கிறார்கள். தன்னால் இயன்ற உதவிகளை செய்வார். ஊர் தலைவராக பெரும் பொறுப்பில் நீண்ட நெடிய காலம் பதவி மற்றும் பொறுப்பினை வகித்திருந்தாலும் ஜமாத்தில் அவர் எந்த நேரடி பொறுப்புகளையும் ஏற்றதில்லை எனவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஜமாத்தின் சில முக்கிய கொள்கை முடிவுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் பங்கெடுக்க அவர் தவறுவதில்லை.
சில முடிவுகள் ஒர் தரப்புக்கு பாதகம் எனில் முடிவுகளை உடனே அறிவிக்காமல் காலம் தாழ்த்தி அதன் வெப்பம் தனிய காத்திருப்பார்.அதே நேரம் நல்ல விசயம் எனில் உடனே ஒப்புதல் வழங்கிடுவார்.
காலம் : 2016 ஒரு அஸர் நேரத்தில் ஜமாத்தார்களிடம் மூரார்பாது – My Home என்கிற அமைப்பை துவங்க இருப்பதாகவும் அதன் பணிகள் எவ்வாறு இருக்கும் என விளக்கினோம்.
மிக வெளிப்படையான கணக்கு தருவதாக சொல்கிறீங்க.. நம்ம ஊர் பசங்க நம்ம ஊர் மக்கள்.. இன்ஷா அல்லாஹ், செய்யுங்க.. என ஆசிர்வதித்து ஜமாத்திடமும் உடனே ஒப்புதல் தர கேட்டுக்கொண்டார்.
ஜமாத்தார்களும் இன்ஷா அல்லாஹ், செய்யுங்கள் என ஒப்புதல் அளித்தார்கள்.
இப்படி நல்ல விசயங்களில் வேகம் காட்டுவதும், ஒரு விசயம் ஒரு தரப்புக்கு அல்லது ஊர் நலனுக்கு பாதகம் எனில், “சரி, இப்ப என்ன அவசரம்.. எதுவும் பேசக்கூடாது, பிறகு பாத்துக்கலாம்.. என அதை காக்க வைப்பதும் அவரது இயல்பு என்கிறார்கள்.
மூரார்பாதில் S A மருத்துவமனை
அவரது மகனார் ஜனாப்.அபுபக்கர் ஷபியுல்லா
மூரார்பாதில் S A மருத்துவமனை
துவங்கியதில் அவருக்கு அவ்லளவு சந்தோசம் எனலாம். கட்டுரையாளரான நான் அப்துல் ரஷித் ஹபிபுல்லாஹ் S A மருத்துவமனைக்கு இரண்டு வாரம் ஒரு முறை நிர்வாக மற்றும் பணியாளர்கள் தேவை நிமிர்த்தம் அப்போது செல்வதுண்டு. ஊர்காரர்கள் என்றில்லாமல் வெளியூர்காரர்கள் சிகிச்சைக்காக வந்து பணம் கட்ட சற்றே தவிக்கையில் ஆலோசனை கட்டணத்தில் முழுவதுமாகவோ அல்லது உள் நோயாளிகள் கட்டணத்தில் பெரும் சதவிகிதமோ நம் பேச்சைக்கூட கேளாமல் ஊடே புகுந்து மர்ஹூம் ஷபியுல்லா அவர்கள் தள்ளுபடி செய்துவிடுவார்.
“அட.. ஏம்ப்பா இப்படி பன்றீங்க..” என்றால்
“அட.. வுடுறா அவங்ககிட்ட அவ்வளவு பணம் இல்ல.. போகட்டும் வுடு..” என நம்மை சரி கட்டுவார்.
“ம்ம்ம்ஹூம்… இது சரிபடாது..” என அபுபக்கர் அம்மா மொஹ்தர்மா மொய்தீன் பீ அவர்களிடம் நாம் ஷபியுல்லா அவர்லளின் குறுக்கீடு குறித்து புகார் வாசித்து வைப்போம்.
“அட.. பாரேன், அப்புறம் அங்க போய் சொல்றே நீ..” என சிரித்துக்கொள்வார்.
மர்ஹூம் ஷபியுல்லாஹ் அவர்களுடன் அவரது மனைவியார் நிறைய நேரங்களில் செல்ல சண்டையிடுவார்..
“ஆமாம், நீங்க சொல்றதுதான் பேச்சு.. ஊரு ஊருன்னு இருங்க.. நம்ம பிள்ளைங்களையும் கொஞ்சம் பாருங்க..” என்றோ
“தலைவரேன்னு ஒருத்தன் வந்து நின்னுடக்கூடாது. தோ வரேன்னு கிளம்பிட வேண்டியது..” என்றோ
“ஆஸ்பத்திரி நீக்கு போக்கு உங்களுக்கு என்ன தெரியும்.. ஏ.. பாத்துக்கலாம் போ போன்னு பணம் வாங்காம அனுப்பியுட்டா, இங்க வேலை செய்யுறவங்களுக்கு சம்பளம் எப்படிதான் கொடுக்குறது..” என்றோ அவரிடம் கோபித்துக் கொள்வார்.
மொஹ்தர்மா மொய்தீன் பீ அம்மா அவர்களுக்கு ஷபியுல்லா பாயே உலகம் எனலாம். அவரின் மருத்துவ மற்றும் உணவு தேவைகளை அவ்வளவு கவனமுடன் கவனித்திக்கொள்வார்.
ஒரு நாள் நான் S A மருத்துவமனையில் ஒரு மதிய நேரம் நான் அவருடன் இருந்த நேரம் மொஹ்தர்மா மொய்தீன் பீ அம்மா அவர்கள் ஷபியுல்லா பாய் அவர்களை சாப்பிட அழைத்தார்..
“தோ வரேன்..” எனறவர் செல்லாமல் மருத்துவமனையில் இருந்தார்.
மீண்டும் அடுத்த 10 நிமிடத்தில் மொஹ்தர்மா மொய்தீன் பீ அம்மா அவர்களிடமிருந்து அழைப்பு..
“தோ வரேன்.. பேசிக்கிட்டு இருக்கேன், தோ வரேன்” என பதிலளித்துவிட்டு மருத்துவமனையில் என்னுடன் பேசிக்கொண்டே இருந்தார்.
“பாய்.. கூப்பிடுறாங்கல்ல.. போய்ட்டு வாங்க..” என அவரை கழட்டிவிடப்பார்த்தேன்..
ம்ம்ம்ஹூம், அவர் கொஞ்சம்கூட நகர்வதாக இல்லை..
மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த 10 நிமிடங்களில் மொஹ்தர்மா மொய்தீன் பீ அம்மா அவர்களிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
இவரும் அசராமல் தோ வரேன்.. இந்தா கிளம்பிட்டேன், தோ வரேன்.. என பதில் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அதற்கடுத்த 10 நிமிடத்தில் மருத்துவமனைக்கு நேரிலேயே வந்த மொஹ்தர்மா மொய்தீன் பீ அம்மா என்னை பார்த்துவிட்டு.. “நீயும் இங்கதான் இருக்கியாபா.. வா சாப்பிடலாம்..” என என்னையும் அழைக்க, நான் சற்றே வேலை இருப்பதாகவும், இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம் என்றேன். “ஏ வாயேன்னா..” என என் கையை பிடித்து மதிய உணவுக்கு வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அந்த நாள் 19-08-2020 சனிக்கிழமை ஒரு தகவல் வந்தது.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
மூரார்பாது கிராமம் ஜனாப்.S.அபுபக்கர் அவர்களின் தந்தையும், Mrs.மொய்தீன் பீ அவர்களின் கணவருமான
ஊர் தலைவர் ஜனாப்.L.U.ஷபியுல்லா
அவர்கள் இன்று 19-08-2020 சனிக்கிழமை சங்கராபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தின் காரணமாக
வஃபாத் ஆகிவிட்டார்கள் என்பது ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது..
மர்ஹூம். ஜனாப். L.U.ஷபியுல்லா அவர்களின் மய்யத் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அவரது மூரார்பாது இல்லத்திறகு கொண்டு வரப்படும் எனவும், இன்ஷா அல்லாஹ், நாளை 21-09-2020 திங்கள் கிழமை அன்று பஃஜர் தொழுகைக்கு பின்னர் ஜனாஸா தொழுகையுடன் நல்லடக்கம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவும் தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.
ஒரு நல்ல தலைவனின் மறைவு ஊருக்கான அஸ்தமனம் ஆகக்கூட ஆகிவிடும்.
அப்போது புரியவில்லை.. ஆனால் வருடங்கள் பல கடந்தபின் இப்போது அப்படிதானோ என புரிகிறது.
ஊருக்காக ஓடியவருக்கு மத மாச்சரியங்கள் துறந்து அனைத்து தரப்பு மக்களும் பெருவாரியாக ஓடிவந்து கலந்து கொண்டு மர்ஹூம் ஷபியுல்லா உமர் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
அல்லாஹ், அவரது நன்மைகளை ஏற்று, பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனம் அளிப்பானாக..
ஆமின்..
மூரார்பாது – My Screen
Admin & Team













Leave a reply